1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (23:55 IST)

சீனாவை குற்றம்சாட்டும் வல்லரசுகள்: அரசுகள், தனியார் நிறுவனங்களை இலக்கு வைக்கும் சைபர் தாக்குதல்

உலக அளவில் 25 லட்சம் மைக்ரோசாஃப்ட் எக்சேஞ்ச் சர்வர்கள் இலக்கு வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இந்த ஆண்டு தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல்களை சீனா நடத்தியிருப்பதாக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை குற்றம்சாட்டியிருக்கின்றன.
 
மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் சர்வர்கள் இலக்கு வைக்கப்பட்டதன் மூலம் குறைந்தபட்சம் 30 ஆயிரம் நிறுவனங்கள் உலக அளவில் இந்த சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
இது குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன், சீன அரசு ஆதரவுடன் செயல்பட்ட நபர்களே இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் என கூறியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியமோ, சீன பிராந்தியத்தில் இருந்தே இந்த தாக்குதல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியிருக்கிறது.
 
விரிவான உளவு செயல்பாடு மற்றும் பொறுப்பற்ற நடத்தையின் விரிவான வடிவமாக சீன உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் விளங்குவதாகவும் இந்த நாடுகள் கூறியுள்ளன.
 
அனைத்து வித சைபர் தாக்குதல் விவகாரத்தில் தங்களுடைய நாடு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்கெனவே சீனா நிராகரித்திருந்தது.
 
பெகாசஸ் ஸ்பைவேர் என்றால் என்ன? வேவு பார்க்க இது பயன்படுத்தப்படுவது ஏன்?
ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடியில் பணத்தை இழக்கும் மக்கள்: எச்சரிக்கும் வல்லுநர்கள்
எனினும், சீனாவில் இருந்தே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளதாக முக்கிய வல்லரசு நாடுகள் கூட்டாக குற்றம்சுமத்தியிருப்பதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தாக்குதல்கள், இதற்கு முன்பு தாங்கள் கண்டிராதவை என மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகளின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் சர்வர்களை இலக்கு வைத்த ஹேக்கர்கள், அந்த மென்பொருளை பின்வாசல் வழியாக அணுகுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக பிரிட்டன் கூறுகிறது.
 
இதை பார்க்கும்போது இது மிகப்பெரிய அளவில் நடந்த உளவு பார்த்தல் நடவடிக்கை என்றும் தனி நபர் தகவல் திருட்டு முதல் அறிவுசார் சொத்துகள் தொடர்பான தகவலை திருடுவதுவரை ஹேக்கர்கள் கைவரிசை காட்டியிருக்கிறார்கள் என்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
 
மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் சர்வர்களுக்குள் நுழைய சீன குழுக்கள் பயன்படுத்திய ஊடுருவல் முயற்சியை மேலும் சில ஹேக்கர்கள் குழுவும் அணுகியதாகவும், அவர்கள் வெளிநாட்டு கணிப்பொறிகளுக்குள் நுழைந்து தகவல் திருட்டுக்கு அவற்றை எளிதாக்கியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளதாக பிரிட்டன் தேசிய சைபர் பாதுகாப்பு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
பிரிட்டனில் இதுபோல பாதிக்கப்பட்ட 70 நிறுவனங்களுக்கு பிரத்யேக அறிவுறுத்தல்களை அந்த மையம் வழங்கியிருக்கிறது.
 
"பொறுப்பற்ற நடத்தையாக கருதப்படும் இந்த ஊடுருவல், ஏற்கெனவே தங்களுக்கு பரீட்சயமான வடிவத்தில் நடந்துள்ளது," என்று பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
 
"சீன அரசாங்கம் இதுபோன்ற முறைசார்ந்த சைபர் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதில் தங்களுக்கு தொடர்பு இல்லையென்றால், தொடர்பு இருப்பவர்களை பொறுப்புடைமையாக்க வேண்டும்," என்றும் டோமினிக் ராப் வலியுறுத்தினார்.
 
சீன உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், இதுபோன்ற ஹேக்கர்கள் குழுவுடனான தமது உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று அமெரி்க்காவும் கூறியிருக்கிறது.
 
மைக்ரோசாஃப்ட்
 
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒப்பந்த ஹேக்கர்களை பணியமர்த்தி அவர்கள் மூலம் அங்கீகரிக்கப்படாத உலகளாவிய சைபர் தாக்குதல்களில் ஈடுபட ஒரு உளவு நிறுவனத்தை சீனா தமது தனிப்பட்ட நலனுக்காக அமைத்திருப்பதாக வெளிவரும் தகவல் ஆழ்ந்த கவலையைத் தருகிறது," என்று கூறப்பட்டுள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றியம், "இதுபோன்ற ஹேக்கர்களின் செயல்பாடு, பாதுகாப்பு ஆபத்துக்கு வழிவகுத்துள்ளது. இது அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களுக்கு பொருளாதார ரீதியாக கடும் இழப்பை ஏற்படுத்தும்," என்று கூறியுள்ளது.
 
பிரிட்டன் வரிசையில் சீனாவின் செயல்பாட்டை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், APT 40 மற்றும் APT 31 போன்ற இரு ஹேக்கர்கள் குழுக்களுக்கும் சீன உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.
 
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகியவை தங்களுடைய கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்திய அதே சமயம், சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி விளக்கவில்லை.
 
மைக்ரோசாஃப்ட்
 
இதேவேளை, சீனாவை தொடர்புபடுத்தும் மைக்ரோசாஃப்ட் சர்வர்கள் விவகாரத்தை விட குறைவான பாதிப்பைக் கொண்ட டெக்சாஸைச் சேர்ந்த சோலார் விண்ட்ஸ் என்ற நிறுவன ஹேக்கிங் சம்பவத்துடன் தொடர்புடைய ரஷ்யா மீது இந்த நாடுகள் புதிய தடைகளை விதித்துள்ளன.
 
தங்களுடைய எக்ஸ்சேஞ்ச் சர்வர்கள் இலக்கு வைக்கப்பட்ட தகவலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த மார்ச் மாதமே அறிவித்திருந்தது. சீனாவுடன் தொடர்புடைய ஹஃப்னியம் என்ற குழுவே அதற்கு பொறுப்பு என்றும் அந்த நிறுவனம் கூறியது. ஆனால், அந்த குற்றச்சாட்டை சீனா அப்போது மறுத்திருந்தது.
 
உலக அளவில் பிரபலமான கணினிப்பயன்பாடு மென்பொருளாக அறியப்படும் மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் சர்வர்கள் இலக்கு வைக்கப்பட்ட தகவலை உலகின் மூன்று முக்கிய வல்லரசுகள் உறுதிப்படுத்தியிருப்பது, பல முக்கிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே கருதப்படுகிறது.
 
சுமார் 12 வெளிநாடுகளின் அரசுகளை இலக்கு வைக்கும் தகவல் திருட்டில் ஈடுபட்டதாக சீன பாதுகாப்பு அமைச்சகத்துடன் தொடர்புடைய நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது சீனா மீது மூன்று வல்லரசு நாடுகள் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு, தகவல் தொழில்நுட்ப உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 
YouTube பதிவை கடந்து செல்ல, 1