வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (11:37 IST)

காஷ்மீர் குறித்து இரானில் பேசிய இம்ரான் கான்: என்ன சொன்னார் ரூஹானி?

காஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேசியதற்காக இரான் அதிபர் ஹசன் ரூஹானிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேசிய ஹசன் ரூஹானி, காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள் என வலியுறுத்தினார்.
 
நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ஆகஸ்ட் மாதம் நீக்கியது. இதனை அடுத்து அங்குத் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
 
ஒரு நாள் பயணமாக இரான் சென்ற இம்ரான் கான் செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் பிரச்சனை ஏற்படுவதைத் தாம் விரும்பவில்லை என்றும், இரண்டு நாடுகளுக்கும் நல்லிணக்கம் ஏற்படுத்தவே தாம் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.
 
இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனியையும் இம்ரான் சந்தித்தார். இம்ரான் கான் செளதிக்கும் பயணம் செல்ல இருக்கிறார். 
 
இரானுக்கும் சௌதிக்கும் இருப்பது சிக்கலான பிரச்சனை என்பதை நான் அறிவேன். ஆனால், இரு நாடுகளும் போரிடுவதை நாங்கள் விரும்பவில்லை. பேச்சுவார்த்தை மூலமாக இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று கூறினார்.
 
இரான் தலைநகர் தெஹ்ரானில் பத்திரிகையாளர்களைக் கூட்டாக இம்ரான் கானும், ஹசன் ரூஹானியும் சந்தித்தனர்.