செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : சனி, 15 ஏப்ரல் 2023 (22:15 IST)

ஹைதராபாத் நிஜாமின் மோகம்: ரூ.4,000 கோடி மதிப்பு சொத்தை விரயம் செய்த பிறகும் நீங்காத 'ஆசை'

hydrabath nizam
1980களில் ஹைதராபாத் எட்டாவது நிஜாம் முகரம் ஜாவிடம் ஸ்விஸ் ஜோதிடர் ஒருவர், "உனக்கு 86 வயதுக்கு முன் இறக்க மாட்டாய்" என்று கூறினார்.
 
பல ஆண்டுகளுக்கு முன்பு, முகரம் ஜாவை அறிந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜான் சுப்ரிஸ்கி, துருக்கியின் அனடோலியாவில் அவரைச் சந்தித்தபோது, அவருக்கு 71 வயது. நீரிழிவு நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டு சிகரெட் புகைத்தார்.
 
அவர் நம்பிக்கையுடன் ஜான் ஜூப்ரிஸ்கியிடம், "என் தாத்தா, மிர் ஒஸ்மான் அலி கான், ஒரு நாளைக்கு 11 கிராம் ஓபியம் எடுத்துக் கொண்டு 80 ஆண்டுகள் வாழ்ந்தபோது, தீவிரமாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்ததைத் தவிர, நான் அவரைவிட அதிகமாகவே வாழ்வேன்," என்று கூறினார்.
 
முகரம் ஜா 2023இல் இறந்தபோது, அவருக்கு 89 வயது.
 
அனடோலியாவில் உள்ள தமது மூன்று படுக்கையறை குடியிருப்பில் இறந்தார். அந்த நேரத்தில் அந்த வீட்டில் ஒரு செவிலியர், ஒரு சமையல்காரர், ஒரு பராமரிப்பாளர் அவருடன் வசித்து வந்தனர்.
 
நிஜாம் முகரம் ஜாவின் தாய்வழி தாத்தா 1924இல் நாடு கடத்தப்பட்ட உஸ்மானிய பேரரசின் கடைசி 'கலீஃபா' அப்துல் மஜீத் II என்பது துருக்கியில் உள்ள அவரது அண்டை வீட்டாருக்குக்கூட தெரியாது.
 
முகரமின் தந்தை இளவரசர் ஆசம் ஸ்விட்சர்லாந்தில் தஞ்சம் புகுந்த 'கலீஃபா'வின் ஒரே மகள் துருஷேவரை மணந்தார்.
 
1967இல் ஹைதராபாத்தின் எட்டாவது மற்றும் கடைசி நிஜாமாக அரியணை ஏறிய முகரம் ஜா தான், 12க்கும் மேற்பட்ட அரண்மனைகள், முகலாய கலைப்பொருட்கள், நூற்றுக்கணக்கான கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வைரங்கள், விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவற்றை தனது தாத்தாவிடமிருந்து பெற்றவர். இவை வழி, வழியாக வந்தன.
 
ஆனால் இறப்பதற்கு முன், அவர் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை 'விரயம்' செய்தார்.
 
சாதி விவகாரத்தில் சாவர்க்கரோடு அம்பேத்கர் இணைந்து செயல்பட முயன்றது எப்போது? என்ன நடந்தது?
 
முகரம் ஜாவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஜான் ஜூப்ரிஸ்கி, தி லாஸ்ட் நிஜாம்: ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் இந்தியாஸ் கிரேட்டஸ்ட் பிரின்ஸ்லி எஸ்டேட்டில் கீழ்கண்டவாறு எழுதினார்.
 
"தன் மூதாதையரான முதல் நிஜாம், இரவு காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து கோல்கொண்டா கோட்டையை எப்படிக் கைப்பற்றினார் என்பதை முகரம் கூறினார். பிறகு அவர் முகலாயர்களை வென்றார்.
 
இதற்குப் பிறகு, தங்கம், வெள்ளி மற்றும் வைர-நகைகள் ஒட்டகங்களில் நிரப்பப்பட்டு ஔரங்கசீப்பின் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன."
 
ஜான் ஸுப்ரிஸ்கி அதே புத்தகத்தில், "பிரான்ஸ் போன்ற ஒரு நாட்டைப் போல பெரியதாக இருந்த ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானத்தின் நிலப்பரப்பு இப்போது சில நூறு ஏக்கராக குறைந்துள்ளது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல," என்றும் குறிப்பிடுகிறார்.
 
