வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (14:51 IST)

ஆன்லைன் வகுப்பு: 27% சிபிஎஸ்இ மாணவர்களிடம் திறன்பேசி வசதி இல்லை

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்து தமிழ் திசை: "ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க 27% சிபிஎஸ்இ மாணவர்களிடம் திறன்பேசி வசதி இல்லை"

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க 27% சிபிஎஸ்இ மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் வசதி இல்லை என்று தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"கேந்திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் என 34 ஆயிரம் பேரிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க 27 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்கள் இல்லை. அத்துடன், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் போது மின்தடை பெரிய சிக்கலாக உள்ளது என்று 28 சதவீத மாணவர்கள், பெற்றோர் கூறுகின்றனர். தவிர ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற தொழில்நுட்பக் கருவிகளை கல்விக்காக எப்படி பயன்படுத்துவது என்று பலருக்கு தெரியவில்லை. இதனால் கல்வி கற்பது சிக்கலாக உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், தங்களிடம் என்ன புத்தகங்கள் இருக்கின்றனவோ அவற்றை வைத்து கல்வி கற்பதாக 36 சதவீத மாணவர்கள் கூறியுள்ளனர். கல்விக்காக தொலைக்காட்சி, வானொலிகளைப் பயன்படுத்துவோர் மிகவும் குறைவாக உள்ளனர். ஆன்லைனில் கணித பாடம் கடினமாக உள்ளது என்று பலர் கூறியுள்ளனர் " என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தினத்தந்தி: "செப்டம்பர் 1 முதல் விமான பயணிகளுக்கான கட்டணம் உயர்வு

"செப்டம்பர் 1 முதல் உள்நாட்டு, சர்வதேச விமான பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கு விதிக்கப்படும் விமான பயண கட்டணத்தை (ஏ.எஸ்.எஃப்) அடுத்த மாதம் முதல் உயர்த்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (எம்.சி.ஏ) திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு பயணிகளிடமிருந்து ஏ.எஸ்.எஃப் தற்போது ரூ.150 ல் இருந்து ரூ. 160 ஆக உயர்த்தப்படும், சர்வதேச விமானப் பயணிகளுக்கு இது தற்போது 4.85 டாலரில் இருந்து 5.2 டாலராக உயர்த்தப்படும்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச டிக்கெட்டுகளில் அதிகரித்த ஏ.எஸ்.எஃப் அடுத்த மாதம் முதல் செப்டம்பர் 1 முதல் செயல்படுத்தப்படும் என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

ஏ.எஸ்.எஃப் கட்டணம் விமான நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டு பின்னர் அது அரசாங்கத்திற்கு வழங்கப்படுகிறது. ஏ.எஸ்.எஃப் கட்டணத்திலிருந்து கிடைக்கும் வருமானம் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களின் பாதுகாப்புக்கு நிதியளிக்க பயன்படுத்தப்படுகிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "தூய்மை நகரங்களின் பட்டியல்: 4-ஆவது ஆண்டாக முதலிடத்தில் இந்தூர்"


இந்தியாவின் தூய்மை நகரங்களுக்கான பட்டியலில், தொடர்ந்து 4-ஆவது முறையாக, மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் முதலிடம் பிடித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிரத்தின் நவி மும்பை நகரம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூர் முதலிடத்தையும், சூரத், நவி மும்பை முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில், தமிழகத்திலுள்ள கோவை 40-வது இடத்தையும், மதுரை 42- வது இடத்தையும், சென்னை 45-வது இடத்தையும் பிடித்துள்ளது.

100-க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில், சத்தீஸ்கர் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மகாராஷ்டிரமும், மூன்றாவது இடத்தை மத்திய பிரதேசமும் பிடித்துள்ளன" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.