வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 15 செப்டம்பர் 2021 (10:07 IST)

தாலிபன்களுக்கு இடையே பதவிச் சண்டை? கடும் வாக்குவாதத்தால் அதிபர் மாளிகையில் குழப்பம்!

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை கட்டியெழுப்புவது தொடர்பாக தாலிபன் தலைவர்களுக்கு இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்திருப்பதாக மூத்த தாலிபன் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
 
தாலிபயன் இயக்கத்தின் இணை நிறுவனரும் மூத்த தலைவருமான முல்லா அப்துல் கனீ பராதருக்கும் தாலிபன் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
 
அப்துல் கனீ பராதர் கடந்த சில நாள்களாக பொதுவெளிக்கு வராத நிலையில், தாலிபன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் தாலிபன்கள் இதை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளனர்.
 
தலிபான்கள் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அந்த நாட்டை "இஸ்லாமிய எமிரேட்" என்று அறிவித்தனர். அவர்களின் புதிய இடைக்கால அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
 
முற்றிலும் ஆண்கள் மட்டுமே இருக்கும் அமைச்சரவையில் தாலிபன்களின் மூத்த தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. அவர்களில் கடந்த இரு தசாப்தங்களாக அமெரிக்கப் படைகள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தியவர்களும் அடங்குவார்கள்.
 
பராதரும் ஹக்கானி குழுவைச் சேர்ந்த அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சரான கலீல் உர்-ரஹ்மானும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி வாக்குவாதம் செய்ததாகவும், அப்போது அவர்களது ஆதரவாளர்கள் அருகே இருந்ததாகவும் தலிபானைச் சேர்ந்த ஒருவர் பிபிசி பாஷ்தோவிடம் தெரிவித்தார்.
 
கத்தாரில் இருக்கும் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரும், அவர்களுடன் தொடர்புடைய ஒருவரும் இப்படியொரு வாக்குவாதம் கடந்த வார இறுதியில் நடந்ததாக உறுதி செய்துள்ளனர்.
 
புதிய அரசில் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் பராதருக்கு, இடைக்கால அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டதே வாக்குவாதத்துக்குக் காரணம் என்று தாலிபன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஆப்கானிஸ்தானில் பெற்ற வெற்றிக்கு யார் காரணம் என்பதில் தொடங்கி பிளவுகள் விரிவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 
தன்னைப் போன்று ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பராதர் விரும்புகிறார். ஆனால் தாலிபன்களின் மூத்த தலைவர்களால் இயக்கப்படும் ஹக்கானி குழுவினர் இதை ஏற்கவில்லை. சண்டைகள் மூலமாகவே வெற்றி சாத்தியமானது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
 
2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய முதல் தாலிபன் தலைவர் பராதர். முன்னதாக அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான உடன்பாட்டில் தாலிபன்கள் சார்பாக அவரே கையெழுத்திட்டார்.
 
ஹக்கானி குழு கொடூரமான சண்டைகளுக்குப் பெயர் பெற்றது. சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் மற்றும் அவர்களின் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களை இவர்களே நடத்தினார்கள். ஹக்கானி இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா வைத்திருக்கிறது.
 
ஹக்கானி குழுவின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி புதிய அரசில் உள்துறை அமைச்சராக உள்ளார்.
 
தாலிபன்களின் முகங்களில் ஒருவரான பரதமர் கடந்த வார இறுதியில் இருந்து பொதுவெளிக்கு வராதது முதலே அரசுக்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் பரவி வருகின்றன. அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் எழுதப்பட்டது.
 
ஆனால், அவர் காபூல் நகரில் இருந்து வெளியேறி காந்தஹார் நகருக்குச் சென்றுவிட்டதாக தாலிபன் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இது தொடர்பாக பராதர் பேசுவது போன்ற ஒலிப்பதிவில், தாம் பயணத்தில் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
 
"இந்த நேரத்தில் நான் எங்கிருந்தாலும், நாங்கள் அனைவரும் நலமாகவே இருக்கிறோம்," என்று அவர் அந்த ஒலிப்பதிவில் கூறினார்.
 
தாலிபன்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்தக் குரல் பதிவை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.
 
தங்களுக்கு இடையே எந்த வாக்குவாதமும் இல்லை என்று தாலிபன்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் பராதரைப் பற்றிய அவர்கள் கூறும் தகவல்கள் முரண்பட்டதாக இருக்கிறது. தாலிபன்களின் உச்ச தலைவரைப் பார்ப்பதற்காக காந்தஹார் நகருக்கு பராதர் சென்றிருப்பதாக தாலிபன்களின் ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். ஆனால் அவரே, பிபிசி பாஷ்தோவுடன் பேசும்போது, "அவர் சோர்வாக இருக்கிறார். அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது" என்று கூறினார்.
 
மோதல் தொடர்பாக தாலிபன்கள் கூறும் கருத்துகளை ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தேகிப்பதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன. 2015-ஆம் ஆண்டு தங்களது நிறுவனரான முல்லா ஒமரின் மரணத்தை இரண்டு ஆண்டுகள் வரை மறைத்து வந்ததாகவும், அவரது பெயரிலேயே அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும் தாலிபன்கள் ஒப்புக் கொண்டனர்.
 
பராதர் காபூலுக்குத் திரும்பி, வாக்குவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று கேமராக்கள் முன் தோன்றிக் கூறுவார் என வேறுசிலர் கூறுகின்றனர்.
 
இதுவரை பொதுவெளிக்கு வராத தாலிபன்களின் அதிதலைவரான ஹெபதுல்லா அகுந்த்ஸதா தொடர்பாகவும் பல ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்தான் தாலிபன்களின் அரசியல், படை மற்றும் மத விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்.