கொரோனா வைரஸ்: விடுவிக்கப்பட்டும் வீடு செல்ல முடியாத சிறைக்கைதி - காரணம் என்ன?

bbc
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 12 மே 2020 (15:09 IST)

கடந்த மார்ச் 31ம் தேதி அன்று மேற்கு இந்தியாவில் உள்ள சிறையில் இருந்து ஆரிஃப் ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) விடுவிக்கப்பட்டார். சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என ஆரிஃப் முடிவு செய்தார்.


ஆனால் அடுத்த 10 நாட்களில் 2 நகரங்களை ஆரிஃப் கடக்க முயன்றபோது பல முறை தடுத்து நிறுத்தப்பட்டார். வீடற்றவர்கள் தங்கும் முகாமில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் தன் சொந்த வீட்டிற்கு செல்வதற்காக அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றபோது, மீண்டும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு தற்போது அவரின் நண்பர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட நேரத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பல கைதிகளின் நிலைமை இதேபோல குழப்பம் நிறைந்ததாகவும் துயரம் நிறைந்ததாகவும் உள்ளது.

மொபைல் ஃபோன் திருடிய குற்றத்திற்காக 32 வயதான கார் ஓட்டுநர் ஆரிஃப் மகாராஷ்டிராவின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பிணையில் வெளிவர முடியும் ஆனால், 15000 ரூபாய் செலவு செய்து சிறையில் இருந்து அவரை வெளியில் கொண்டுவர அவரது குடும்பத்தினரிடம் போதிய பணம் இல்லை.

மனித உரிமைகள் ஆணையம் அளித்த தரவுகளின்படி இந்தியா முழுவதும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் பரோலிலும் விடுவிக்கப்பட்ட 22,000 கைதிகளில் ஆரிஃப்வும் ஒருவர்.

ஆரிஃப்பிடம் பிபிசியால் நேரடியாக தொடர்ப்பு கொண்டு பேச முடியவில்லை. ஆனால் அவரின் வாழ்க்கையை மேம்படுத்த ஓர் தனியார் தொண்டு நிறுவனம் உதவி செய்கிறது. அவர்களை பிபிசி தொடர்புகொண்டு நாடு முழுவதும் விடுவிக்கப்பட்ட கைதிகள் எவ்வாறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்ற விவரங்களை கேட்டு அறிந்தோம்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற அச்சம் காரணமாக உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மாநிலங்கள் தங்கள் சிறைகளில் உள்ள கைதிகளை எதன் அடிப்படையில் விடுவிக்கலாம் என முடிவுசெய்யலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

bbc

இந்தியாவில் மொத்தம் 1,339 சிறைச்சாலைகள் உள்ளன. இந்த சிறைகளில் 7 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் விடுவிக்கப்படலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் சிறைக்கைதிகளும் விடுக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் ஆரிஃப் விடுதலை ஆனபோது அவரை அழைத்து செல்ல அவர் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.

அரிஃப் அடைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அவர் வீ டு உள்ளது. அவரது தந்தை இறந்துவிட்டார். ஆரிஃப்க்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கடந்த ஆண்டு ஆரிஃப்பின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மாற்றுத்திறனாளியான அவரது சகோதரர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வயது முதிர்ந்து நோயுற்ற அவரது தாயாரை வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் உணவளித்து பார்த்துக்கொள்கின்றனர்.

கையில் பணம் இன்றி பசியுடன் எப்படியோ வீட்டிற்கு சென்ற ஆரிஃப்பை வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் அப்பகுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. கொரோனா பாதிப்பு அதிகம் பரவிய மும்பையில் இருந்து வந்ததால், அவரை எங்கள் பகுதிக்குள் அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர். மும்பையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் விரக்தி அடைந்த ஆரிஃப் ஓர் அலைபேசி மற்றும் 400 ரூபாய் பணத்தை தன் தாயிடம் இருந்து வாங்கிக்கொண்டு அப்பகுதியை விட்டு வெளியேறினார். அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் ஒரு வாகனத்தில் ஏறி சிறையில் தன்னுடன் இருந்த நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.

