1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (21:36 IST)

ஜி20 மாநாடு: டெல்லி அரசு குரங்குகளுக்கு கட்-அவுட் வைப்பது ஏன்?

இந்தியா தலைமை தாங்கி நடத்தும் ஜி20 மாநாட்டை நடத்த முழு முனைப்போடு டெல்லி தயாராகி வருகிறது. அதோடு கூடவே, டெல்லி அரசு குரங்குகளுக்கும் கட்-அவுட் வைத்து வருகிறது. ஏன் தெரியுமா?
 
இந்த ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
 
ஜி20 மாநாட்டைச் சிறப்பாக நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் மாநாட்டை நடத்துவதில் யாருமே எதிர்பார்க்காத ஒரு வினோத சிக்கல் எழுந்துள்ளது.
 
அதாவது, தலைநகர் டெல்லியில் பரவலாக குரங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. ஜி20 மாநாடு நடைபெறும் இடங்களிலும் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அவற்றின் நடமாட்டம் இருந்து வருகிறது.
 
 
டெல்லியில் பல்வேறு வகையான குரங்குகள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றன.
 
இந்த மாநாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை தர உள்ளனர்.
 
எனவே, மாநாடு நடைபெறும் நாட்களில், மாநாடு நடைபெறும் இடங்களில் குரங்குகளால் எவ்விதத் தொல்லையும் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை விழா ஏற்பாட்டாளர்கள் எடுத்து வருகின்றனர்.
 
குரங்குகளை விரட்டும் பணியில் லங்கூர்கள்
டெல்லியில் பல்வேறு வகையான குரங்குகள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றன.
 
இவற்றில் நீண்ட வாலும், கருமையான முகமும் கொண்ட ஆக்ரோஷ குணம் படைத்த லங்கூர் வகை குரங்குகள் முக்கியமானவை.
 
பிற வகை குரங்குகளைக் கட்டுப்படுத்தும் திறன்மிக்கவையாக இவை திகழ்கின்றன.
 
இதனால், லங்கூர் குரங்குகளைக் கொண்டு, பிற குரங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
 
"ஜி20 நிகழ்வுகளின்போது குரங்குகளால் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும்."
 
முக்கியமாக, சாம்பல் நிற லங்கூர் குரங்குகளின் பெரிய அளவிலான கட்- அவுட் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.
 
இதேபோல, இந்த குரங்குகளைப் போன்று ஒலிகளை எழுப்பும் பயிற்சி பெற்ற நிபுணர்களை மாநாடு நடைபெறும் இடங்களுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஜி20 நிகழ்வுகளின்போது குரங்குகளால் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
மேலும் மாநாட்டுக்கும், மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கும் எவ்வித தொந்தரவும் ஏற்படாமல் இருக்கும்படி, சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் லங்கூர் குரங்குகளைக் கொண்டு, பிற குரங்குகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
அதாவது, மாநாடு நடைபெறும் இடங்களைச் சுற்றி குரங்குகள் கூட்டமாக வர நேர்ந்தால், அவற்றை லங்கூர்களை கொண்டு விரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
குரங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், அவற்றால் ஏற்படும் நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றை அச்சுறுத்தும் வகையிலும் லங்கூர் குரங்குகளின் கட்- அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று அரசு மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
 
குரங்குகளை விரட்ட சிறப்பு பயிற்சியாளர்கள்
இதேபோன்று, குரங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக அறியப்பட்டுள்ள இடங்களிலும், மாநாட்டில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் தங்கும் விடுதிகளைச் சுற்றிலும் 30 முதல் 40 பேர் வரையிலான சிறப்பு பயிற்சியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
 
லங்கூர் வகை குரங்குகளைப் போல இவர்கள் ஓசை எழுப்பி, பிற குரங்குகளை குறிப்பிட்ட இடங்களுக்கு வராமலோ, விரட்டவோ செய்யும் பணியை மேற்கொள்வார்கள் என்று அதிகாரி சதீஷ் உபாத்யா கூறியுள்ளார்.
 
குரங்குகள் உணவு தேடி பல்வேறு இடங்களுக்கு அலைவதைத் தடுக்கும் விதத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அவற்றுக்கு உணவுகளை வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
குரங்குகளை சிறைபிடிப்பது அவற்றை கொடுமைப்படுத்துவதற்கு சமமான குற்றம் என்று விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் கண்டன குரல் எழுப்பினர்.
 
லங்கூர் வகை குரங்குகளை கொண்டோ, அவற்றை போன்று ஒலி எழுப்பும் சிறப்பு பயிற்சியாளர்களின் உதவியுடனோ குரங்குகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இதற்கு முன்பும் டெல்லியில் அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
 
நாடாளுமன்ற வளாகம் மற்றும் பிற அரசு கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டத்தைத் தடுக்க, லங்கூர்களை போன்று ஒலி எழுப்பும் 40 சிறப்பு பயிற்சியாளர்களை 2014 இல் அரசு நியமித்திருந்தது.
 
இந்த நியமனத்திற்கு முன், இந்தப் பணியில் சிறப்பு பயிற்சியாளர்களுக்குப் பதிலாக, லங்கூர் குரங்குகளை அரசு அதிகாரிகள் நேரடியாக ஈடுபடுத்தி வந்தனர்.
 
ஆனால், குரங்குகளை சிறைபிடிப்பது அவற்றை கொடுமைப்படுத்துவதற்கு சமமான குற்றம் என்று விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் கண்டன குரல் எழுப்பினர்.
 
இதையடுத்து குரங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் லங்கூர்களை ஈடுபடுத்துவதை அதிகாரிகள் கைவிட்டனர்.
 
கடந்த 2010ஆம் ஆண்டு, டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் குரங்குகள் நுழைவதையும், அவை விளையாட்டு வீரர்களை தாக்குவதை தடுக்கும் நோக்கிலும், 38 லங்கூர் குரங்குகளை அதிகாரிகள் களமிறக்கி இருந்தனர்.