முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி - 'ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதி மறுப்பு'
ஸ்டெர்லைட் ஆலை உரிமத்தை புதுப்பிக்க மாசு கட்டுபாட்டு வாரியம் மறுத்துள்ளது. இதனால் ஆலையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சார்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு 1-ஐ 31-3-2018-க்கு பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது. அவ்விண்ணப்பத்தை பரிசீலித்தபோது, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை, அக்குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் 9-4-2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் முகமது நசிமுத்தின் தெரிவித்துள்ளார் என்று தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளதாக விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக மேலும் 15 நாட்கள் மூடப்படும் என்று நேற்று ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், போராட்டம் நடத்திவரும் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர் என்கிறது அந்த நாளிதழ் செய்தி.
தினமணி - '2017 ஆம் நிதியாண்டில் பா.ஜ.கவின் வருமானம் ரூ.1,034 கோடி`
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசிய அரசியல் கட்சிகள், 2017ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.1,559.17 கோடி வருமானம் ஈட்டியிருப்பதாக தெரிவித்துள்ளன. இதில் பாஜக மட்டும் மிகவும் அதிகபட்சமாக ரூ.1,034.27 கோடி கணக்கு காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.225 கோடி வருமானம் ஈட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு 2016-17ஆம் நிதியாண்டில் தேசிய அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த வருமானம், அக்கட்சிகள் செலவு செய்த தொகை குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 7 தேசிய அரசியல் கட்சிகளும் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்கு தொடர்பான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 7 தேசிய கட்சிகளுக்கு, 2016-17ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.1,559.17 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. இதில் பாஜகவுக்கு மட்டும் ரூ.1,034.27 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
இதற்கடுத்து காங்கிரஸ் கட்சிக்கு ரூ.225.36 கோடியும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.173 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகவும் குறைவாக ரூ.2.08 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.
7 தேசிய அரசியல் கட்சிகளும், 2016-17ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.1,228 கோடியை செலவிட்டுள்ளன. அதில் பாஜக மட்டும் அதிகப்பட்சமாக ரூ.710 கோடி செலவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.321 கோடி செலவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. (வருமானத்தை விட ரூ.96.30 கோடி அதிகமாக செலவு செய்துள்ளது)" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
’தி இந்து’ (ஆங்கிலம்) - 'சுபிக்ஷா நிறுவனருக்கு ஜாமீன் மறுப்பு'
சென்னை உயர்நீதிமன்றம் சுபிக்ஷா நிறுவனர் ஆர். சுப்ரமணியனின் ஜாமீன் மனுவை நிரகாரித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது ’தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழ். அவர் 700 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பணசலவை (2002) சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு இருந்தார்.