செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஜூலை 2018 (15:40 IST)

மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; வைரலான நெய்மர், நாக்அவுட்டில் நடந்தது என்ன?

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவில் இம்முறை முக்கியமான அணிகள் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளன.இன்னும் ஏழு போட்டிகளில் 2018 உலககோப்பை கால்பந்துக்கான மகுடம் யாருக்கு என்பது தெரிந்துவிடும்.



தற்போது உலககோப்பையை வெல்வதற்கான ஓட்டத்தில் எட்டு அணிகள் மட்டுமே இருக்கின்றன. இவ்வார இறுதியில் எட்டு அணிகளில் இருந்து அடுத்தசுற்றுக்கு முன்னேறப்போகும் நான்கு அணிகள் எவை என்பதும் தெரிந்துவிடும்.

உருகுவே, பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரோஷியா, சுவீடன், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய இந்த எட்டு அணிகள்தான் இவ்வாரத்தின் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மல்லுக்கட்டவுள்ளன.

கடைசி 16 சுற்றில் நடந்தது என்ன?

உலகில் அதிக ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்கும் லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அணிகள் இம்முறை காலிறுதி சுற்றுக்குக்கூடத் தகுதிபெறவில்லை.

கடந்த வாரம் சனிக்கிழமை இரவு கால்பந்து ரசிகர்களுக்கு பெருந்தீனியும் அதிர்ச்சியும் ஒருசேரக் கிடைத்தது. அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் அணிகள் அடுத்தடுத்து வெளியேறின.

ஃபிரான்ஸ் அர்ஜென்டினா இடையே நடந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் மெஸ்ஸியின் உதவியோடு அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் மெர்காடோ கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக 57-வது நிமிடத்தில் கோல் அடித்தது ஃபிரான்ஸ்.ஆட்டத்தின் 64 மற்றும் 68-வது நிமிடங்களில் ஃபிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப் அடுத்தடுத்து கோல் அடித்தார். கிட்டத்தட்ட 11 நிமிட இடைவெளியில் மூன்று கோல்களை போட்டது ஃபிரான்ஸ். 90 நிமிடங்கள் முடிவில் அர்ஜென்டினா 2-4 என பின்தங்கியிருந்தது. ஸ்டாப்பேஜ் டைம் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேரத்தில் பல்வேறு காரணங்களால் அவ்வப்போது தடைபட்ட நேரத்தை கணக்கிட்டு ஆட்டத்தின் முடிவில் நடுவரால் கூடுதல் நேரம் வழங்கப்படும்) ஐந்து நிமிடமாக நிர்ணயிக்கப்பட்டது. அர்ஜென்டினா அதில் ஒரு கோல் அடித்தது எனினும் ஆட்டத்தின் 95-வது நிமிடத்தின் முடிவில் அதிகாரபூர்வமாக மெஸ்ஸி அணி உலககோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டது.உருகுவே போர்ச்சுகல் இடையிலான ஆட்டத்தில் 67-வது நிமிடத்தில் எடின்சன் கவானி அடித்த கோல் உருகுவேயின் வெற்றிக்கு வித்திட்டது. 2-1 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற, தொடர்ந்து நான்காவது முறையாக உலககோப்பையின் நாக் அவுட் சுற்றில் தோல்விகண்டது போர்ச்சுகல் அணி. ரொனால்டோ ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.



பிரேசில் மற்றும் மெக்சிகோவுக்கு இடையிலான ஆட்டத்தில் நெய்மர் மற்றும் ராபெர்ட்டோ ஃபிர்மினோவின் கோல்கள் பிரேசிலை காலிறுதிக்கு முன்னேற்றின. இப்போட்டியில் நெய்மர் களத்தில் வலியால் துடித்தவிதம் சமூகவலைதள உலகில் கேலியை உண்டாக்கியது.

