இவர், பங்கேற்ற கடைசி ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு நேற்று பெங்களூரு வந்தடைந்தார். அங்கிருந்து உறவினர்கள் சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு அவரை அழைத்து வந்தனர்.
நடராஜன் வருகையை ஒட்டி அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை நண்பர்களும், ரசிகர்களும் செய்திருந்தனர். சின்னப்பம்பட்டி கிராமத்தின் நுழைவிலிருந்து நடராஜன் படித்த பள்ளி வரை சாரட் வண்டியில் அழைத்து வரவும், அதன்பின்பு, வரவேற்பை ஏற்று மேடையில் நடராஜன் ஐந்து நிமிடம் பேசும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிபிசி தமிழிடம் பேசிய நடராஜனின் தந்தை தங்கராஜ், "நடராஜனின் சகோதரி வீட்டுக்காரர் பெங்களூரிலிருந்து நடராஜனை அழைத்து வந்தார். நடராஜனின் நண்பர்கள் சின்னப்பம்பட்டியிலிருந்து வீடு வரை வரவேற்பு வழங்கினர் வரவேற்புக்குப் பின்பு, சின்னப்பம்பட்டி பள்ளி அருகில் உள்ள எங்களது இடத்தில் சின்ன மேடையில் வரவேற்பை ஏற்றுக்கொண்டு நடராஜன் பேசும் வகையில் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், நடராஜன் வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் பயணித்து வருவதால் கொரோனா அச்சம் காரணமாகப் பொதுவெளியில் அதிகம் கூட்டம் சேர்க்கக்கூடாது. மேடை வேண்டாம் என்று சொன்னதால் மேடையை எடுத்துவிட்டோம். நடராஜனை வரவேற்க இவ்வளவு பேர் திரண்டு வந்திருந்தது எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது," என்றார்.
நடராஜன் குடும்ப நண்பரான வேலு, "நட்டு என்றழைக்கப்படும் நடராஜன், நெட் பவுலராகதான் இந்திய அணில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். அவருக்குக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். சின்னப்பம்பட்டியிலிருந்து சிட்னிக்குச் சென்று வெற்றியோடு வந்துள்ள அவருக்கு மேள தாளத்துடன், வான வேடிக்கையுடன், பட்டாசு வெடித்துச் சிறப்பான வரவேற்பு கொடுத்து பேருந்து நிலையத்திலிருந்து வீடு வரை அழைத்து வந்தோம். இது எங்களுக்கு இரண்டாவது தீபாவளியாக அமைந்து விட்டது. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது ஊருக்கே பெருமையாக உள்ளது. நடராஜன் உலகக்கோப்பையில் இடம் பெற்றால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். யார்க்கர் பந்து வீச்சின் மூலம் பல விக்கெட்டுகள் எடுத்து நாட்டுக்கு நட்டு பெருமை சேர்க்க வேண்டும்," என்றார்.
நடராஜனின் மறுபக்கம்: வறுமையின் பிடியில் "அந்த 15 ஆண்டுகள்"
நடராஜன் பிரத்யேக பேட்டி: சின்னப்பம்பட்டி டூ ஆஸ்திரேலியா - “நான் சாதித்தது எப்படி?”
மேலும், "நடராஜனுக்கு இன்னும் சிறந்த முறையில் வரவேற்பு கொடுத்திருப்போம். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக மேடை அமைக்க அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், அவரை வரவேற்க, சேலம் மாவட்டத்தின் மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பலர் வருகைதந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது," என்றார்.
சேலம் நகரத்திலிருந்து நடராஜனைக் காண வருகைதந்திருந்த சுகுணராஜ், "சின்னப்பம்பட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற நடராஜன், ஒரு நாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் வாய்ப்பு கிடைத்து தன்னை நிரூபித்துள்ளார். இன்றைக்கு சின்னப்பம்பட்டி ஊரே ஒன்று திரண்டு சாரட் வண்டியில் கேரள மேளத்துடன் வரவேற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது," என்றார்.
நான்கு மணி வரை நடராஜனை வரவேற்பதற்காக 100-க்கும் குறைவான இளைஞர்களே திரண்டு இருந்தனர். இரண்டு மணி அளவில் நடராஜன் வருகை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றப்பட்டது என்ற செய்தி பரவி, சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் திரண்டு வந்து நடராஜனை வரவேற்பில் கலந்து கொண்டனர்.
நடராஜன் வருகைக்காகக் காவல் துறையைச் சார்ந்தவர்களும், சுகாதாரத் துறையினரும் காத்திருந்தனர். ஆனால், அளவு கடந்த கூட்டத்தால் நடராஜனுக்கு அருகில் சென்று ஆலோசனை வழங்க முடியாமல் கலைந்து சென்று விட்டனர்.
நடராஜன் சாரட் வண்டியில் ஏறிய போது அவருடன் காவல் துறையைச் சார்ந்த ஒருவரும் அந்த வண்டியில் ஏறிக்கொண்டார். நடராஜன் முக கவசமும், கைகளில் கிளவுசும் அணிந்திருந்தார். கை குலுக்க பலரும் முண்டியடித்த போது சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலைச் சுட்டிக்காட்டினார் நடராஜன். வரவேற்பின்போது சாலையின் இரண்டு பக்கமும் திரண்டிருந்த நண்பர்கள், உறவினர்கள், அறிமுகமானவர்கள் அனைவரிடமும் கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தார் நடராஜன்.
நடராஜன், தனது இளமைக்காலத்தில் 10-10-க்கு என்ற அளவில் உள்ள ஓட்டு வீட்டில்தான் வளர்ந்துள்ளார். இந்த வீடு சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் முன்பகுதியிலேயே தனது அம்மா கடை வைத்திருந்தார். தற்போது சாலை விரிவாக்கம் செய்து வருவதால் அந்த வீட்டின் முன்பகுதி எடுக்கப்பட்டுள்ளது. நடராஜனின் வரவேற்பு சாரட் வண்டி பழைய வீட்டைக் கடந்து செல்லும்போது இதுதான் நாங்கள் வசித்து வந்த வீடு என்று காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்தார் நடராஜன். மேலும், பழைய வீட்டுக்கு அருகில் உள்ளவர்களைப் பார்த்து கை கூப்பி வணங்கி நன்றி தெரிவித்தார். நடராஜன் படித்த பள்ளிக்கு அருகே சென்ற போது, வண்டியை ஒரு நிமிடம் நிறுத்தி வணங்கியவர், ஆசிரியர்கள் வழங்கிய பொன்னாடையையும் வாங்கிக்கொண்டார்.