வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (13:02 IST)

உதயநிதிக்கு புதிய பதவி: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளில் விமர்சனம் எழாதது ஏன்?

Udhayanithi stalin

தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக்கப்பட்டதன் மூலம் தி.மு.க. அரசின் அதிகார அடுக்கில் இரண்டாவது இடத்தில் அவர் இருப்பார் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, பா.ஜ.க. ஆகியவை கடுமையாக விமர்சித்துள்ளன. ஆனால், திமுகவுக்குள் விமர்சனம் எழாத நிலையில், எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதில் அர்த்தமில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன். உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளை மட்டுமே கவனிக்க வேண்டும் என்பது அவரது கருத்து.

 

உதயநிதியின் வளர்ச்சி கட்சிக்குள் எப்படி பார்க்கப்படுகிறது?
 

"உதயநிதியை எப்போது துணை முதலமைச்சர் ஆக்கினாலும் இதுபோல விமர்சனம் வரத்தான் செய்யும். எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யவில்லையென்றால்தான் ஆச்சரியம். இவ்வளவு சீக்கிரத்தில் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் எப்போது துணை முதல்வராக்கலாம் என்று நாள் குறித்துக் கொடுக்க முடியுமா?

 

இதெல்லாம் அந்தக் கட்சியின் உள் விவகாரம். 'எங்களைப் போன்ற மூத்தவர்கள் இருக்கும்போது இவரை துணை முதல்வராக்கியது ஏன்?' எனக் கேள்வியெழுப்ப வேண்டியது துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு போன்ற அக்கட்சியின் மூத்த தலைவர்கள்தான். ஆனால் அவர்களே ஓடோடிப் போய் வாழ்த்து சொல்லும்போது, அதை அந்தக் கட்சியின் உள்விவகாரமாகத்தான் பார்க்க வேண்டும்,” என்கிறார் எஸ்.பி.லஷ்மணன்.

 

வாரிசு என்பது தகுதிக் குறைவோ, தகுதிக்கான தடையோ அல்ல எனக் கூறும் அவர், அந்த இடத்திற்கு வந்த பிறகு அவர் எப்படிச் செயல்படுகிறார் என்பதுதான் மக்களைப் பொருத்தவரை முக்கியம் என்றும் அப்போதுதான் விமர்சிக்க முடியும் எனவும் கூறுகிறார்.

 

ஆனால், வாரிசு என்பதால்தான் அவர் இவ்வளவு சீக்கிரம் வளர்ந்தார் என்பதில் சந்தேகமில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் லஷ்மணன்.

 

"திமுகவில் ஐந்து முறை எம்.எல்.ஏ. ஆன துரை சந்திரசேகரனும் உதயசூரியனும் இன்னமும் அமைச்சராகவில்லை. உதயநிதி வாரிசு என்பதால்தான் இவ்வளவு சீக்கிரம் உயர்வு கிடைத்தது. இதை யாரும் மறுக்க முடியாது.”

 

உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகக் கொண்டு வரப்பட்டார் எனக் கூறும் லஷ்மணன், “ஏன் தி.மு.கவில் வேறு இளைஞர்கள் யாரும் இல்லையா? இதற்கு முன்பாக இருந்த வெள்ளகோவில் சுவாமிநாதன் நன்றாகத்தானே செயல்பட்டார்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

 

அவரிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கப்பட்ட பிறகு, நான்கு முறை பொதுக் குழு கூட்டப்பட்டுவிட்டது, நான்கு முறை செயற்குழு கூட்டப்பட்டுவிட்டது எனச் சுட்டிக்காட்டும் எஸ்.பி.லஷ்ம்ணன், "எப்படி வெள்ளகோவில் சுவாமிநாதனை நீக்கலாம், அப்படியே நீக்கினாலும் உதயநிதியைவிட கட்சிக்குள் மூத்தவர்கள் வேறு நான்கைந்து பேர் இருக்கிறார்களே?" என யாருமே கேட்கவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.

 

ஆகவே, வாரிசு என்பதற்காகத்தான் அந்த இடத்தில் உதயநிதி அமர்த்தப்பட்டார் எனச் சுட்டிக்காட்டும் அவர், இருப்பினும் உதயநிதி அந்தப் பதவியை வாங்கிய பிறகு எப்படி நடந்துகொண்டார் என்பதையும் கட்சியினர் கவனித்ததாகக் கூறுகிறார்.

