1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (14:36 IST)

மலேசிய அரசியல்: நள்ளிரவில் விலகிய அம்னோ கட்சி; மொகிதின் அரசு கவிழ்கிறதா?

மலேசியாவில் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி (பெரிக்கத்தான் நேசனல்) அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக மலேசிய அரசியல் களத்தில் நீடித்த பரபரப்பின் முடிவில், அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அம்னோ (UMNO) கட்சி நேற்று நள்ளிரவு  அறிவித்தது.
 
இதையடுத்து பிரதமர் மொகிதின் யாசின் பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அம்னோ கட்சித் தலைவர் சாஹித் ஹமிதி வலியுறுத்தி உள்ளார்.
 
இதையடுத்து மலேசிய மாமன்னர், நடப்பு அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா, இடைக்கால பிரதமரை நியமிப்பாரா, அல்லது எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்குமா எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து மலேசியாவில் அவசர நிலை அமலில் உள்ளது. மேலும் முழு முடக்க நிலையுடன் கூடிய நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணையும் (MCO - Movement Control Order) பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இத்தகைய சூழலில் நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அவசர நிலை குறித்து  நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவை முன்வைத்தன.
 
இது தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் அழைத்து கருத்துக்களைக் கேட்டறிந்தார் மாமன்னர். அதன் பின்னர் நாடாளுமன்றத்தை 'இயன்ற விரைவில்' கூட்ட வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
 
எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அவசர நிலை முடிவுக்கு வருவதால், அதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், ஜூலை 26 முதல் ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அன்வாருக்கு ஆதரவு இல்லை என அம்னோ திட்டவட்டம்
 
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே ஆளும் அரசாங்கத்தில் இருந்து அம்னோ கட்சி விலகும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் ஒரு தகவல் வலம் வந்தது.
 
ஒரு கட்டத்தில், அன்வாரை தாம் ஆதரிப்பதாக அம்னோ கட்சியின் தலைவர் சாஹித் ஹமிதி பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். எனினும், அன்வார் தம்மை  ஆதரிக்கும் எம்பிக்களின் பட்டியலை மாமன்னரிடம் அளிக்க இயலாததால் ஆட்சியமைக்க முடியவில்லை.
 
அம்னோ கட்சி, மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் கட்சி என்பதுடன், நாடு சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 2018ஆம் ஆண்டு 14ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும்  வரை ஆட்சியில் இருந்த கட்சியாகும். எனவே, அக்கட்சித் தலைமை எடுக்கும் முடிவு இந்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில்  சந்தேகமில்லை.
 
அந்த வகையில், அம்னோ கட்சியின் உச்ச மன்றம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அதிரடி முடிவை எடுத்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவு அம்னோ தேசியத்  தலைவர் இந்த முடிவை அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் பதவியில் இருந்து மொகிதின் யாசின் விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
 
இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியதை அடுத்து, மலேசிய அரசியல் களத்தில் அடுத்து என்ன நடக்கும் எனும்  எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு திருப்பமாக, முன்பு தாம் ஆதரித்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமர் ஆவதற்கு தற்போது அம்னோ ஆதரவு  அளிக்காது என்றும் சாஹித் ஹமிதி தெளிவுபடுத்தி உள்ளார்.
 
எனவே, தனக்குள்ள பெரும்பான்மையை அன்வாரால் நிரூபிக்க இயலுமா என்பதை அரசியல் பார்வையாளர்களால் கணிக்க முடியவில்லை.
 
நள்ளிரவில் முடிவை அறிவித்த அம்னோ தேசியத் தலைவர்
 
அவசர நிலை அமலில் இருப்பதாலும், முழு முடக்க நிலையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருப்பதாலும் அம்னோ உச்ச மன்றக் கூட்டம்  நேற்று இரவு இணையம் வழியிலான காணொளி வசதி மூலம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அரசாங்கத்துக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது குறித்து  சூடான விவாதம் நடைபெற்றது.
 
இது தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு ஆருடத் தகவல்கள் வலம்வந்தன. சாஹித் ஹமிதிக்கு கட்சியில் எதிர்ப்பு இருப்பதாகவும், பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகக் கூடாது என அவரிடம் வலியுறுத்தியதாகவும் 'மலாய் மெயில்' ஊடகச் செய்தி தெரிவித்தது.
 
இந்நிலையில், உச்ச மன்றக் கூட்டத்தின் இறுதியில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக சாஹித் ஹமிதி உறுதிபடத்  தெரிவித்தார்.
 
ஆளும் பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கத்துக்கு அம்னோ உச்ச மன்றம் ஏழு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்திருந்ததாகவும், அவற்றை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியதாக 'செல்லியல்' ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் இவ்விஷயத்தில் சரியாகச் செயல்படவில்லை என்றும், ஏழு கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் சாஹித் ஹமிதி  குற்றம்சாட்டினார்.
 
