1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 10 ஜனவரி 2022 (11:28 IST)

மிளகாய் பொடியை நுகர வைத்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு!

70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு உறவினர் வீட்டில் 70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த, தாயின் விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழந்த செய்தி 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது:
 
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜா-மணிமேகலை. இத்தம்பதியின் மூத்த மகள் மகாலட்சுமி (10). சிறுமி மகாலட்சுமி, அடிக்கடி தன் பெற்றோரிடமிருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்து, அதில் திண்பண்டங்கள் வாங்குவார் என்றும், இதனால், மகளை மணிமேகலை கண்டித்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், ஜன.6 அன்று தன் மாமா முருகன் வீட்டுக்கு சிறுமி சென்ற நிலையில், அங்கு 70 ரூபாயை திருடியதாக, முருகன் மணிமேகலையிடம் கூறியுள்ளார்.
 
இதையடுத்து, சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துவந்து, தண்டனையாக, சுடுநீரில் மிளகாய் பொடியை கலந்து நுகரச்செய்துள்ளார் மணிமேகலை. மேலும், சிறுமியின் வாய் மற்றும் தொடையில் சூடு போட்டுள்ளார்.
 
மிளகாய் பொடியை நுகர்ந்ததால் இரண்டு நாட்களாக சாப்பிட முடியாத நிலையில் இருந்த சிறுமி மகாலட்சுமி, நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மணிமேகலை கைது செய்யப்பட்டார்.