ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (21:43 IST)

முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் - நடிகர் தர்ஷன் வரவேற்பு

பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்து, ஈழத்தமிழர்கள் சிலர் எதிர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
 
முத்தையா முரளிதரன் தமிழராக இருந்த போதிலும், ஒருநாளும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக செயற்பட்டதில்லை எனவும், சிங்களவர்களுக்கு சாதகமாகவே அவர் செயற்பட்டுள்ளதாகவும் ஈழத் தமிழர்கள் சிலர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்களை கடந்த காலங்களில் பகிர்ந்து வந்திருந்தனர்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழர்கள் வசித்த பகுதிகளில் இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்திய தமிழர்களின் வாழ்விடத்தை அழித்ததாக கூறியுள்ள ஈழத் தமிழர்கள், இந்த சந்தர்ப்பத்திலும் முத்தையா முரளிதரன் சிங்களவர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
 
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சரியானதா என இலங்கை தமிழர்களிடம் நாம் வினவினோம்.
 
இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜத்திடம் பி.பி.சி தமிழ் வினவியது.
 
ஈழத்தமிழ் பிரச்சினையும், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக நடிக்கும் விஜய் சேதுபதியின் நிலைப்பாட்டையும் ஒன்றிணைத்து கருத்து வெளியிடுவது முற்றிலும் தவறான விடயம் என பிரபல ஊடகவியலாளரம் நிர்ஷன் இராமானுஜன் தெரிவித்தார்.
 
முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக்கும், ஈழத் தமிழர்களின் வாழ்க்கை முறைமைக்கும் இடையில் எந்தவித தொடர்புகளும் கிடையாது என சுட்டிக்காட்டிய அவர், முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை, விஜய் சேதுபதி ஒரு நடிகர் என்ற கோணத்திலிருந்து பார்த்து நடிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் கூறினார்.
 
இந்த இரண்டு விடயங்களையும் ஒப்பிட்டு கோர்வையாக பார்வையிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.
 
இலங்கையில் முன்பு காணப்பட்ட நிலைமை வேறு, தற்போது காணப்படுகின்ற நிலைமை வேறு என கூறிய நிர்ஷன் இராமானுஜம், நாட்டில் தற்போது அவ்வாறான சர்ச்சைக்குரிய நிலைமை கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.
 
இலங்கையில் யுத்தம் இல்லாத பின்னணியில், நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தமிழர்களுக்கு சில பிரச்சனைகள் காணப்படுகின்ற நிலையில், அதனை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விஜய் சேதுபதியின் தீர்மானத்தை கைவிடும் பட்சத்தில் மாத்திரமே இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கப்படும் என எண்ணுவார்களாயின், அது முற்றிலும் தவறான விடயம் என பிரபல ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜம் குறிப்பிடுகின்றார்.
 
விஜய் சேதுபதியின் துறைசார்ந்த விடயத்திற்கு அமைய, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது அவரது சரியான தீர்மானம் எனவும் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜம் கூறுகின்றார்.
 
விஜய் சேதுபதியின் தீர்மானம் தொடர்பில் இலங்கையின் பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ், பி.பி.சி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
 
சிலர் தமது சட்டை பையை நிரப்பிக் கொள்வதற்காக சில பிரச்சினைகளை தூண்டி விடுவதாகவும், முத்தையா முரளிதரன் மற்றும் விஜய் சேதுபதி தொடர்பிலான பிரச்சினையும் அதில் ஒரு அங்கம் எனவும் இலங்கையின் பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் கூறினார்.
 
விளையாட்டை விளையாட்டாகவும், கலையை கலையாகவும் பார்த்து ரசித்தால் எந்தவித பிரச்சினையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
 
இலங்கைளிலுள்ள ஒரு தமிழனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தென்னிந்திய திரையுலகம் தயாராகியுள்ள நிலையில், அதனை தாம் வரவேற்பதாக தர்ஷன் தர்மராஜ் கூறுகின்றார்.
 
எவ்வாறான பிரச்சனைகள் வந்தாலும், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் விஜய் சேதுபதி நிச்சயம் நடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என இலங்கையின் பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் வேண்டுக்கோள் விடுக்கின்றார்.
 
முத்தையா முரளிதரனின் நிலைப்பாடு
 
தனது வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க மறுப்பது தொடர்பில் தனக்கு இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார்.
 
தனது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் திட்டமிட்ட வகையில் எடுக்கப்படும் என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
 
விளையாட்டு, அரசியல் மற்றும் கலை ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்றாக முடிச்சு போட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
எது எவ்வாறாயினும், திட்டமிட்ட வகையில் தனது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள், எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.