ஆனால் நண்பர் வீட்டில் இருந்து மீண்டும் ஆரிஃப் தன் வீட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளார். மது அருந்திவிட்டு, தன் தாயை பார்க்க ரிக்ஷா மூலம் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று சேரும் முன்பு ரிக்ஷா ஓட்டுனருடன் சண்டை ஏற்பட்டு, ரிக்ஷா சேதம் அடைந்தது. தற்போது ரிக்ஷாவை பழுது பார்க்க 4000 ரூபாயை அந்த ஓட்டுனருக்கு வழங்க ஆரிஃப்பின் குடும்பத்தார் சிரமப்படுகின்றனர்.

தற்போது மீண்டும் ஆரிஃப் அவரது நண்பர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார், ஆனால் மீண்டும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் என அவருக்கு உதவிசெய்ய முன்வந்த தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் சமூக ஆர்வலர் கூறுகிறார்.

ஊரடங்கு உத்தரவின்போது சிறை கைதிகளை விடுவிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. பல கைதிகளால் வீடு திரும்ப முடியவில்லை. ஆரிஃப் விடுவிக்கப்பட்ட அதே நாள் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணும் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரால் தன் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாததால் முன்பு அறிமுகம் இல்லாத மற்றொரு சிறை கைதி ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளார். மகாராஷ்டிராவின் லாத்தூர் நகரில் 24 சிறை கைதிகளை சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

சிறைக்குள்ளும் பலருக்கு பதற்றம் அதிகரிக்கிறது. சிறைக்கைதிகள் ஒருவரிடம் இருந்து மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பலர் தங்களை விடுவிக்கக்கோரி கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான கலவரத்தால் கொல்கத்தா சிறையில் இருந்த 28 கைதிகள் காயமடைந்துள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

bbc

குறிப்பாக தங்கள் உறவினர்கள் யாரும் வந்து பார்க்க அனுமதிக்கப்படாததால் கைதிகளுக்கு மத்தியில் பதற்றம் அதிகரிக்கிறது. உறவினர்களை காண முடியாததால் ஆறுதல் இன்றி மனதளவில் சிறைக்கைதிகள் பாதிக்கப்படுவதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்றில் பணியாற்றும் மதுரிமா தனுக்கா கூறுகிறார்.

சில தனியார் தொண்டு அமைப்பினர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்ககோரி அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர். பிரயாஸ் என்ற தொண்டு அமைப்பு சிறைக்கைதிகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று சேர்த்துவிட்டு, தேவையான உணவு பொருட்களையும் கொடுத்து உதவுகிறது.

ஏற்கனவே சிறையில் உள்ள கைதிகளை காப்பாற்ற நீதிமன்றம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தற்போது இருக்கும் சூழலில் சிறையை நோய் தொற்று இல்லாத பாதுகாப்பான இடமாக பார்க்க முடியவில்லை. ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்க தவறுபவர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைகின்றனர்.

இதனால் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவிகிதம் தான் குறைந்துள்ளது. எந்த நேரத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு சிறை கைதிகளுக்கு அதிகமாக பரவும் அபாயத்தில் தான் இந்தியா உள்ளது என பிரயாஸ் தொண்டு அமைப்பின் திட்ட இயக்குனர் விஜய் ராகவன் கூறுகிறார்.

உலகம் முழுவதும் சிறைகள் தொற்று பரவ காரணமாக விளங்கும் மையப்பகுதியாக மாறி வருகிறது. இந்தியாவும் இந்த பட்டியலில் தற்போது சேர்ந்துள்ளது. மும்பையின் ஆர்த்தர் சிறையில் உள்ள 2,600 கைதிகளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 சிறைத்துறை அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறை கைதிகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூத்த சிறைத்துறை அதிகாரி தீபக் பாண்டே பிபிசியிடம் தெரிவித்தார்.

அதே சமயம் ஆரிஃப் இன்னும் வீடு திரும்ப முயற்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :