1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 10 மே 2018 (17:44 IST)

முகமது சாலா : அரபு கால்பந்து உலகத்தை ஊக்குவிக்கும் "எகிப்திய மன்னர்"

லிவர்பூல் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா (மோ சாலா என்றும் அழைக்கப்படுகிறார்), தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை எகிப்தைச் சேர்ந்த சமூக வலைத்தள பயனர்கள் பெருமையுடன் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இந்த பெருமையைப் பெற்றுள்ள முதலாவது எகிப்தியர் இவர் என்பதும் இதற்கு முக்கிய காரணம்.



இந்த விருதைப் பெற்ற இரண்டாவது ஆப்பிரிக்க கால்பந்து விளையாட்டு வீரர் இவர். இதற்கு முன்னதாக லீகெஸ்டர் நகரத்தைச் சேர்ந்த அல்ஜீரியாவின் மிட்பீல்டர், ரியாத் மஹ்ரேஜ் 2016ல் இந்த விருதைப் பெற்றுள்ளார். 25 வயதான சாலா, இந்த கால்பந்து சீசனில் 31 பிரீமியர் லீக் கோல்கள் போட்டுள்ளார். (இது லூயிஸ் சுவாரேஜ், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அலன் ஷியாரெர் ஆகியோரின் 38 போட்டிகளில் பெற்ற சாதனைகளுக்கு இணையானது) இன்னும் 3 லீக் போட்டிகள் பாக்கி இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகமது சாலா : லிவர்பூல் முன்கள வீரர். இந்த ஆண்டிற்கான சிறந்த பி.எப்.ஏ. பிளேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எகிப்தில், அவரது சாதனை முன் பக்க செய்தியாக வந்தது. " மேதை முகமது சாலா" என்ற ஹேஷ்டேகுடன் செய்தி 25,000 முறைக்கு மேல் பகிரப்பட்டது. லிவர்பூல் கால்பந்து அணியின் ரசிகர்கள் முகமது சாலாவிற்கு "எகிப்தின் அரசன்" என்று பெயரிட்டனர்.

எகிப்து நடிகை ராஷா மஹ்தி உள்பட பலரும் சாலாவின் படத்துடன் எகிப்திய பண்டைய அரசரின் பொதுப்பெயரான பரோவா என்று டுவீட் செய்தனர்.சாலா எகிப்தின் தேசிய சின்னம் ஆனார். கடந்த ஆண்டு, காங்கோவுடன் நடைபெற்ற போட்டியில் 95வது நிமிடத்தில் அவர் போட்ட பெனால்ட்டி கோல் காரணமாக 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற எகிப்திய தேசிய அணி, உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க 1990க்குப் பிறகு முதல் முறையாக தகுதி பெற்றது.



அவரை கவுரவப்படுத்தும் விதமாக தெருக்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டன. பசியோன் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. எகிப்திய அதிபர் அப்தெல் ஃபட்டா அல் சிசி அவரை கடந்த ஜனவரி மாதம் வரவேற்றார்.அதிபர் அல்-சிசி 2014 மே மாதம் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக அவர் ராணுவ புரட்சி மூலம் அவரது முஸ்லிம் பிரதர்ஹூட் கட்சியின் அதிபர் முகமது மோர்சியை அகற்றியிருந்தார். முஸ்லிம் பிரதர்ஹூட் கட்சி எகிப்தில் இப்போது தடைவிதிக்கப்பட்ட கட்சியாகும்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் அவரை இப்போது பாராட்டி வருகின்றன. அரசு ஆதரவு கட்சிகளும், முஸ்லிம் பிரதர்ஹூட் கட்சி ஆதரவாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். முஸ்லிம் பிரதர்ஹூட் கட்சியின் ஆதரவாளரான மனித உரிமைகள் போராளி ஹேய்தம் ஆபோக்காலி கூறுகையில் சாலாவின் விருது " இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கிறது. சரியான வாய்ப்புகளும் முயற்சியும் இருந்தால் சிறப்பினை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இது தருகிறது" என்றார்.

எகிப்திய அதிபருடன் சாலா சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டவர்கள் பற்றிக் கூறுகையில், "சிசியுடன் கேப்டன் சாலா இருக்கும் படங்களை பகிர்ந்து கொள்பவர்கள், நோயாளிகள் பிரிவில் அடைக்கப்பட விரும்பும் சிறுபான்மை கூட்டத்தினர்" என்றார்.

சாலாவை பாராட்டி பல்வேறு அரசு அமைப்புகளும் அறிக்கைகளை விடுத்துள்ளன. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் "சாலா, தேசியப் பெருமிதம் மற்றும் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக விளங்குபவர்" "எகிப்து மற்றும் ஆப்ரிக்க இளைஞர்களுக்கு உண்மையான ஊக்கமளிப்பவர்" என்று குறிப்பிட்டுள்ளனர். சாலாவுக்கு புகழாரம் சூட்டி "லட்சோப லட்சம் எகிப்தியர்கள் மகிழ்ச்சிக்கு காரணமானவர்" என்று கூறனார் எகிப்திய பிரீமியர் லீக் சைட் ஜமாலெக் கிளப்பின் தலைவர் மேர்ட்டடா மன்சோர். தனக்கு முன்பு தலைவராக இருந்தவர்களில் ஒருவர் 2011ஆம் ஆண்டு சாலாவை ஒப்பந்தம் செய்ய மறுத்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாலா தன் ஆரம்பகாலங்களில் சந்தித்த இடர்களே அவரது இந்த தீர்க்கமான வெற்றிக்கு காரணம் என்கிறார் மஹ்மூத் முகமது என்ற அரசியல் தொண்டர். "முகமது [சாலா] எதிர்த்தார், போராடினார்" என்று அவர் டுவீட் செய்தார். " ஓரிரு தோல்விகளை தழுவினார், ஆனால் அவர் முயற்சியைக் கைவிடவில்லை. அவர் கனவை நிறைவேற்றினார்" என்றும் குறிப்பிட்டார்.
கால்பந்து வீரரின் பெயர், மத்திய கிழக்கிலும் ஆப்ரிக்காவின் பிற பகுதிகளிலும் எதிரொலித்துள்ளது, அவர் பெயர் ஆன்லைனில் டிரெண்டிங்காக உள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட விருது, எகிப்துக்கு மட்டும் அல்ல மொத்த அரபு உலகிற்கும் சேர்த்து என்று அவர்கள் கூறுகின்றனர்.

செளதியின் சமூக வலைத்தள பயனர் தாரீக் அல் நோஃபாய், சாலா சுவிட்சர்லாந்தின் பசேல் அணியின் சார்பில் விளையாடியபோது கொடுத்த பேட்டியின் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
" சோர்வடைந்தவர்களுக்கும், நடைமுறைக்கு அப்பாற்பட்ட கனவு காண்பவர்களுக்கும் நம்பிக்கையை கொடுக்கும் விதமாக இந்த பேட்டி அமைந்தது," என்று அவர் டுவீட் செய்திருந்தார்.
லெபனான் பாடகி யாரா விருதினை கையில் ஏந்தியிருக்கும் சாலாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். "எகிப்திற்கும் அனைத்து அரேபியர்களுக்கும் வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

இந்த விருதினை பெற்றதற்கு தான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளதாகவும், சாலா குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு வீரர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இந்த விருது பெரும் கவுரவம் என்றும் அவர் கூறினார்.