முகரம் ஜா இறந்தபோது, நிஜாம் ஹைதராபாத் சொத்தின் டஜன் கணக்கான வாரிசுகள் மத்தியில் தொடரப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருந்தன. அவற்றின் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
 
ஆனால், ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் எப்படி அபரிமிதமான செல்வத்தை இழந்தார் என்பதைப் புரிந்து கொள்ள அவரது தாத்தா மீர் உஸ்மான் அலி தனது மகன் இளவரசர் ஆசாமுக்கு பதிலாக பேரன் முகரமை வாரிசாகத் தேர்ந்தெடுத்த வரலாற்றை பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
 
மீர் உஸ்மான் அலி கானின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் டி.எஃப் கராக்கா 'ஃபேபுலஸ் முகல்' புத்தகத்தில், "உஸ்மான் அலி கான் 1920களில் 200 மனைவிகளைக் கொண்ட 'கிங் கோத்தி' அரண்மனையில் தனது சொந்த 'ஜனனா'வை கட்டி வாழ்ந்தார். 1967இல் இந்த அறைகள் 42 ஆகக் குறைக்கப்பட்டன. அதாவது ஏழாவது நிஜாம் இறந்த ஆண்டில் அவர்கள் அரச நிதியைச் செலவழிக்கவில்லை. அவர்கள் கஞ்சர்களாகக் கணக்கிடப்பட்டனர் என்பது வேறு விஷயம்.
 
எழுத்தாளர் ஜான் ஜூப்ரிஸ்கி, 'The Last Nizam: Rise and Fall of India's Greatest Princely Estate' புத்தகத்தில், "என் தாத்தா மீர் உஸ்மான் அலி கான் மாலை நேரங்களில் அரண்மனை தோட்டத்திற்குச் செல்வார். அங்கு அவரது மனைவிகள் அனைவரும் வருவார்கள். வெள்ளைக் கைக்குட்டைகளை அவர்கள் வைத்திருந்தார்கள். அரண்மனையில் உள்ள தாத்தாவின் படுக்கையறையில் இரவு ஒன்பது மணிக்கு எந்த ராணியைச் சந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.
 
ஆனால் இத்தனைக்கும் நடுவில் ஹைதராபாத் ஏழாவது நிஜாம் மீர் உஸ்மான் அலியின் பிள்ளைகளும் பேரக் குழந்தைகளும் பெருகினர். அவர் இறக்கும்போது 100 ஆக இருந்த குடும்பத்தினரின் எண்ணிக்கை 2005இல் 500ஐ தாண்டியது.
 
ஏறக்குறைய அவர்கள் அனைவரும் எட்டாவது மற்றும் கடைசி நிஜாம் முகரம் ஜாவுக்கு எதிராக சொத்துப் பங்கு வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
 
எவ்வாறாயினும், 1947இல் இந்திய சுதந்திரத்தின்போது, ஹைதராபாத் சமஸ்தானம் நாட்டின் பணக்கார சமஸ்தானம் என்று கூறப்பட்டது. இது குறித்து பிரிட்டன் பிரதமரே அறிக்கை அளித்தார் என்பதும் உண்மை.
 
1948, ஜூலையில், வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசுகையில், "ஐக்கிய நாடுகள் சபையின் 52 உறுப்பு நாடுகளில் 20 ஹைதராபாத்தைவிட சிறியவை. அவற்றில் 16 ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானத்தைவிட குறைவான வருமானம் கொண்டவை" என்று குறிப்பிட்டார்.
 
இளவரசர் முகரம் ஜாவின் தாயார் துருஷேவர், அவரது மாமனார் நிஜாம் மீர் உஸ்மான் அலியின் விருப்பத்திற்கு மாறாக, முகரமை முதலில் டூன் பள்ளிக்கும், பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜுக்கும் படிக்க அனுப்பிய காலம் இது.
 
இதற்கிடையில், ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதேவேளை, நிஜாம்கள் ஹைதராபாத்தின் மொத்த திரட்டப்பட்ட மூலதனம் மற்றும் அசையும் அசையா சொத்துகள் குறித்து ஊகித்தனர்.
 