திடீரென நியமிக்கப்பட்ட துணை பிரதமர்
 
முன்னதாக, ஆட்சி கவிழாமல் இருக்க ஆளும் தரப்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. பிரதமர் மொகிதின் யாசின் அண்மைய சில  தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மருத்துவமனையில் இருந்தபடியே கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்துக்கு அவர் தலைமையேற்றார்.
 
இந்நிலையில், அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிராக முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சிலர் கருத்து  தெரிவித்திருந்தனர். அக்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் இது தொடர்பாக மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தி வந்தனர்.
 
இதனால் அம்னோ கட்சியில் பெரும் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
 
இந்நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக, அம்னோ உச்ச மன்றக் கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அக்கட்சியைச் சேர்ந்த  இஸ்மாயில் சப்ரி யாகூப்பை துணை பிரதமராகவும், ஹிஷாமுதின் துன் ஹுசேனை மூத்த அமைச்சராகவும் நியமிப்பதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் பிரதமர் மொகிதின் யாசின்.
 
இதனால் புதிய துணை பிரதமரான இஸ்மாயில் சப்ரி யாகூப்பின் செல்வாக்கு அம்னோ கட்சியில் அதிகரித்துள்ளது என்றும், சாஹித் ஹமிதி பதவி விலக  வலியுறுத்தப்படும் என்றும் தகவல் வெளியானது. ஆனால், கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர்களின் ஆதரவு சாஹித்துக்கு இருந்தபடியால், அவர் தாம் முன்பே  அறிவித்தபடி, ஆளும் பெரிக்கத்தான் அரசாங்கத்துக்கு அளித்து வரும் ஆதரவை அம்னோ கட்சி உடனடியாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
 
மேலும், இடைக்காலப் பிரதமரை நியமிக்க ஏதுவாக மொகிதின் யாசின் பதவி விலக வேண்டும் என அம்னோ வலியுறுத்துவதாகவும் சாஹித் ஹமிதி மேலும்  தெரிவித்துள்ளார்.
 
மலேசிய மாமன்னர் என்ன முடிவெடுப்பார்?
 
திடீர் அரசியல் திருப்பத்தை அடுத்து மலேசிய மாமன்னர் என்ன முடிவெடுப்பார் எனும் கேள்வி எழுந்துள்ளது.
 
நாடு கொரோனா நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் இடைக்கால ஏற்பாடாக ஒற்றுமை அரசாங்கம், அதாவது, அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் அரசாங்கம்  அமைக்கப்படுமா எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
இல்லையெனில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கப்படுமா என்றும் பேசப்படுகிறது.
 
பொதுத்தேர்தலை நோக்கிச் செல்கிறது மலேசியா: இரா.முத்தரசன்
 
இந்நிலையில், மலேசிய அரசியல் நகர்வுகள் அனைத்தும் அடுத்த பொதுத் தேர்தலை நோக்கிச் செல்வதாக அரசியல் விமர்சகர் இரா.முத்தரசன் பிபிசி தமிழிடம்  தெரிவித்தார்.
 
"தற்போது நாடு இருமுனை அரசியலை எதிர்கொண்டுள்ளது. மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் அம்னோ கட்சி, பிளவை எதிர்நோக்கி உள்ளது. ஒரு சாரார் நடப்பு  அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க, மற்றொரு தரப்பினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்கின்றனர்.
 
எனவே, அம்னோ தலைமை என்ன முடிவு எடுக்கும் என்பது முக்கியம்.
 
"இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவரும், நம்பிக்கை கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) தலைவரும் அன்வார் இப்ராஹிம் என்ன முடிவெடுப்பார் என்பது விரைவில் தெரிய வரும். அவர் ஆட்சி அமைக்க உரிமை கோருவாரா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் ஆட்சி அமைத்தாலும் அவருக்கும் நாடாளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை இருக்குமா என்பது யோசனைக்குரிய கேள்வி.
 
"இவ்விரண்டு தரப்புகளின் முடிவுகளை அடுத்து பிரதமர் மொகிதின் யாசினின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கலாம். அவர் பதவி விலகுவாரா அல்லது  நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்த மாமன்னரிடம் பரிந்துரைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
"இந்த அரசியல் குழப்பங்கள் தலைதூக்குவதற்கு முன்பே இடைக்கால ஏற்பாடாக ஒற்றுமை அரசாங்கம் அமைக்கலாம் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர்  வலியுறுத்தி இருந்தார்.
 
அதாவது, அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும், நாடு கொரோனா நெருக்கடியில் இருந்து மீண்ட பிறகு தேர்தலை  நடத்தலாம் என்றும் தாமே இடைக்கால பிரதமராக பொறுப்பு வகிக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
 
"ஆனால், அதை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் வரவேற்கவில்லை. எனவே, ஒற்றுமை அரசாங்கம் அமைய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்," என்கிறார் இரா.முத்தரசன்.