1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : திங்கள், 20 ஜனவரி 2020 (11:44 IST)

இளவரசர் ஹாரி: "அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகுவதை தவிர வேறு வழியில்லை"

அரச குடும்ப மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து பேசிய இளவரசர் ஹாரி அதைதவிர "வேறு எந்த வழியும் இல்லை" என தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சமீபத்தில் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் மெர்கல் அறிவித்திருந்தனர்.
 
இந்த அறிவிப்புக்கு பிறகு முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் பேசிய ஹாரி, தனது கடமைகளிலிருந்து தான் விலகி செல்லவில்லை என்று தெரிவித்தார்.
 
மத்திய லண்டனில் நடைபெற்ற, தென் ஆப்ரிக்காவில் எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனத்திற்காக நிதி சேகரிக்கும் நிகழ்ச்சியில் பேசிய ஹாரி, "நீங்கள் இதுவரை எங்கோ கேட்டோ அல்லது படித்தோதான் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டிருப்பீர்கள்; இப்போது உண்மையை நான் கூற நிங்கள் கேட்க விரும்புகிறேன். இதை நான் இளவரசராக அல்ல ஹாரியாக சொல்ல விரும்புகிறேன்," என தனது உரையை தொடங்கினார்.
 
மேலும், ராணி இரண்டாம் எலிசெபத்தின் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவரின் ஆணைக்கு எப்போதும் கட்டுப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
ராணிக்கும், காமன்வெல்த், மற்றும் தனது ராணுவ தொடர்புகளுக்கும் பொது நிதியத்தை பயன்படுத்தாமல் சேவை செய்ய விரும்பியதாகவும், ஆனால் அது சாத்தியமாகவில்லை என்றும் ஹாரி தெரிவித்துள்ளார்.
 
"நான் அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எனது கடமைகளில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறேன் என்பதை அது மாற்றப்போவதில்லை," என அவர் தெரிவித்துள்ளார்.
"அரச குடும்பத்து பொறுபிலிருந்து விலகுவதாக நான் எடுத்த முடிவு சாதரணமாக எடுக்கப்பட்டது இல்லை. பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் பல வருட போராட்டங்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு இது. நான் எடுத்த முடிவுகள் எப்போதும் சரியானது என்று நான் கூறவில்லை ஆனால் இந்த விஷயத்தில் வேறு வழியில்லை," என்று ஹாரி தெரிவித்தார்.
 
பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியிருக்க இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் வெளியிட்டிருந்த அறிவிப்பை அந்நாட்டின் ராணி இரண்டாம் எலிசெபத் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இந்த மாற்றத்திற்கு தாம் முழுமையான ஆதரவை அளிப்பதாக தெரிவித்திருந்த அவர், அரச குடும்பத்தின் முழு நேர உறுப்பினர்களாக அவர்கள் இருக்கவே தாம் விரும்பியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிம்ஹாம் அரண்மனை நேற்று அறிவித்திருந்தது.