செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 20 ஜூன் 2020 (11:01 IST)

"சீனாவிடம் இந்திய நிலப்பகுதியை மோதி ஒப்படைத்துவிட்டார்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்திய - சீன எல்லை மோதல் தொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறிய கருத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிப்பதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) காணொளி காட்சி வாயிலாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி, இந்திய எல்லையில் யாரும் அத்துமீறி நுழையவும் இல்லை, இந்தியப் பகுதியை யாரும் கைப்பற்றவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, "சீனாவின் ஆக்கிரமிப்புக்கு பயந்து பிரதமர் நரேந்திர மோதி இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார்" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று (சனிக்கிழமை) காலை பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில் இதுதொடர்பாக இரண்டு கேள்விகளையும் எழுப்பியுள்ளார். "அது சீனாவின் நிலப்பகுதி என்றால், நம்முடைய ராணுவ வீர்ர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? எங்கு கொல்லப்பட்டார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், #ModiSurrendersToChina என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் கூறியது என்ன?

இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விவாதிக்கப் பிரதமர் நரேந்திர மோதி நேற்று (ஜூன் 19 ) அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இதன்படி காணொலி காட்சி முறையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை; நமது நிலையையும் கைப்பற்றவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது கூட யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது. நமது நாட்டை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும். ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது" என்று கூறினார்.


"இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்த விவகாரத்தில் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். நமது படை வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜீய ரீதியிலும் இந்தியாவின் நிலைப்பாட்டை சீனாவிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். இந்தியா அமைதி மற்றும் நட்பை விரும்புகிறது. அதேவேளையில், இறையாண்மையை காப்பதற்குத்தான் உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்படும்" என்று அவர் தனது உரையின்போது மேலும் கூறினார்.

ஆனால் இந்த மோதலில் என்ன நடந்தது என்ற முழு விவரத்தையும் அரசு தெரியப்படுத்தவில்லை என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆகும்.

முன்னனதாக, எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதங்களின்றி சென்ற இந்திய படையினரை கொல்ல சீனாவுக்கு எவ்வளவு துணிச்சல் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு ட்விட்டர் வாயிலாகவே பதில் அளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை சாவடிகளை விட்டு செல்லும்போது இந்திய படையினர் எப்போதும் ஆயுதங்களுடனேயே செல்வார்கள் என்றும் சம்பவம் நடந்த 15-ஆம் தேதியும் அவ்வாறே இந்திய வீரர்கள் சென்றதாகவும் கூறியிருந்தார்.

மேலும், நீண்ட கால நடைமுறைப்படி, அதாவது 1996-ஆம் ஆண்டு மற்றும் 2005-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளின்படி, எல்லையில் இரு தரப்பினும் மோதிக்கொள்ள நேர்ந்தால் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மாட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளதையும் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியிருந்தார்.