மீர் உஸ்மான் அலியின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் டிஎஃப் கராக்காவின் கூற்றுப்படி, "1950களில் நிஜாமின் நிகர சொத்த மதிப்பு 1.35 பில்லியன் ரூபாய். அதில் 350 மில்லியன் ரொக்கம், 50 மில்லியன் வைரங்கள் மற்றும் நகைகள், மற்றும் அரண்மனைகள், தோட்டங்கள்."
 
நிஜாமின் மொத்த சொத்து சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று 1949ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
 
ஹைதராபாத் நிஜாமின் சொத்து மதிப்பீட்டில், அவரது வைரங்கள் மற்றும் நகைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி அளித்த புள்ளிவிவரங்கள் மற்றும் பல முறை நீதிமன்ற வழக்குகளின்போது பல முறை சுமார் 4,000 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டது.
 
இந்த நேரத்தில், நிஜாம் மீர் உஸ்மான் அலி தனது மாநிலத்தின் கடைசி நிஜாம் தனது மகன் ஆசம் ஜா என்றும் பேரன் முகரம் ஜா அல்ல என்றும் முடிவு செய்தார்.
 
ஜூன் 14, 1954 அன்று, அப்போதைய இந்திய பிரதமராக இருந்த ஜவஹர் லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், “இளவரசர் ஆசம் ஜா தனது ஊதாரித்தனம், மது மற்றும் போதைப்பொருள் காரணமாக, குடும்பத் தலைவனாகத் தன்னைத் தானே நிரூபிக்க முடியவில்லை. எனது பேரன் முகரம் ஜா எனது தனிப்பட்ட சொத்தின் வாரிசாக இருப்பார்."
 
தொடர்ந்து வந்த ஆண்டுகளில், பழைய அரச குடும்பங்களின் உரிமைகளை இந்திய அரசாங்கம் கையகப்படுத்திக் கொண்டிருந்த போது முகரம் ஜா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் குளம் கட்டுவது முதல் கண்ணிவெடிகள் அமைப்பது வரை அனைத்தையும் கற்றுக்கொண்டார்.
 
அந்த நேரத்தில் லண்டனில் உள்ள ஹாரோ பள்ளியில் தனது நண்பரான ரஷீத் அலி கானிடம், "நான் ஒரு சுதந்திரமான மனித வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புகிறேன். அதனால் நான் திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது ஜாஸ் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என எல்லா பொழுதுபோக்குகளையும் தொடர்கிறேன்" என்று கூறினார்.
 
1958இல், இஸ்தான்புல்லில் விடுமுறையில் இருந்தபோது, அவர் எஸ்ரா பெர்கினை சந்தித்தார். அவரை முகரம் லண்டனில் உள்ள கென்சிங்டன் ஆலயத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
 
 
ஹைதராபாத், புரானி ஹவேலியின் மசரத் அரண்மனையில் அமைந்துள்ள நிஜாம் அருங்காட்சியகத்தில் ஏழாவது நிஜாம் தொடர்பான பல விலைமதிப்பற்ற பொருட்கள் உள்ளன.
 
பல ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றாசிரியர் அனிதா ஷாவுடனான உரையாடலில், "என் தாத்தா, அப்போதைய நிஜாம் மற்றும் என் அம்மா இந்தத் திருமணத்திற்கு எதிராக இருந்தனர், ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை" என்று கூறினார்.
 
இறுதியாக, ஏழாவது நிஜாம், மீர் உஸ்மான் அலி 1967இல் இறந்தபோது, முகரம் ஜா கடைசி நிஜாமாக அரியணை ஏறினார். பல பிரச்னைகளில் பெரியது அரச செலவு.
 
பல ஆண்டுகளுக்குப் பிறகு, துருக்கியில் ஜான் ஜூப்ரிஸ்கிக்கு அளித்த பேட்டியில் முகரம் ஜா, "என் தாத்தாவிடம் மட்டும் 14,718 ஊழியர்கள் இருந்தனர். இது தவிர, அவருக்கு 42 மனைவிகள் மற்றும் 100 குழந்தைகள் இருந்தனர்.
 
"ஹைதராபாத்தில் உள்ள சௌமஹல்லா அரண்மனை வளாகத்தில் 6,000 பணியாளர்கள் இருந்தனர். எங்கள் அரண்மனைகள் அனைத்திலும் சுமார் 5,000 ரஃபியன் காவலர்கள் இருந்தனர். இதைத் தவிர, நிஜாமின் சமையலறையில் தினமும் 2,000 பேருக்கு உணவு சமைக்கப்பட்டது. மேலும் சில ஊழியர்கள் அருகிலுள்ள பல உணவகங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
 
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நிறைந்தது நிஜாமின் அரச கேரேஜ் என்றும் முகரம் ஜா கூறியிருந்தார். அவற்றின் பெட்ரோலுக்கான ஆண்டுச் செலவு அன்றைய காலத்திலேயே 90 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை நீண்டன.
 
