1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (21:56 IST)

அர்ஜெண்டினாவை வெளியேற்றிய பிரான்ஸ்: மெஸ்ஸியின் மாயாஜாலம் என்ன ஆச்சு?

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இன்றுமுதல் நாக் அவுட் போட்டிகள் தொடங்கியுள்ளது. இன்றைய முதல் நாக் அவுட் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. அடுத்த சுற்றுக்கு செல்ல இந்த போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் கடுமையாக போராடின.
 
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் அண்டோனி கிரிஸ்மான் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்த அதற்கு பதிலடியாக அர்ஜெண்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது
 
இந்த நிலையில் முதல்பாதியின் ஆக்ரோஷம் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்தது. இந்த நிலையில் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் காப்ரிய்ல் மர்கோடா ஒரு கோல் அடித்து தனது அணியை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடியாக பிரான்ஸ் அணியின் பெஞ்சமின் பவார்ட் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 2-2 என்ற கோல்கணக்கில் சமன்படுத்தினார். 
 
ஆனால் இதன்பின்னர் பிரான்ஸ் அணியின் ஆட்டம் வேற லெவலில் இருந்தது. ஆட்டத்தின் 64 மற்றும் 68-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல் போட்டு பிரான்ஸ் அணி வீரர்கள் அசத்தினர். அதன்பின்னர் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் அர்ஜெண்டினா வீரர்களால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்ததால் இறுதியில் அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. அவருடைய மாயாஜாலம் என்ன ஆச்சு என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.