 

‘வாரிசு அடையாளம்’ குறித்த மக்களின் பார்வை என்ன?
 

“மாவட்டம், மாவட்டமாகச் செல்கிறார், பேரணிகளில் கலந்துகொள்கிறார், நீட் தேர்வுக்கு எதிராகப் பேசுகிறார். செங்கலை தூக்கிச் சென்று ஊர் ஊராகப் பிரசாரம் செய்தார்.

 

2021 சட்டமன்றத் தேர்தலில் வாரிசு என்பதால்தான் சீட் கொடுக்கப்பட்டது. கட்சியில் சேர்ந்த மூன்றாவது வருடம் வேறு யாருக்காவது சீட் கிடைக்குமா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

 

"அதேநேரத்தில், அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்ட பிறகு அவர் அதற்கு நியாயமாகச் செயல்படுகிறார் என்பதையும் நாம் மறுக்க முடியாது. வாரிசு என்ற அடையாளத்தோடு தேர்தலில் நின்றாலும் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தி.மு.க. உறுப்பினர்கள் மட்டும் வாக்களிக்கவில்லை, மக்கள் வாக்களித்தார்கள். ஆகவே வாரிசு என்ற விமர்சனத்தை மக்கள் இடது கையால் புறந்தள்ளினார்கள் என்றுதான் எடுத்துக்கொள்கிறேன்,” எனவும் தெரிவித்தார்.

 

அப்படி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியவுடன், அவரை ஓராண்டில் அமைச்சராக்கியதும் வாரிசு என்பதற்காகத்தான் ஆக்கினார்கள் எனக் கூறும் எஸ்.பி.லஷ்மணன், “அது பற்றிய விமர்சனத்தோடுதான் தி.மு.க. 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. இந்த வாரிசு அரசியலுக்கு எதிராக தி.மு.கவுக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென்றால், ஒரு சிறிய அளவிலான தோல்வியையாவது மக்கள் தந்திருக்கலாம். அப்படி நடக்கவில்லை.

 

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கியதை எதிர்த்து, இந்த வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் உரிமை மக்களிடம் இருக்கிறது. 2026இல் அதைச் செய்கிறார்களா எனப் பார்க்கலாம்" என்கிறார்.

 

கட்சிக்குள் எதிர்ப்பு இல்லையா?

 

udhayanithi


 

உதயநிதி துணை முதல்வர் ஆனது குறித்து கட்சிக்குள் பலருக்கும் அதிருப்தி இருக்கலாம், ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்லும் துணிச்சல் யாருக்கும் இல்லை என்கிறார் லக்ஷ்மணன்.

 

"உதயநிதி இவ்வளவு சீக்கிரம் துணை முதல்வர் ஆனது குறித்து கட்சிக்குள் பலருக்கு அதிருப்தி இருக்கலாம். ஆனால், எதிர்க் குரல் எழுப்பும் துணிச்சல் யாருக்கும் இல்லை. உதயநிதியை வாழ்த்த மூத்த அமைச்சரான துரைமுருகனே ஓடோடித்தானே வந்தார். பொதுக் குழுவில் எழுப்ப வேண்டிய விஷயம் இது. ஆனால், அப்படி ஒரு குரலும் எழவில்லையே" என்கிறார் அவர்.

 

உதயநிதி நியமனத்தை கூட்டணிக் கட்சிகள் வெகுவாக வரவேற்கின்றன; ஆனால், அவற்றுக்கு வேறு வழியில்லை என்கிறார் அவர்.

 

"வேறு என்ன செய்ய முடியும். தோழமை தொடர்கிறது என்று சொல்லிவிட்டு, உதயநிதி நியமனத்தை ஏற்கவில்லை, அதனால், கூட்டணியைவிட்டு வெளியேறுகிறோம் என்று சொல்ல முடியுமா? வாழ்த்து தெரிவிக்காமலும் இருக்க முடியாது. அதுதான் கூட்டணி தர்மம்" என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

 

பொன்முடியின் துறை மாற்றம் – ஆளுநருடனான மோதல் போக்கு காரணமா?