1968ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் நிஜாமின் சொத்துகள் அவரது வாரிசுகள் அனைவருக்கும் சமமாகப் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தபோது முகரம் ஜாவுக்கு முதல் பின்னடைவு ஏற்பட்டது.
 
இந்த வழக்கை முகரம் ஜாவின் சகோதரி ஷாஜாதி பாஷா தாக்கல் செய்திருந்தார். அவரைத் திருமணம் செய்ய அவரது தாத்தா திருமணம் செய்ய அனுமதிக்கவில்லை.
 
அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவரது மனைவி எஸ்ரா மற்றும் குழந்தைகள் இங்கிலாந்துக்குத் திரும்பினர். ஹைதராபாத்தில் உள்ள அவரது சொத்துகளை காப்பாற்றுவதற்கான அவரது திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்வியடைந்தன.
 
இன்ஜினியரிங் மற்றும் மோட்டார் மெக்கானிக்கில் விருப்பமுள்ள முகரம் ஜா, நிஜாம் கடமையில் இருந்து ஓய்வு கிடைக்கும்போது, தனது தாத்தாவின் கேரேஜில் கிடந்த 56 கார்களை ரிப்பேர் செய்து வந்தார்.
 
ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம் ஃபாலக்னுமா அரண்மனையில் வசித்து வந்தார். இது இப்போது தாஜ் குழும ஹோட்டல்களின் ஒரு பகுதியாகும்.
 
பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில், அவரது முதல் மனைவி எஸ்ரா, ஜான் ஜூப்ரிஸ்கியிடம் பேசினார்.
 
"என் கணவர் ராணுவத்தில் சேர விரும்பினார் அல்லது கார் மெக்கானிக் ஆக விரும்பினார். இந்த ரியல் எஸ்டேட் தொழிலில் நெருங்கிய நண்பர்களை நம்புவது மிகவும் கடினமாக இருந்தது," என்று கூறினார்.
 
இங்கே ஹைதராபாத்தில், நிஜாம் முகரம் ஜா மேற்கு ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணியாற்றிக் கொண்டிருந்த ஹாரோவையும் அவரது கேம்பிரிட்ஜ் நண்பர்களில் ஒருவரான ஜார்ஜ் ஹோப்டேயையும் திடீரென்று நினைவு கூர்ந்து அவர்களைச் சந்திக்கச் சென்றார்.
 
இங்கிருந்து அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. ஹைதராபாத் மட்டுமல்ல, அவரது செல்வமும் அவரை விட்டு வெளியேறியது.
 
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரைச் சுற்றியுள்ள காட்சிகளையும் மக்களையும் அவர் மிகவும் விரும்பினார். அவர் இங்கு ஒரு பண்ணை வீட்டை வாங்க முடிவு செய்தார்.
 
இதற்கிடையில் முகரம், ஹெலன் சிம்மன்ஸ் என்ற ஆஸ்திரேலிய பெண்ணை மணந்தார். பின்னர் அவர் எய்ட்ஸ் நோயால் இறந்தார். இந்தத் திருமணத்தில் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் இரண்டாவது இளவரசர் ஒமர் ஜா, போதைப்பொருளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதால் இறந்தார்.
 
 
இதையடுத்து ஐந்து இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருந்த தனது புதிய தோட்டமான "மர்ச்சிசன் ஹவுஸ் ஸ்டேஷன்" மீது முகரம் ஜா தனது கவனத்தைச் செலுத்தினார்.
 
ஒரு பக்கம் இந்தியப் பெருங்கடலும் மறுபுறம் மலைகளும் குகைகளும் இருந்தன.
 
இங்கே இந்தியாவில் மற்றவர்கள் அவரது சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடிய நிகழ்வுகள் அதிகரித்தன. குடும்பத்தில் பிரிவுகள் நடந்தன.
 
மறுபுறம் முகரம் ஆஸ்திரேலியாவில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை வாங்கினார்.
 
