1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (15:04 IST)

பத்மநாபசாமி கோயில்: கொரோனா வைரஸால் பறிபோன வருமானம் - பல நூறு கோடி இழப்பு

கொரோனா வைரஸ் பரவல் தொழில்சாலைகளையும், வியாபரங்களையும் மட்டுமல்ல, இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றான கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இக்கோயிலுக்கு பெரும்பாலும் வட இந்தியாவை சேர்ந்த பக்தர்கள் வரும் நிலையில், இப்போது கோயிலின் நிதி நிலைமை மோசமாக உள்ளது என கூறப்படுகிறது.

வழக்கமாக இக்கோயிலுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். அத்துடன் ஒரு லட்ச ரூபாய் உண்டியல் மூலம் கிடைக்கும். ஆனால், இப்போது ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் 10 ரூபாய் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது.

'' கோயிலில் பணியாற்றும் 307 ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க வங்கி வைப்பு நிதியையும், அதன் மூலம் கிடைக்கும் வட்டியை மட்டுமே நம்பியுள்ளோம். கோயிலின் தினசரி செலவுகளை சமாளிக்க எனக்கு கூட 30% சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது'' என்கிறார் பத்மநாபசாமி கோயிலின் நிர்வாக அதிகாரி ரத்தீசன்.

''எங்கள் கோயில்தான் இந்தியாவின் பணக்கார கோயில். இங்கு அதிகமான பக்தர்கள் வட இந்தியாவில் இருந்து வருகின்றனர். முன்பு ஒவ்வொரு நாளும் 5000 முதல் 10,000 பக்தர்கள் வருகிறார். ஆனால், கொரோனாவால் அந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது.'' என்கிறார் அவர்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் ஆறு கோடி ரூபாய் வருமானத்தை இக்கோயில் இழந்துள்ளதாக நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

பணக்கார கோயிலுக்கு நிலைமை என்றால், தென் இந்தியாவின் மிகப்பிரபலமான கோயிலான சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
'' எங்களால் ஊழியர்களுக்கு சம்பளம் கூட அளிக்க முடியவில்லை. இந்த மாதம் ஊழியர்களுக்கு 25% சம்பள குறைப்பு செய்ய உள்ளோம்'' என்கிறார் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தலைவர் வாசு.

திருவிதாங்கூர் தேவஸ்வம் நிர்வகிக்கும் சபரிமலை உட்பட கேரளாவில் 1250 கோயில்களை நிர்வாகம் செய்கிறது. சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இக்கோயில்களில் எந்த வருமானமும் வரவில்லை.

'' ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க ரூபாய் 40 கோடியும், பூஜைகளை செய்ய ரூபாய் 10 கோடி ரூபாயும் தேவைப்படுகிறது. தற்போது இருக்கும் பணத்தை வைத்து, சபரிமலை கோயிலை நிர்வகித்து வருகிறோம்'' என்கிறார் வாசு.

திருவிதாங்கூர் தேவஸ்வம் நிர்வகிக்கும் கோயில்களில் சபரிமலை மட்டுமே 100 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. மற்ற அனைத்து கோயில்கள் மூலம் 100 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

''கடந்த இரண்டு மாதங்களில் 200 கோடி ரூபாய் வருமானத்தை நாங்கள் இழந்துள்ளோம். இன்னும் எத்தனை நாட்களுக்கு சமூக முடக்கம் நீடிக்கும் என்பது தெரியவில்லை'' என்கிறார் அவர்.

கர்நாடகாவின் கடலோர பகுதியில் உள்ள கொல்லூரு மூகாம்பிகை கோயில் மற்றும் குக்கே சுப்ரமண்யசாமி கோயிலுக்கு தென் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

"நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் ஓராண்டு காலமாக எங்களது ஆண்டு வருமானம் 40 கோடி ரூபாய்க்கும் மேல் இருந்தது .மாதச் செலவு 90 லட்சம் ரூபாய் அளவுக்கு இருக்கும். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எங்களது நிரந்தர ஊழியர்களுக்கும் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடிந்தது. அர்ச்சகர்கள் தட்சணை பணத்தை நம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கும் நாங்கள் உதவி செய்து வருகிறோம்," என்று மூகாம்பிகை கோயிலின் அறங்காவலர் டாக்டர் அபிலாஷ் பிபிசியிடம் கூறினார்.

மூகாம்பிகை கோயிலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரம் மட்டுமல்லாது இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி மைத்திரி இந்தியா வரும்போது செல்லும் முதல் சில இடங்களில் மூகாம்பிகை கோயிலும் ஒன்று.

குக்கே சுப்ரமணியசாமி கோயிலும் கடந்த மூன்று மாதங்களில் 22.7 ஒன்பது கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. நாங்கள் சம்பளம் கொடுத்து வருகிறோம். ஆனால் இறப்பு அதிகமானது என்று அந்த கோயில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தென் மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது மகாராஷ்டிராவில் இருந்தும் இந்த கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் ஐஸ்வர்யா ராய், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்களும் இங்கு வரும் பக்தர்களின் அடக்கம்.

"கர்நாடக மாநிலத்தில் அறநிலையச் சட்டத்தின்கீழ் 34,562 கோயில்கள் உள்ளன. அவற்றில் குரூப்-ஏ பிரிவில் 202 கோயில்களும், குரூப்-பி பிரிவில் 139 கோயில்களும் உள்ளன. இந்த இரண்டு வகை கீழ்வரும் கோயில்களில் அர்ச்சகர்கள் எங்களால் சம்பளம் வழங்க முடிகிறது. குரூப் - சி கோயில்களின் அர்ச்சகர்களுக்கு ஆண்டுக்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தேவைப்படும் அர்ச்சகர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்களை நாங்கள் வழங்கி வருகிறோம்," என்கிறார் கர்நாடக மாநில அறநிலையத் துறை ஆணையர் ரோஹினி சிந்தூரி.

கர்நாடக மாநிலங்களில் உள்ள கோயில்களில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட இழப்பு சுமார் 133. 56 கோடி ரூபாயாக உள்ளது.