 

இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றியமைக்கப்பட்டது. அவர் உயர்கல்வித் துறையிலிருந்து வனத்துறைக்கு மாற்றப்பட்டார். பல்கலைக் கழகங்களின் வேந்தராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இருந்த நிலையில், இருவருக்கும் இடையில் மோதல் நீடித்து வந்தது. பல தருணங்களில் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு பொன்முடி கடுமையாக எதிர்வினையாற்றியும் வந்தார். ஆகவே, இந்த மோதலைத் தணிக்கவே பொன்முடி மாற்றப்பட்டார் எனப் பேச்சு அடிபட்டது.

 

அதுகுறித்துப் பேசியவர், “பொன்முடி, ஆளுநர் ரவியைக் கடுமையாக எதிர்ப்பதால்தான் மாற்றப்பட்டார் என்பது சரியான கருத்தல்ல. அப்படியானால், இப்போது அந்தப் பதவிக்கு வந்துள்ள கோ.வி.செழியன் என்ன ஆர்.என். ரவிக்கு ஆதரவாக போஸ்டர் அடிக்கப் போகிறாரா அல்லது ஆளுநர் மாளிகையிலேயே குடியிருக்கப் போகிறாரா? அல்லது திராவிடம்தான் இந்த மாநிலத்தை சீரழித்தது என்ற ஆளுநரின் வாதத்தை ஏற்கப் போகிறாரா?

 

அப்படி எதுவுமில்லை. பொன்முடிக்கு மட்டும்தான் கொள்கை இருக்கிறதா, மற்றவர்களுக்குக் கிடையாதா? இதுதான் காரணமென்றால், அமைச்சரவையில் இருந்தே அவரை நீக்கியிருக்க வேண்டும். பா.ஜ.க. இன்னும் மகிழ்ந்திருக்குமே. வனத்துறையும் ஒரு முக்கியமான துறையில்லையா, பொன்முடி இப்போதும் தி.மு.கவின் துணை பொதுச் செயலாளர்தானே?

 

பொன்முடி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு, அவசரஅவசரமாக அவரை அமைச்சராக்கவில்லையா? அந்தப் பின்னணியில் பார்க்கும்போதுதான், இந்த இடமாற்றம் ஆச்சரியம் அளிக்கிறது. உயர் கல்வியில் இன்னும் சீர்படுத்த வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதற்காக இதைச் செய்திருக்கலாம். ஆதிதிராவிடர் வாக்கு வங்கி குறித்தும் அவர்களுக்கு அதிகாரமளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தருணத்தில் இம்மாதிரி ஒரு முக்கிய அமைச்சரவையை ஆதிதிராவிடருக்கு அளிப்பதன் மூலம் ஒரு செய்தியையும் விடுவிக்க தி.மு.க. நினைத்திருக்கலாம்" என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

 

மனோ தங்கராஜ் பாஜகவை விமர்சித்ததால் மாற்றப்பட்டாரா?

 

பால்வளத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ், இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது நீக்கப்பட்டார். ஏற்கெனவே ஆவடி சா.மு.நாசர் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, அவர் மீது பல புகார்கள் எழுந்த நிலையில், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, மனோ தங்கராஜ் அந்தத் துறைக்கு அமைச்சராக்கப்பட்டார். இப்போது நாசர் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், மனோ தங்கராஜ் நீக்கப்பட்டிருக்கிறார்.

 

மனோ தங்கராஜ் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக "மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்" என்ற பெயரில் பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.

 

அவர் தொடர்ந்து பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்தும் வந்தார். ஆகவே, அவருடைய பதவி நீக்கத்திற்கு, அவருடைய பா.ஜ.க. எதிர்ப்பே காரணம் என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

 

மேலும், "பா.ஜகவினர், கனிமவளக் கொள்ளையர் கொடுத்த அழுத்தத்தால்தான் மனோ தங்கராஜ் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. முதல்வர் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த பிறகே இது நடப்பதால் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. கொள்கைவாதிகளை நீக்குவது பற்றி மூத்த அமைச்சர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்" என மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் செய்தியாளர் சந்திப்பையே நடத்தினார். ஆனால், அவருடைய பதவி நீக்கத்திற்கும் பா.ஜ.க. எதிர்ப்பிற்கும் தொடர்பில்லை என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

 

"மனோ தங்கராஜ் நீக்கப்பட்டதற்கும் அவருடைய பா.ஜ.க. எதிர்ப்பிற்கும் தொடர்பில்லை. இது முதல்வரின் உரிமை. மனோ தங்கராஜை அழைத்து முதல்வரே பேசியிருக்கலாம். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் வேறு பதவி தருவதாகச் சொல்லியிருக்கலாம். நாசர் நீக்கப்பட்டார். ஆனால், அதற்குப் பிறகு அவர் கட்சிக்காக்க தொடர்ந்து கடுமையாக உழைத்ததாக முதல்வர் பேசும்போதெல்லாம் குறிப்பிட்டு வந்தார்.

