1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 3 மே 2021 (11:10 IST)

தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின் - பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சி!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் விரைவில் பதவியேற்கவிருக்கிறார். அவரது தலைமையிலான அரசு, 155க்கும் அதிகமான பலத்துடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது.
 
இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய முதல்வராகவிருக்கும் மு.க. ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை சென்றுள்ளார்.
 
இதையொட்டி தேர்தல் வெற்றிக்காக கோபாலபுரத்தில் உள்ள தாயாரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார்.
 
பிறகு அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்ற ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
 
இதையடுத்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் ஸ்டாலின், திமுக சட்டப்பேரவை குழுவை கூட்டி அதன் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்த வார இறுதிக்கு முன்பாக திமுக பதவியேற்பு விழாவை நடத்துவது குறித்தும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தக்கூடும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
திமுக அணிக்கு எத்தனை வாக்குகள்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் விவரம் இன்று பகல் 12 மணிக்குள் முழுமையாக அறிவிக்கப்படவுள்ளன. காலை 9.30 மணி நிலவரப்படி திமுக 122 இடங்களில் வென்றுள்ளதாகவும் 11 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வென்றுள்ளது, இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு இடதுசாரி கட்சிகளும் தலா இரண்டுகளில் வென்றுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணி 147 இடங்களில் வென்றுள்ளது. 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
 
மறுபுறம் அதிமுக கூட்டணியில் அதிமுக 64 இடங்களில் வென்றுள்ளது. இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணியில் உள்ள பாஜக மூன்று இடங்களில் வென்றுள்ளது, ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. பாமக ஐந்து இடங்களில் வென்றுள்ளது. இதன்படி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 72 இடங்களில் வென்றுள்ளது. 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
 
இந்த நிலையில், திமுக ஆட்சி அமைப்பது உறுதியானதையடுத்து, அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே உள்பட பல்வேறு கட்சிகளின் தலைர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
ஞாயிற்றுக்கிழமை மாலையில் தமது தேர்தல் வெற்றி தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதையடுத்து, கொளத்தூரில் உள்ள தேர்தல் அலுவலரிடம் சென்று தனது வெற்றிச்சான்றிதழை மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகம் ஒரு பாதாளத்திற்கு போயிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்து அதை சரி செய்ய திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கி உள்ளனர். எந்த எதிர்பார்ப்போடு எந்த நம்பிக்கையுடன் அந்த வெற்றியை தந்துள்ளனரோ அதற்கேற்ற வகையில் பொறுப்பை உணர்ந்து எங்கள் ஆட்சி அதை நிறைவேற்றி தரும். எங்களை எல்லாம் ஆளாக்கிய கருணாநிதி ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்து தமிழக மக்களுக்கு ஆற்றிய பணிகளை உணர்ந்து உள்ளோம். அவர் வழி நின்று ஆறாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்கக் கூடிய தி.மு.க. ஆட்சியில் அதை நிறைவேற்றுவோம்," என்று ஸ்டாலின் கூறினார்.
 
கருணாநிதி இருந்த காலத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என எண்ணியிருந்தோம். அது நிறைவேறாமல் போய் விட்டது. அது ஒரு ஏக்கமாக இருந்தது. அந்த ஏக்கம் இன்று ஓரளவுக்கு போயிருக்கிறது. மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பை ஏற்று எங்களுக்கு வாக்களித்தவர்கள், 'இவர்களுக்கு ஓட்டளித்தது தான் நல்லதே' என மகிழும் வகையிலும், வாக்களிக்காதவர்கள், 'இவர்களுக்கு ஓட்டளிக்காமல் சென்று விட்டோமோ' என நினைக்கும் வகையிலும் எங்கள் பணி தொடரும் என்று ஸ்டாலின் கூறினார்.
 
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நாங்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து படிப்படியாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்தல் அறிக்கை தந்துள்ளோமோ அதேபோல தொலைநோக்கு பார்வையுடன் ஏழு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அதை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். எங்கள் கடமையை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
 
திங்கட்கிழமை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முறையாக கட்சியின் சட்டப்பேரவை தலைவரை தேர்வு செய்வோம். அதன்பின் அதிகாரிகளுடன் கலந்து பேசி பதவியேற்பு தேதியை முடிவு செய்து அறிவிப்போம். கொரோனா காலத்தை மனதில் வைத்து பதவி ஏற்பு நிகழ்ச்சியை எளிமையாக ஆளுநர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளோம். தேதியை விரைவில் அறிவிப்பேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.