திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (14:04 IST)

கழிப்பறைகள் இல்லாத இந்தியா? – அதிர்ச்சியளிக்கும் தேசிய புள்ளிவிவரம்

பிரதம மந்திரியின் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் புதிய புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய புள்ளி விவர அலுவலகம்.

2012ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி நாடு முழுவதும் கழிப்பறைகளை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 75 சதவீதமாக இருந்ததாக கூறியுள்ள அந்த புள்ளி விவரம் தற்போது அது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

திறந்தவெளியில் மலம் கழிப்பதை நிறுத்தும் வகையில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் அனைத்து வீட்டிலும் கழிப்பறை கட்டுவதை வலியிறுத்தி பிரதமர் மோடி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கினார். அதன் மூலம் 60 மாதங்களில் 60 கோடி மக்களுக்கு 11 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் திறந்த வெளியில் மலம் கழிப்பது வெகுவாக குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால் தேசிய புள்ளி விவரத்துறையின் புள்ளி விவரங்கள் இதற்கு மாறானதாக உள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் பல மாநிலங்களில் அனைத்து தரப்பினருக்கும் கழிப்பறைகள் கட்டித்தரப்பட்டுள்ளன. ஆனால் அனைவரும் கழிப்பறைகளை உபயோகப்படுத்துவதில்லை என அந்த புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. கழிப்பறையை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை முன்பை காட்டிலும் அதிகரித்திருந்தாலும், கட்டி முடிக்காமல் பாதியில் விடப்பட்ட கழிப்பறைகள், தண்ணீர் வசதி இல்லாததால் உபயோகிக்கப்படாமல் உள்ள கழிப்பறைகள் நாட்டில் அதிகம் உள்ளதாகவும் அந்த புள்ளி விவரப்பட்டியல் சுட்டிக்காட்டியுள்ளது.