பெல்ஜியம் ஜப்பான் இடையிலான போட்டியில் ஜப்பான் அணி 48 மற்றும் 52-வது நிமிடங்களில் கோல் அடிக்க பெல்ஜியம் 0-2 என பின்தங்கியது. 69 மற்றும் 74-வது நிமிடங்களில் பெல்ஜியம் அடுத்தடுத்து கோல் அடித்து சமன்செய்தது. ஸ்டாப்பேஜ் நேரத்தில் பெல்ஜியம் ஒரு கோல் அடிக்க ஜப்பானின் உலக கோப்பை கனவு கலைந்தது.

1966-க்கு பிறகு உலககோப்பை கால்பந்தின் நாக்அவுட் சுற்றில் 90 நிமிடத்துக்குள் இரண்டு கோல்கள் பின்னடைவு பெற்றபின்னர் ஒரு அணி மீண்டுவந்து வென்றது இதுவே முதல்முறை.


இப்போட்டியில் ஜப்பானின் இரண்டு கோல்களுக்கு இடையேயான இடைவெளி 4.16 நிமிடங்கள் மட்டுமே. பெல்ஜியத்தின் முதல் இரண்டு கோல்களுக்கு இடையேயான இடைவெளி 4.30 நிமிடங்கள்.

ஸ்பெயின் ரஷ்யா இடையிலான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் ரஷ்யா 4-3 கோல்கள் என வென்றது.ஸ்பெயினுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்து 48 வருடங்களில் முதன்முறையாக ரஷ்யா காலிறுதியில் நுழைந்துள்ளது. ஸ்பெயின் அணி உலகக் கோப்பையில் இதுவரை நான்கு முறை பெனால்டிசூட் அவுட்டில் விளையாடி மூன்றில் தோல்வி கண்டுள்ளது.

சோவியத் யூனியன் உடைந்தபிறகு ரஷ்யா உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறை.

குரோஷியா டென்மார்க் இடையிலான போட்டியும் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தில் 1-1 என சமநிலையில் முடிந்ததால் பெனால்டி ஷூட் அவுட்டுக்கு நீண்டது. இதில் குரோஷியா 3-2 என வென்றது.

சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு இடையேயான போட்டியில் சுவீடன் வீரர் ஃபோர்ஸ்பெர்க் மட்டுமே கோல் அடித்த்தார்.



இங்கிலாந்து கொலம்பியா இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகித்தது. ஆனால் ஸ்டாப்பேஜ் நேரத்தில் கொலம்பியா அடித்த கோலால் இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து 4-3 என வென்று காலிறுதியில் நுழைந்தது.

இதுவரை பெரிய அளவிலான கால்பந்து தொடர்களில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் இங்கிலாந்து வெல்வது இதுவே இரண்டாவது முறை. 2006க்கு பிறகு இங்கிலாந்து காலிறுதி தகுதி பெறுவது இதுவே முதல் முறை. இங்கிலாந்தில் கடைசி 15 நாக் அவுட் போட்டிகளில் எட்டு போட்டிகள் கூடுதல் நேரத்துக்கு நீண்டது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை 2018 கால்பந்தில் இரண்டாவது பாதியில் குறிப்பாக கூடுதல் நேரத்தில் கோல்கள் அடிப்பது அதிகரித்து வருகிறது.


உருகுவே அணி ஃபிரான்ஸை சந்திக்கிறது. பிரேசில் பெல்ஜியம் அணியை சந்திக்கவுள்ளது. இவ்விரு போட்டிகளில் வெல்லும் அணிகள் முதல் அரை இறுதி போட்டியில் மோதும்.

ரஷ்யா அணி குரோஷியாவையும், சுவீடன் இங்கிலாந்தையும் எதிர்கொள்ளவிருக்கிறது. இவ்விரு போட்டிகளில் வெல்லும் அணிகள் இரண்டாவது அரை இறுதியில் மோதும்.

உலக கோப்பை இறுதிப்போட்டி ஜூலை 15-ல் மாஸ்கோ நகரத்தில் நடக்கவுள்ளது.