வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2020 (17:18 IST)

ப.சிதம்பரம் கேட்ட பத்து கேள்விகள்: பதில் அளிப்பாரா பிரதமர் மோடி?

இந்திய சீன விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடிக்கு பத்து கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
 
அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கும் போது கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பிரதமர் திரு மோடி பதில் அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
 
1. சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஏப்ரல் மாதத்தில் ஊடுருவிய போது அதை இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிக்கவில்லையே, ஏன்?
 
2. இந்நிய எல்லையிலும் இந்திய நிலப்பரப்பிலும் சீனா கட்டுமானப் பணிகளைச் செய்ததையும் உளவுத் துறை கண்டுபிடிக்கவில்லையே, ஏன்?
 
3. இந்திய விண்வெளிக்கலங்கள் பூமியை நாள்தோறும் சுற்றி வானிலிருந்து படங்களைத் தொடர்ந்து அனுப்புகின்றனவே, அந்தப் படங்கள் சீன ஊடுருவலைக் காட்டவில்லையா?
 
4.மே மாதம் 5ஆம் தேதி சீன ஊடுருவலை இந்திய ராணுவம் எப்படிக் கண்டுபிடித்தது?
 
5. மே மாதம் 5ஆம் தேதியே பிரதமருக்கு ஊடுருவல் பற்றித் தகவல் தெரிவிக்கப்பட்டதா? நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் நண்பர் சீன அதிபர் திரு ஜீ யைத் தொடர்பு கொண்டீர்களா?
 
6. சீன ஊடுருவல் பற்றி இந்திய மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றவில்லையா? அல்லது தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தீர்களா?
 
7. ஏழு வாரங்கள் தாங்கள் (பிரதமர்) மௌனம் காத்தீர்கள், ஏன்? ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற மௌனம் நியாயமா?
 
8. இருபது ஜவான்கள் மரணம், 85 பேர் காயம், 10 பேர் சிறைபிடிப்பு, இதற்குப் பிறகு தான் தங்கள் மௌனம் கலைந்தது, இது ஜனநாயக முறைக்கு உகந்ததா?
 
9. “கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம்” என்று சீனா அந்தப் பகுதியில் காலூன்றி விட்டதே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
 
10. ஊஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்பொழுது உணர்கிறீர்களா?
 
ப.சிதம்பரம் அவர்கள் கேட்ட மேற்கண்ட 10 கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்