அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? பிரதமர் மோடி
அரசியலுக்கு வரும் ஆசை தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நவம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தேசிய மாணவர் படை தினமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மன் கீ பாத் நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை உறுப்பினர்களுடன் மோடி கலந்துரையாடினார்.
இந்த உரையாடலின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் மோடி பதிலளித்தார். அப்போது ஹரி என்ற மாணவர், "நீங்கள் அரசியல்வாதி ஆகவில்லை என்றால் வேறு என்ன செய்திருப்பீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த மோடி, ஒவ்வொரு குழந்தைக்கும் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பது குறித்து பல ஆசைகள் இருக்கும். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.
அரசியலுக்கு வரவில்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன் என்ற எண்ணமே எனக்கு வந்ததில்லை. நான் எங்கு இருந்தாலும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, நாட்டின் நலனுக்காக இரவும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருப்பேன் என்று மோடி கூறினார்.