 

இப்போது மீண்டும் அமைச்சராக்கியிருக்கிறார்.

 

மற்ற இரு அமைச்சர்கள் நீக்கமும்கூட அப்படித்தான். மஸ்தான் மீது பொதுவெளியில் என்ன குற்றச்சாட்டுகள் இருந்தன? நாசரை அமைச்சராக்க வேண்டுமென்பதற்காக இவர் நீக்கப்பட்டிருக்கலாம்" என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

 

ஆனால், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனித வளத்துறை அளித்தது கவனிக்கத்தக்கது என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

 

"ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் பிரச்னையைக் கவனிக்கும் துறை அது. இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து, நிதி அமைச்சரிடம்தான் இந்தத் துறை இருந்தது. இப்போது பிரித்து வேறு அமைச்சரிடம் கொடுத்திருப்பது நல்ல முடிவுதான். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.

 

அரசுப் பணியிடங்களை நிரப்பும்போது, நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினத்தோரின் இடங்கள், அடுத்தடுத்த அறிவிப்புகளில் சாதாரண காலிப் பணியிடங்களாகக் கருதப்படுவதாக அறிவிக்கப்பட்டு நிரப்பப்படுவதாகவும் அதன் மூலம் பட்டியலினத்தோரின் இடங்கள் பறிக்கப்படுவதாகவும் புகார்கள் உண்டு. இந்தச் சூழலில் கயல்விழி செல்வராஜை அந்தப் பதவியில் நியமித்திருப்பதன் மூலம், அவர் இந்தப் பிரச்சனையைக் கனிவோடு அணுகுவார் என திமுக கணித்திருக்கலாம் என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

 

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பதவி – வலுக்கும் விமர்சனங்கள்

 

Senthil Balaji
 

மேலும், அமலாக்கத் துறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு பிணை கிடைத்தவுடனேயே அவரை அமைச்சராக்கியிருப்பதை விமர்சிப்பதும் சரியானதல்ல என்கிறார் அவர்.

 

"செந்தில் பாலாஜி அவருடைய துறையைச் சரியாகக் கவனித்தால், என்ன பிரச்னை வரப் போகிறது? இந்த வழக்கில் தண்டனை கிடைத்தால் சிறை செல்லப் போகிறார். இல்லாவிட்டால், இல்லை. அவ்வளவுதான்.

 

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிற்காகத் தண்டிக்கப்பட்டு, 28 நாட்கள் சிறையில் இருந்தார். பிறகு வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீட்டிற்குச் சென்றது. அதற்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 33 ஆண்டுகால வரலாற்றைத் தாண்டி, ஆட்சியில் இருந்த கட்சியே மீண்டும் வென்றது. ஆகவே, மக்கள் சொல்லும் செய்தி இதுதான். ‘உங்கள் மீதுள்ள வழக்கை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஆட்சி, சரியாக இருந்தால் எங்களுக்குப் போதும், அவ்வளவுதான்.’

 

செந்தில் பாலாஜியை வழக்கு முடியும்வரை அமைச்சராக்கவில்லை என வைத்துக்கொள்வோம். நான்கு ஆண்டுகள் கழித்து அவர் விடுதலையாவதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால், அந்த இழப்பை எப்படி ஈடு செய்வது? அதைத்தான் உச்சநீதிமன்றம் பார்த்திருக்கிறது,” என்று விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லஷ்மணன்.

 

பொன்முடிக்கும் தண்டிக்கப்பட்டு, தண்டனை நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. அவரை மீண்டும் அமைச்சராக்க முதல்வர் விரும்பியபோது ஆளுநர் மறுத்தார். "அப்போது அவரை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. ஆகவே சட்டம் அனுமதிப்பதை யாரும் தடுக்க முடியாது" என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு