திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (16:35 IST)

கேரளாவின் 'பேய் நகரம்': 2 மாடி வீட்டில் தனியாக வாழும் பெண் - 'காலியான ஊரில்' என்ன நடக்கிறது?

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா முந்தியுள்ள நிலையில், நாட்டின் சில பகுதிகளில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் சில பிரச்னைகள் எழுகின்றன.
 
அங்கு கர்ப்பம் தரிக்கும் பெண்களின் எண்ணிக்கை சராசரியை விட குறைந்துள்ளது. வேலை, கல்வி போன்ற காரணங்களால் இங்கு நடந்த இடப்பெயர்வால், முதியவர்கள் மட்டுமே வசிக்கும் பேய் நகரங்களாக சில ஊர்கள் மாறி இருக்கின்றன.
 
பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் கேரள மாநிலத்தில் உள்ள கும்பநாடு என்ற நகரத்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்த ஊர், முதியவர்கள் மட்டுமே அதிகம் வாழ்வதால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறது.
 
மாணவரை தேடி ஆசிரியர்கள்
பல ஆண்டுகளாக, கேரளாவின் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த ஊரில் உள்ள பள்ளிகள் ஒர் அசாதாரண சிக்கலை எதிர்கொள்கின்றன. இந்த பள்ளிகளில் மிகக்குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கின்றனர். பள்ளிக்கு புதிய மாணவர்கள் சேர்க்க ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து பல்வேறு கூடுதல் சுமைகளை சுமக்கின்றனர்.
 
கும்பநாட்டில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான அரசு நடுநிலைப் பள்ளியில் 50 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த எண்ணிக்கை 1980களின் பிற்பகுதி வரை சுமார் 700 ஆக இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
 
ஏழு மாணவர்கள் மட்டுமே படிக்கும் ஏழாம் வகுப்பில் தான் அதிக மாணவர்கள் உள்ளனர். 2016-ம் ஆண்டு இந்த வகுப்பில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே இருந்தார்.
 
பள்ளிக்கு போதுமான மாணவர்களை அழைத்து வருவது இந்த ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கிறது. இங்கு பணியில் உள்ள 8 ஆசிரியர்களும் தங்களது சொந்த சம்பளத்திலிருந்து மாதந்தோறும் 2,800 ரூபாயை மாணவர்களுக்காக செலவு செய்கின்றனர். இந்த தொகை, மாணவர்களை வீட்டில் இருந்து பள்ளிக்கும், பின்பு மாலையில் மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்லும் ஆட்டோக்களுக்காக செலவாகிறது.
 
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய, ஆசிரியர்கள் வீடு வீடாக தேடிச் செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள சில தனியார் பள்ளிகள் கூட மாணவர்களைத் சேர்க்க ஆசிரியர்களை வீடுகளுக்கு அனுப்புகின்றன. இங்குள்ள மிகப்பெரிய பள்ளியில் அதிகபட்சமாக 70 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.
 
வழக்கமான பள்ளிகளில் கேட்கும் மாணவர்கள் பாடம் படிக்கும் ஓசை ஏதுமின்றி, அமைதியாக இருந்தது அந்த நடுநிலைப்பள்ளி. அங்குள்ள இருண்ட, அமைதியான வகுப்பறைகளில் சில குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்துக் கொண்டு இருந்தனர்.
"எங்களால் என்ன செய்ய முடியும்? பெரியளவில் மக்கள் வசிக்காத இந்த ஊரில் எப்படி குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் அதிகமாக இருக்கும்" என பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயதேவி குறிப்பிட்டார்.
 
அவர் சொல்வது சரிதான். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கும்பநாடு பகுதியில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. அத்துடன் வயது முதிர்ந்த மக்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாக இருக்கிறது.
 
பரந்த நிலப்பரப்பு - காலியான வீடுகள்
 
இங்குள்ள 47% மக்கள் 25 வயதிற்குட்பட்டவர்கள். இந்த ஊரின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு மடங்கு நபர்கள் 1990களின் முற்பகுதியில் பிறந்தவர்கள்.
 
கும்பநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள அரை டஜன் கிராமங்களில் சுமார் 25,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள 11,118 வீடுகளில் சுமார் 15% வீடுகள் பூட்டப்பட்டு கிடக்கின்றன.
 
ஏனெனில் இந்த வீடுகளின் உரிமையாளர்கள் வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஒரு சில பெற்றோர் வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் மகன்/மகளுடன் வசிக்கின்றனர் என்று உள்ளூர் கிராம சபைத் தலைவர் ஆஷா சி.ஜே கூறுகிறார்.
 
இங்கு 20 பள்ளிகள் உள்ளன, ஆனால் மிகக் சொற்ப என்ணிகையில் மட்டுமே மாணவர்களே உள்ளனர் என்று ஆஷா கூறினார்.
 
இந்த ஊரிலுள்ள ஒரு அரசு மருத்துவமனை, 30-க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்கள், 3 முதியோர் இல்லங்கள் ஆகியவை வயது முதிர்ந்த மக்கள்தொகையை சுட்டிக்காட்டுகின்றன.
 
இரண்டு டஜனுக்கும் அதிகமான வங்கிகள், அதில் அரை கிலோமீட்டருக்குள் எட்டு வங்கிகள் என வெளிநாடுகளில் வசிக்கும் நபர்கள் அனுப்பும் பணத்தை பரிமாற்றம் செய்ய வங்கிகள் போட்டியிடுகின்றன.
 
கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட 100 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தில் சுமார் 10% கேரளாவுக்கு அனுப்பப்பட்டது.
 
2001 மற்றும் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், கேரளாவில் தான் இந்தியாவிலேயே குறைந்த எண்ணிக்கையில், மக்கள் தொகை அதிகரித்தது.
 
கேரளாவில் பிறக்கும் நபர்களின் சராசரி வாழ்நாள் 75 ஆண்டுகளாக இருக்கிறது. இந்தியாவின் தேசிய சராசரி 69 ஆக இருக்கிறது.
 
இடப்பெயர்வும், பின்னணியும்
 
கேரளாவின் இந்தப் பகுதியில் பெண்கள் கருவுறும் எண்ணிக்கையும் கடந்த 30 ஆண்டுகளாக குறைந்து வருக்கிறது. இங்கு சராசரியாக 1.7 முதல் 1.9 குழந்தைகள் மட்டுமே ஒரு தம்பதி பெற்றுக் கொள்கின்றனர்.
 
சிறிய குடும்பத்தின் மூலம், குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதை பெற்றோர்கள் உறுதி செய்கின்றனர். இதனால் படிப்பை முடிக்கும் இளைஞர்கள், தங்கள் பெற்றோரை வீட்டிலேயே விட்டுவிட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டிற்கு உள்ளேயும், வெளிநாடுகளுக்கு இடம் பெயர்கின்றனர்.
 
"கல்வி, வேலை, மேம்பட்ட வாழ்க்கை முறையை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடனே இவர்கள் இடம்பெயர்கிறார்கள்," என்று மும்பையில் இயங்கும் சர்வதேச மக்கள்தொகை நிறுவனத்தின் பேராசிரியர் கே.எஸ்.ஜேம்ஸ் கூறினார்.
 
"அவர்களின் சொந்த ஊர்களில் உள்ள வீடுகளில் வயதான பெற்றோர்கள் மட்டுமே வசிக்கின்றனர், அதிலும் பலர் தனியாக வாழ்கின்றனர்."
 
கும்பநாட்டில் உள்ள தனது இரண்டு மாடி வீட்டின் உயரமான உலோக பாதுகாப்பு கதவுகளுக்குப் பின்னால், 74 வயதான அன்னம்மா ஜேக்கப் பல ஆண்டுகளாக தனியாகவே வசித்து வருகிறார்.
 
பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக இருந்த இவரது கணவர் 1980 களின் முற்பகுதியில் இறந்தார். இவரது 50 வயது மகன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அபுதாபியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சில கிலோமீட்டருக்கு அப்பால் இவரின் ஒரே மகள் வசித்து வருகிறார். ஆனால் அவரின் கணவரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
 
அன்னம்மாவின் பக்கத்து வீட்டிலும் யாருமில்லை. ஒருவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு தனது பெற்றோரை பஹ்ரைனுக்கு அழைத்துச் சென்று விட்டார். மற்றொருவர் துபாய்க்குச் சென்ற பிறகு தங்கள் வீட்டை ஒரு வயதான தம்பதிக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர்.
 
வீட்டை சுற்றியுள்ள பரந்த நிலப்பரப்பில் மரவள்ளிக்கிழங்கு, வாழை, தேக்கு மரங்கள் நிறைந்துள்ளன. பசுமையான நிலப்பரப்பிற்கு மத்தியில், பரந்து விரிந்த முற்றங்களைக் கொண்ட பல அழகான வீடுகள் இங்கு காலியாக உள்ளன. அவற்றின் நடைபாதைகளில் மரத்தில் இருந்து விழுந்த உலர்ந்த இலைகள் சிதறிக் கிடக்கின்றன.
 
இயக்குவதற்கு ஆள் இல்லாத நிலையில், வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் தூசியால் மூடப்பட்டு இருக்கின்றன.காவல் நாய்களின் இடத்தை இப்போது சிசிடிவி கேமராக்கள் பிடித்துள்ளன.
 
தனிமையே துணை
 
மக்கள் நெருக்கம் மிகுந்த பரப்பரப்பான சாலைகள் அதிகம் காணப்படும் மற்ற இந்திய நகரங்கள் போல அல்லாமல், நேர்மாறான ஒரு காட்சியை கும்பநாட்டில் நம்மால் பார்க்க முடிகிறது.
 
பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வெறிச்சோடி கிடக்கும் பல ஊர்களை போல அல்லாமல், கும்பநாடு நகரம் சிதிலமடைந்து நிற்கவில்லை. இங்குள்ள வீடுகளுக்கு ஆண்டுதோறும் புதிதாக வண்ணம் பூசப்படுகிறது. ஆனால் யாருக்காக அவை சுத்தம் செய்யப்பட்டு வண்ணம் பூசப்படுகிறதோ, அவர்கள் பெரும்பாலும் வருவதே இல்லை.
 
"இது மிகவும் தனிமையான வாழ்க்கை. எனக்கும் உடல்நிலை சரியில்லை" என்று அன்னம்மா ஜேக்கப் கூறினார்.
 
இதய நோய், மூட்டுவலி இருந்தபோதிலும், அன்னம்மா தனது மகன், பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். மேலும் தனது குழந்தைகளுடன் ஜோர்டான், அபுதாபி, துபாய், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் விடுமுறையைக் கழித்துள்ளார்.
 
அவரது வரவேற்பறையில் சிதறிக் கிடக்கும் பொருட்கள் உலகத்துடனான அவரது தொடர்புகளைப் பற்றி நமது புரிதலைத் தருகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட பாராசிட்டமால் மாத்திரைகள், பிஸ்தா, முந்திரி பருப்புகள், சீனாவில் தயாரிக்கப்பட்ட கூஜாக்களில் வைக்கப்பட்ட காகித மலர்கள், இறக்குமதி செய்யப்பட்ட பாடி வாஷ் பாட்டில் என பல பொருட்கள் அங்கிருந்தன.
 
தனியாக வாழ 12 அறைகள் இருக்கும் பெரிய வீட்டை ஏன் கட்டினீர்கள் என்று கேட்டேன். "இங்கே எல்லோரும் பெரிய வீடு தான் கட்டுவார்கள். இது அந்தஸ்தை குறிக்கும்" என்றார் அவர்.
 
வீட்டில் தனியாக இருந்தாலும், நாளின் பெரும் பகுதியை மரவள்ளிக்கிழங்கு, வாழை, இஞ்சி, சேனைக்கிழங்கு,பலாப்பழம் உள்ளிட்ட பயிர்களை பரமாரிக்க அன்னம்மா செலவிடுகிறார். ஓய்வு நேரத்தில் தியானம் செய்வதும், செய்தித் தாள் படிப்பது என் வழக்கம் என்றார். இவருக்கு துணையாக 'டயானா' என்ற நாய் இங்குள்ளது.
 
சில நாட்கள் டயானாவுடன் மட்டுமே பேசுவேன். அவள் என்னை புரிந்து கொள்வாள்."
 
சிக்கலாகும் வயது முதிர்வு
இதய நோய், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சாக்கோ மம்மன், தனது சிறிய நிலத்தில் வாழையை பயிரிட்டுள்ளார். 64 வயதான இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமனில் விற்பனையாளராக பணிபுரிந்து நாடு திரும்பினார். தன்னிடம் வேலை செய்ய போதுமான ஆட்கள் கிடைக்காததால் தான் நடத்தி வந்த ஒரு சிறு வணிகத்தை அவர் மூடினார்.
 
இப்போது, மிகுந்த முயற்சிக்குப் பிறகு, அவர் தனது நிலத்தில் இருந்து தினமும் சுமார் 10 கிலோ வாழைப்பழங்களை விளைவித்து விற்கிறார். "என்னால் ஒரு தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாது," என்று அவர் கூறினார்.
 
வயது முதிர்ந்த சமூகத்தில் வேலையாட்களை உருவாக்குவது எப்போதுமே கடினம். வெளிமாநிலத் தொழிலாளர்களின் இடம்பெயர்வு கூட எப்போதும் பலனளிக்காது. சில நேரங்களில் வெளியாட்கள் மீதான அவநம்பிக்கை காரணமாக. புலம்பெயர்ந்தவரை வேலைக்கு அமர்த்த விரும்பவில்லை என்று அன்னம்மா கூறினார்.
 
"நான் தனியாக வசிக்கிறேன். என்னைக் அவர்கள் கொன்று விட்டால் என்ன செய்வது?" என்று அன்னம்மா பயம் கொள்கிறார்.
 
காவல்துறைக்கு என்ன வேலை?
 
வயதானவர்களாலும், பூட்டப்பட்ட வீடுகளாலும் நிறைந்த இந்த பிராந்தியத்தில், நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.
 
