1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (13:49 IST)

டிக்டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாஃப்ட் தோல்வி; ஆரக்கிள் வெற்றி?

டிக்டாக் செயலியை அமெரிக்காவில் இயக்குவதற்கான உரிமையை வாங்குவதற்கான தங்கள் முன்மொழிவை பைட்டான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதன் மூலம் தரவுத்தள தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் டிக்டாக் செயலியை வாங்குவதற்கு கடைசிநேர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் 10 கோடி பயனாளர்கள் உள்ளனர்.
 
சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பைட்டான்ஸ் நிறுவனம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று காலக்கெடு விதித்து இருந்தார்.
 
இதன்படி அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாட்டை நிறுத்துவது அல்லது டிக்டாக் செயலியை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பதற்கான காலவரையறை செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிகிறது.
 
ஆரக்கிள் போட்டியில் வெற்றி?
மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகிய நிறுவனங்கள் பைட்டான்ஸ் நிறுவனத்திடமிருந்து டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கான போட்டியில் மும்முரமாக இருந்தன.
 
இந்தப் போட்டியில் ஆரக்கிள் வெற்றி பெற்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை மற்றும் அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகியவை செய்தி வெளியிட்டிருந்தன.
 
முன்னதாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் முதலீட்டு நிறுவனங்களுடன் இணைந்து அந்தந்த நாடுகளின் டிக்டாக் உரிமையை வாங்க ஆரக்கிள் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது குறித்தும், ஆரக்கிள் வாங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்தும் பிபிசியிடம் கருத்துத் தெரிவிக்க டிக்டாக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மறுப்புத் தெரிவித்துவிட்டார்.
 
டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாட்டு உரிமைகளை எங்களிடம் விற்க பைட்டான்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. எங்களுடைய முன்மொழிவு டிக்டாக் பயனாளிகளுக்கு நல்லதாகவும், அமெரிக்காவின் தேசிய நலன்களை பாதுகாக்கும் வகையிலும் இருந்திருக்கும் என்று ஞாயிறன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது.
 
டிரம்ப் ஆதரவாளர்
டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்குவதற்கு ஆரக்கிள் மிகச் சிறந்த நிறுவனம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர் லேரி எல்லிசன் அதிபரின் வெளிப்படையான ஆதரவாளர் ஆவார்.
டிரம்பின் தேர்தல் செலவுகளுக்காக நிதி திரட்டும் கூட்டம் ஒன்றையும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் நடத்தியிருந்தார்.
 
சீனாவின் எதிர்வினை
இரண்டு வாரங்களுக்கு முன்பு தொழில்நுட்ப ஏற்றுமதிகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து சீன அரசு உத்தரவிட்டது. டிக்டாக் செயலி விற்பனையை தாமதப்படுத்துவதற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.
 
இந்தப் புதிய உத்தரவின்படி செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீன அரசின் ஒப்புதல் தேவை. உயர் மதிப்புடைய தொழில்நுட்பங்களை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யவும் பரிமாறவும் முடியாத வகையில் சீன அரசின் புதிய விதிகள் இருப்பதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.