அதில் ஒரு கப்பல், உலகின் மிகப்பெரிய புல்டோசர், கண்ணிவெடி கண்டுபிடிக்கும் இயந்திரங்கள் மற்றும் ஒரு தங்கச் சுரங்கம் ஆகியவை அடங்கும்.
 
அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஜான் ஜூப்ரிஸ்கியின் கூற்றுப்படி, "செலவுகள் அதிகரித்து வருவதால், முகரம் தனது ஊழியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள விலை உயர்ந்த ஹோட்டல்களின் செலவுகளைச் சமாளிக்க ஸ்விட்சர்லாந்திற்கு விலைமதிப்பற்ற வைரங்கள் மற்றும் நகைகளை விற்றார். ஆனால் ஆஸ்திரேலியாவில் அவரது செலவுகள் இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் இருந்தன."
 
இதன் விளைவாக கடன் சுமை, கடனாளிகளிடமிருந்து தப்பிக்கும் முயற்சி, நிஜாம் அறக்கட்டளையின் நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வெளிநாடுகளில் ஏலம் விட இந்திய அரசின் தடை போன்ற காரணங்களால் முகரம் ஜா உடைந்து போனார்.
 
1996 வாக்கில், அவர் கடனை அடைக்க ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் சொத்துகளை அடமானம் வைத்து விற்க வேண்டியிருந்தது. அவருடைய கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது கார்கள் மற்றும் புல்டோசர்கள் ஏலம் விடப்பட்டன.
 
எழுத்தாளர் ஜான் ஜூப்ரிஸ்கி ஹைதராபாத்தில் உள்ள ஒரு புத்தகக் கடையில் 'The Last Nizam: Rise and Fall of India's Greatest Princely Estate' என்ற புத்தகத்துடன். இந்த படம் 2007, ஜனவரி 25ஆம் தேதி எடுக்கப்பட்டது.
 
ஆஸ்திரேலியாவின் 'தி வெஸ்டர்ன் மெயில்' நாளிதழ், "ஷாவின் (மக்கள் அவரை அங்கு அப்படித்தான் அழைத்தனர்) - ஊழியர்கள் தவறாக பணத்தைச் செலவழித்ததுடன் மோசடி செய்துள்ளனர். ஷா தனது குழந்தைகளின் பராமரிப்பு விஷயத்திலும் பின்னடைவை சந்தித்தார். அவர்கள் பெரும் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்" என்று கூறியது.
 
அந்த ஆண்டின் ஒரு வெள்ளிக்கிழமை அன்று, 'நிஜாம்' முகரம் ஜா, பெர்த்தில் உள்ள தனது செயலாளரிடம் தான் நமாஸ் செய்யப் போவதாகக் கூறினார். அப்போது அவரை ஆஸ்திரேலியாவில் காணவில்லை.
 
தன் மீது போடப்பட்ட வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயத்தில் துருக்கிக்கு ஓடிப்போய், தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தார்.
 
இதற்கிடையில் அவர் மேலும் இரண்டு திருமணங்களைச் செய்தார். அதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
 
2002ஆம் ஆண்டு, அரசு கருவூலத்தில் உள்ள நிஜாம் அறக்கட்டளையில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளுக்கு இந்திய அரசு அவருக்கு 22 மில்லியன் டாலர்களை வழங்கியது. ஆனால் அந்தத் தொகை சந்தை விலையில் கால் பங்கிற்கும் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது.
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் முகரம் ஜா இறந்த பிறகு, அவரது உடல் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு முன் 2012ஆம் ஆண்டில் அவர் ஹைதராபாத் வந்தார்.
 
சில ஆண்டுகளுக்குப் பிறகு, வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஜான் ஜூப்ரிஸ்கி அவரிடம் ஏதேனும் வருத்தம் உள்ளதா என்று கேட்டார்.
 
அன்டோலியாவில் உள்ள விடுதியில், துருக்கிய தேநீர் பருகிய முகரம் ஜா, "ஆம், இங்கிலாந்தில் உள்ள எனது நண்பர் ஒருவர் என்னிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசும்போது, இரண்டாம் உலகப் போரின்போது சிதைந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டதாகவும் அதன் மீது எனக்கு ஆர்வம் இருக்கிறதா என்றும் கேட்டார். நான் ஆம் என்று பதிலளித்தேன். ஆனால் இந்த விவகாரத்தை மேலும் தொடர முடியவில்லை," என்று பதிலளித்தேன் என்றார்.