மக்கள் வீடுகளில் அதிக பணம், விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்காததால் திருட்டு நடப்பது அரிது என்று போலீசார் தெரிவித்தனர். இங்கு கடைசியாக எப்போது ஒரு கொலை நடந்தது என்று அவர்களுக்கு நினைவில் இல்லை.
 
"எல்லாம் ரொம்ப அமைதியா இருக்கு. ஏமாற்றுவது குறித்து மட்டுமே எங்களுக்கு புகார்கள் வருகின்றன. வயதானவர்கள் அவர்களின் உறவினர்கள் அல்லது வீட்டு வேலைக்காரர்களால் ஏமாற்றப்படுகிறார்கள், அவர்கள் தங்கள் கையொப்பங்களை போலியாக உருவாக்கி வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள்" என்று உள்ளூர் காவல் நிலையத்தின் தலைமை ஆய்வாளர் சஜீஷ் குமார் கூறினார்.
 
ஒரு வருடத்திற்கு முன்பு முதியவரின் உறவினர் ஒருவர் போலி கையொப்பமிட்டு சுமார் 1 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார். கடந்த ஆண்டு அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றி நிதி திரட்டிய நிதி நிறுவனத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். "இந்த பகுதியில் நடந்த பெரிய குற்றம் இதுதான்" என்று சஜீஷ் குமார் கூறினார்.
 
"இது இல்லாமல் குடும்ப சண்டை, வீட்டுக்கு முன்னாள் குப்பை கொடூவது, மரக்கிளை பக்கத்து வீட்டுக்குள் வளர்வது போன்ற சிறிய குற்றங்கள் மட்டுமே இங்கு வழக்கமாக நடக்கும்," என்று அவர் கூறினார்.
 
குற்றச்செயல்கள் இல்லாததால், போலீசார் தங்கள் பெரும்பாலான நேரத்தை வயதானவர்களை கவனிப்பதில் செலவிடுகின்றனர். அவர்கள் தனியாக தங்கியுள்ள 160 வீடுகளுக்கு சென்று அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.
 
மேலும் அவசர காலங்களில் அக்கம்பக்கத்தினரை எச்சரிக்கும் வகையில் சில வீடுகளில் மொபைல் அலாரம்களை வழங்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டில், ஒரு வீட்டில் யாரும் பதில் அளிக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மூதாட்டி ஒருவர் அடிப்பட்டு தரையில் சரிந்து கிடந்தார்.
 
"நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். எங்கள் வேலைகளில் ஒன்று வயதானவர்களை முதியோர் இல்லங்களுக்கு மாற்றுவது. அவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவரிடம் அவர்களை அழைத்து செல்கிறோம்," "என்று காவல் ஆய்வாளர் கூறினார்.
 
முதியோர் இல்லங்களுக்கு தட்டுப்பாடு
 
கும்பநாட்டில் முதியோர் சிகிச்சை மையம் நடத்தி வரும் பாதிரியார் தாமஸ் ஜான் கூறுகையில், "முதுமை மட்டுமே இங்கு பிரச்னையாக உள்ளது," என்றார்.
 
கும்பநாட்டில் உள்ள அலெக்சாண்டர் மார்த்தோமா நினைவு முதியோர் மையம், 150 படுக்கைகள் கொண்ட ஐந்து மாடி மருத்துவமனையாகும். இங்கு 85 வயது முதல் 101 வயதுக்குட்பட்ட 100 க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர்.
 
இவர்களில் பெரும்பாலானோர் படுத்த படுக்கையாக உள்ளனர். இவர்களை பராமரிக்க வெளிநாடுகளில் உள்ள இவரின் குடும்பத்தார் ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாயை கட்டணமாக செலுத்துகின்றனர்.
 
"பெரும்பாலான குடும்பத்தினர் வெளிநாட்டில் வசிப்பதால், மிகவும் வயதான பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று பாதிரியார் ஜான் கூறினார்.
 
அருகில் உள்ள மற்றொரு முதியோர் இல்லத்தில், கடந்த ஆண்டு மட்டும் 60 வயதை கடந்த 31 பேர் சேர்க்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், புதிய கட்டிடம் அங்கு கட்டப்படு்கிறது. 60 படுக்கைகளுடன் உருவாக்கப்படும் அந்த முதியோர் இல்லத்தில் தங்கள் பெற்றோரை சேர்க்க பலரும் முன்வருவதால், பலரும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர்.
 
நோயுற்ற முதியோர், முதியோர் இல்லங்கள், தொழிலாளர் பற்றாக்குறை, இளைஞர்களின் இடப்பெயர்வு, குறைந்து வரும் மக்கள்தொகை, காலியான வீடுகள் என இந்த பகுதியின் ஊர்கள் பேய் நகரங்களைப் போல மாறி வருகின்றன.