திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (12:43 IST)

5 தொகுதிகளில் நிர்வாணமாக சென்று மனுத்தாக்கல்: அய்யாக்கண்ணு திட்டம்

இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து அளிக்கிறோம்.

நிர்வாணமாக சென்று பாஜக போட்டியிடும் தொகுதிகளில் மனுத்தாக்கல்


தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 5 தொகுதிகளில் நிர்வாணமாக சென்று மனுத்தாக்கல் செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறியிருக்கிறார் விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு.
இது தொடர்பாக தினகரன் நாளிதழில் வெளியான செய்தி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி யில் நேற்றுஅளித்த பேட்டி: கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாக நாங்கள் அறிவித்தோம். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்களை அழைத்து பேசினார். அப்போது, 'விளை பொருட்களுக்கு 2 மடங்கு விலை தர வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பை திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு 3முதல் 5 லட்சம் வட்டியில்லா கடன் 5 ஆண்டு காலத்துக்கு வழங்க வேண்டும். இளைஞர்களை ஆண்மை இழக்க செய்யும், பெண்களை கருத்தரிக்காமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்யக்கூடாது' என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசு செவி சாக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அரவக்குறிச்சி, திருவையாறு, தளி, திருவண்ணாமலை, திட்டக்குடி என பாஜக போட்டியிடும் ஆகிய 5 தொகுதிகளில் எங்கள் சங்கம் சார்பில் போட்டியிட உள்ளோம். விவசாயிகளின் இன்றைய நிலையை உணர்த்தும் வகையில் நிர்வாண கோலத்தில் சென்று இந்த தொகுதிகளில் எங்கள்சங்க நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்று அவர் கூறினார்.

ஆங்கிலம், இந்தியில் சுயேச்சை சின்னங்கள்: தடுமாறும் வேட்பாளர்கள்

சுயேச்சை வேட்பாளர்களுக்கு, புதிய சின்னங்கள் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன இதனால் படிப்பறிவில்லாத வேட்பாளர்கள் சின்னங்களைத் தேர்ந்தெடுக்க சிரமப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமலர் நாளிதழ்.

அந்த செய்தி:

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 6ல் நடக்கிறது. அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளை தவிர, மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கு, இந்திய தேர்தல் கமிஷன் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. சின்னங்களின் பெயர்கள் ஆங்கிலம், ஹிந்தியில் இடம் பெற்றுள்ளன. இவை, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலக அறிவிப்பு பலகையில், சுயேச்சை வேட்பாளர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதில், ஆப்பிள், ஏர் கண்டிஷனர், அலமாரி, பலுான், பேங்கிள்ஸ், பேட், பேட்ஸ்மேன், பெல்ட், பெஞ்ச், பிரட், பாக்ஸ், பக்கெட், கேக், பிஸ்கட், பிளாக்போர்டு உள்ளிட்ட சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில், மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான பேட்டரி டார்ச், நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி, அ.ம.மு.க.,வின் பிரஷர் குக்கர் ஆகியவை, சுயேச்சை சின்னங்களாக இடம் பெற்றுள்ளன. இம்முறை சின்னங்களின் பெயர்கள், ஆங்கிலம், ஹிந்தி மொழியில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளதால், பல சுயேச்சைகள், சின்னங்களின் பெயர்களை படித்து பார்க்க, தடுமாறுகின்றனர். பொம்மையை பார்த்து, சின்னத்தை தேர்வு செய்ய வேண்டிய நிலை இருந்தது என்கிறது அச்செய்தி.

ஜம்மு காஷ்மீரில் ஒரு வெளியாள் கூட சொத்து வாங்கவில்லை: அரசு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமை ரத்து செய்யப்பட்டு, அது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை ஜம்மு காஷ்மீரில் ஒரு வெளியாள் கூட சொத்து வாங்கவில்லை என்று அரசு தெரிவித்துள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீரில் சிறப்புரிமை ரத்து செய்யப்பட்டால், எல்லோரும் அங்கே சொத்து வாங்கலாம் என்று அப்போது பாஜக ஆதரவாளர்கள் கூறிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தி ஹிந்துவில் வெளியான செய்தி:

நாடாளுமன்றக் குழு ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தகவலில், சிறப்புரிமை ரத்து செய்யப்பட்ட பிறகு 22 ஆயிரம் அரசு வேலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை ஆள் எடுக்கவில்லை என்றும், வெளியாள் ஒருவர்கூட ஜம்மு காஷ்மீரில் இதுவரை சொத்து வாங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஜூன் முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியில் உள்ள ஜம்மு காஷ்மீர் 2019 ஆகஸ்ட் 6ம் தேதி சிறப்புரிமைகள் நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது. அப்போது 50 ஆயிரம் அரசுப் பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட வேறொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, சிறப்புரிமை நீக்கப்பட்ட பிறகு அங்கிருந்து புலம் பெயர்ந்த 520 பேர் காஷ்மீர் திரும்பினர் என்று கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.