நரேந்திர மோதி Man vs Wild பியர் கிரில்ஸ்: காட்டில் என்னென்ன சாகசங்களை செய்யப்போகிறார் நரேந்திர மோதி?

Last Updated: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (17:12 IST)
டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான மேன் vs வைல்ட் ஷோவில் ஆகஸ்ட் 12ஆம் தேதி (இன்று) அத் தொடரின் நாயகன் பியர் கிரில்சுடன் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தோன்றுகிறார்.


யார் இந்த பியர் கிரில்ஸ்?

பிரிட்டனை சேர்ந்த பியர் கிரில்ஸ் ஒரு முன்னாள் ராணுவ வீரர். பிரிட்டன் ராணுவத்தின் சிறப்பு அதிரடி படையில் விமானப் பிரிவில் பணியாற்றிவர். ஆனால் இவருக்கு எழுத்தாளர், தொலைக்காட்சி நெறியாளர் என்று பல முகங்கள் உண்டு.

டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியின் நாயகன் இவர்தான். ஆள் அரவமற்ற காடுகளில், மலைகளில், பாலைவனத்தில், பனிப் பிரதேசத்தில், எரிமலை அருகில் தொலைக்காட்சி குழுவினருடன் இறக்கிவிடப்படுவார் பியர் கிரில்ஸ், பல கிலோ மீட்டர்கள் அந்தக் கடுமையான சூழ்நிலைகளில் பயணித்து, அங்கு கிடைக்கும் இயற்கையான, தாவர, மாமிச உணவுகளை உப்பு சப்பில்லாமல் சாப்பிட்டு உயிர் பிழைத்து, மனிதர்கள் வாழும் பகுதிக்கு எப்படி தப்பித்து செல்கிறார் என்பதே ஷோவின் ஈர்ப்பு.
இந்த சாகசப் பயணங்களுக்கு தம் படப்பிடிப்புக் குழுவினரோடு செல்வார் கிரில்ஸ்.

எல்லா சவால்களையும் முறியடித்து பியர் எப்படி உயிர்பிழைக்கிறார் என்பதே இந்த ஷோ. குறிப்பிட்ட நேரத்தில் சரியான திட்டமிட்ட இலக்கை கிரில்ஸ் அடையும்போது ஷோ முடியும்.

பிரிட்டனில் வெற்றிகரமாக ஓடிய இந்த ஷோ தற்போது சில ஆண்டுகளாக மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவில் ஒளிபரப்பப்படுகிறது. 15 பகுதிகள் கொண்ட இத்தொடரின் முதல் ஷோ 2006ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி ஒளிப்பரப்பானது.

தன்னுடைய பணிக் காலத்தில், காடுகள் மற்றும் மலைகளில் தான் கற்ற பாடங்களை நடைமுறையில் இவர் பயன்படுத்துவார். தன்னுடன் ஒரே ஒரு பையை மட்டுமே கொண்டு செல்லும் பியர் கிரில்ஸ், தண்ணீர், உணவு என எதையுமே கொண்டு செல்ல மாட்டார்.

பயணத்தின்போது வனாந்திரங்களில் தென்படும் உயிரினங்களை சாப்பிட்டும், ஓடை நீரை குடித்தும் இரவை கழிப்பார். இப்படியான ஒருவரோடு இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் இணைந்தால் என்னாகும்?
 

நரேந்திர மோதியின் தெரியாத பக்கங்கள்

இன்று காலை டீஸர் வீடியோ ஒன்றை வெளியிட்ட பியர் கிரில்ஸ், 180 நாடுகளை சேர்ந்த மக்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தெரியாத பக்கங்களை தெரிந்துகொள்ள உள்ளனர் என்றும், சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவர் கலந்து கொள்கிறார் என்றும் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோதியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து பியர் கிரில்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 

"வெல் கம் டூ இந்தியா"

4 வீல் டிரைவ் காரில் காடுகளுக்கு மத்தியில் பயணப்பட்டு கொண்டிருக்கிறார் நரேந்திர மோதி. பியர் கிரில்ஸ் ஆவலோடு காத்திருக்கிறார். பியரை பார்த்த மகிழ்ச்சியில், வெல் கம் டூ இந்தியா என்று வரவேற்கிறார் மோதி. இப்படியாக விரிகிறது அந்த ஷோவின் டீசர். பின்பு, அடர்ந்த வனப்பகுதிகளில் மோதியை அழைத்து செல்வது, தற்காலிகமாக தயாரிக்கப்பட்ட படகில் பயணிப்பது என பல சிலிர்ப்பூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

காட்டில் என்னென்ன சாகசங்களை செய்யப்போகிறார் பிரதமர் நரேந்திர மோதி?

பியர் கிரில்ஸ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து பேசியுள்ளார். பிரதமர் மோதி குறித்தும் அவருடன் பயணித்தது குறித்தும் அவர் விவரித்தார்.
"நாங்கள் சென்ற உத்தரகண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் மோசமான காலநிலை உள்ளிட்ட பல்வேறு சூழல்கள் இருந்தும், அதனை தைரியமாக எதிர்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

நெருக்கடியான சூழலில் கூட அவர் அமைதியாகவும் உற்சாகமாகவும் இருந்ததை காண முடிந்தது.
 
எப்போதும் நீங்கள் அரசியல்வாதிகளை மேடையில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், காடுகளுக்கு அனைவரும் ஒன்றுதான். அங்கு பயணிக்க தைரியமும் அர்ப்பணிப்பும் வேண்டும்.

நாங்கள் அங்கிருந்தபோது கடினமான சூழ்நிலை நிலவியது. கனமழை பெய்தது. ஆனால், அந்தப் பயணம் முழுவதும் அனைத்து நெருக்கடியிலும் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருந்தார் பிரதமர் மோதி. அதனை பார்க்க நன்றாக இருந்தது. நெருக்கடியின் போதுதான் ஒருவர் யார் என்று தெரியவரும்.
 
பயணம் முழுவதும் அவர் பணிவுடன் இருந்தார். கடுமையான மழை நேரத்திலும்கூட அவர் முகத்தில் புன்னகையை பார்க்க முடிந்தது.
மழையின்போது அவரது பாதுகாப்பு குழுவினர் குடையை எடுக்க முயற்சித்தபோது, 'இல்லை தேவையில்லை' என்று கூறினார் பிரதமர்.

பின்பு நதியை அடைந்தோம். அங்கு கிடைத்தவற்றை வைத்து நான் சிறு படகு தயார் செய்தேன். அதனை வைத்து நதியை கடந்துவிடலாம் என்று நான் நினைத்தபோது, அதில் பிரதமர் மோதி பயணிக்க அனுமதிக்க முடியாது என்று அவரது பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துவிட்டனர். ஆனால் மோதி பரவாயில்லை நாம் சேர்ந்து பயணிக்கலாம் என்றார்.

இதில் மேலும் படிக்கவும் :