ஜெயலலிதாவை எதிர்த்த பிஎச் பாண்டியன்: இவருக்கு அப்படி என்ன மவுசு?
ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையில் இருந்து நீக்கிய தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன். இவருக்கு 74 வயதாகிறது. அதிமுகவைச் சேர்ந்த இவர் 1985 முதல் 1989 வரை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தார்.
சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பி.எச்.பாண்டியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் கடந்த ஆண்டு காலமானார். சிந்தியா பாண்டியன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தராகவும், தமிழக அரசின் உயர்கல்வி குழு கவுன்சில் துணை தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.
யார் இந்த பி.எச்.பாண்டியன்?
பி.எச்.பாண்டியன், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் செயல்பட்ட அவர், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக செயல்பட்டார். இவரது மகன் மனோஜ் பாண்டியனும் அ.தி.மு.க.வில் தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஜெயலலிதா ஆதரவு எம்.ஏல்.ஏக்களை நீக்கியவர்:
பி.எச்.பாண்டியன் சபாநாயகராக இருந்த போது ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையில் இருந்து நீக்கி இருக்கிறார்.
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-இல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக ஜா அணி (ஜானகி) மற்றும் ஜெ அணி (ஜெயலலிதா) அணியாக பிரிந்து நின்றது. அப்போது யார் முதல்வர் என்ற சர்ச்சையும் அதிமுகவில் வெடித்தது.
அப்போது தமிழக சட்டப் பேரவையில் அதிமுகவுக்கு 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. அவர்களில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர். பேரவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையில் இருந்து நீக்கினார்.
எம்.ஜி.ஆர் காலத்தில் பி.எச்.பாண்டியன் சபாநாயகராக இருந்த போதுதான் ஒரு கார்ட்டூன் விவகாரத்துக்காக ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனை கைது செய்ய தமிழக சட்டப்பேரவை முடிவு செய்தது.
அமைச்சர்களையும், சட்டப்பேரவை அங்கத்தினர்களையும் இழிவுபடுத்தி கார்ட்டூன் வெளியிட்டதன் மூலம் சட்டப்பேரவையின் உரிமையை பாலசுப்பிரமணியன் மீறினார் என குற்றஞ்சாட்டப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.