புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (15:02 IST)

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை மீண்டும் அமைப்பதற்காக அதே இடத்தில் இன்று (ஜனவரி 11) அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உப வேந்தரின் அனுமதிக்கு அமைய, இந்த அடிக்கல் நாட்டப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர். இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ள போதிலும், அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைப்பதற்கு மத்திய அரசாங்கமோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பிலான உறுதியாக தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 8ம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமளவிலானோர் அங்கு ஒன்று திரண்டிருந்தனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபி, மாவீரர் நினைவுதூபி மற்றும் பொங்குத் தமிழ் நினைவு தூபி ஆகியவற்றை உடைக்க அன்று நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக மாவீரர் நினைவுதூபி மற்றும் பொங்குத்தமிழ் நினைவுதூபி ஆகியன பாதுகாக்கப்பட்டன.
 
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு போராட்டம் சர்வதேச அளவில் வலுப் பெற்றது. 9ம் தேதி முதல் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டம் நேற்றைய தினம் வலுப் பெற்ற நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
 
இவ்வாறான போராட்டங்களுக்கு மத்தியிலேயே, இன்று மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைப்பதற்கான அடிக்கலை நாட்டுவதற்கு பல்கலைக்கழக உப வேந்தர் அனுமதி வழங்கியுள்ளார். தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள பின்னணியில், உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.