ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் சவுக்கால் அடித்துக் காயப்படுத்தப்பட்ட செய்தியாளர்கள்

BBC
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (14:43 IST)
ஆப்கானிஸ்தானில் போராட்டங்களை படமாக்க முயன்ற செய்தியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுடன் செய்தியாளர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

எடிலாட்ரோஸ் என்ற செய்தித்தாள் நிறுவனத்தின் இரு செய்தியாளர்கள் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்றபோது தாலிபன்களால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் ஒருவரான தகி தர்யாபி பிபிசியிடம் பேசினார். தான் ஒரு மாவட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு தம்மை அவர்கள் அடித்து உதைத்ததாகவும் தெரிவித்தார்.

புதன்கிழமை நடந்த போராட்டங்களின்போது பிபிசி குழுவும் படம் பிடிக்க முயன்றபோது தடுக்கப்பட்டது.

எடிலாட்ரோஸின் புகைப்படக் கலைஞரான நெமத்துல்லா நக்தியுடன், செய்தியாளரான தர்யாபியும் காபூலில் புதன்கிழமை நடைபெற்ற பெண்கள் போராட்டத்தைச் செய்தியாக்கச் சென்றிருந்தார்.

பின்னர், அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களை தாலிபன்கள் தடியாலும் மின்சாரக் கேபிள்களாலும், சவுக்காலும் அடித்ததாகக் கூறுகின்றனர். சில மணி நேரம் கழித்து எந்த விளக்கமும் இல்லாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

"அவர்கள் என்னை வேறு அறைக்கு அழைத்துச் சென்று, என் கைகளை பின்னால் கட்டினர்," என்று அவர் காபூலில் பிபிசியின் செக்குந்தர் கெர்மனிடம் கூறினார்.

"நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் அவர்கள் என்னை இன்னும் மோசமாக அடிப்பார்கள் என்று நினைத்தேன், அதனால் நான் என் உடலின் முன்புறத்தை பாதுகாக்கும் நிலையில் தரையில் படுத்தேன்"

"அவர்களில் எட்டு பேர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர். குச்சிகள், போலீஸ் தடிகள், ரப்பர் என கையில் கிடைத்தவற்றையெல்லாம் பயன்படுத்தி அடித்தனர். என் முகத்தில் ஏற்பட்டிருக்கும் காயம், அவர்கள் என்னை காலணிகளால் உதைத்தபோது ஏற்பட்டது.

"அதன் பிறகு நான் மயக்கத்தில் இருந்தேன் . அதனால் அடிப்பதை நிறுத்தினார்கள். பின்னர் செல்கள் இருந்த மற்றொரு கட்டத்துக்குக் கொண்டு சென்று விட்டார்கள்."

அடித்த பிறகு தாம் சுயநினைவின்றி விழுந்ததாகவும், சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் தர்யாபி கூறினார்.

"என்னால் நடக்க முடியவில்லை, ஆனால் அவர்கள் எங்களை விரைவாக நடக்கச் சொன்னார்கள். எனக்கு மிகவும் வலித்தது."

போராட்டத்தின் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கியவுடன் அங்கிருந்த தாலிபன்கள் கேமராவை எடுத்துச் செல்ல முயன்றதாக நெமத்துல்லா நக்தி கூறினார்.

"தாலிபன் ஒருவர் என் தலையில் கால் வைத்து, கான்கிரீட்டில் என் முகத்தை நசுக்கினார். அவர்கள் என்னை தலையில் உதைத்தனர். என்னைக் கொல்லப் போகிறார்கள் என்று நினைத்தேன்," என ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் நக்தி கூறினார்.

ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, "தலை துண்டிக்கப்படாதது உன் அதிர்ஷ்டம்" என்று தாலிபன்களில் ஒருவர் கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் டோலோ செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் தாலிபன்களால் கைது செய்யப்பட்டு மூன்று மணிநேரம் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது..

கடந்த இரு நாள்களில் குறைந்தது 14 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக சிபிஜே என்று பன்னாட்டு அரசு சாரா அமைப்பு கூறியுள்ளது.

ஊடகங்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்போம் என்ற முந்தைய வாக்குறுதிகள் மதிப்பற்றவை என்று தாலிபன்கள் விரைவாக நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் என்று சிபிஜேயின் ஆசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர் கூறுகிறார்.

"முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தாலிபன்களை வலியுறுத்துகிறோம். செய்தியாளர்கள் வேலை செய்யும் போது அவர்களைத் தடுத்து அடிப்பதை நிறுத்த வேண்டும். ஊடகங்கள் அச்சமில்லாமல் செயல்பட அனுமதிக்க வேண்டும்."

மூன்று வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தாலிபன்கள், நாட்டை ஆள்வதற்காக முற்றிலும் ஆண்களைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதாக அறிவித்தனர்.

அப்போதிருந்து, போராட்டங்களுக்கு நீதித்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறாவிட்டால், அவை சட்ட விரோதமாகக் கருதப்படும் என்று உத்தரவிட்டனர்.இதில் மேலும் படிக்கவும் :