1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 மே 2023 (12:01 IST)

கண்ணகி கோவில்: தமிழகத்துக்கு சொந்தம் ஆனால், பராமரிப்பது கேரளா - ஏன் இப்படி?

தமிழ்நாடு - கேரளா எல்யைில் உள்ள கண்ணகி கோவில், தமிழக பகுதியில் இருந்தாலும் அதன் பராமரிப்பை இன்றளவும் கேரளாவே மேற்கொண்டு வருகிறது. சேர, சோழ, பாண்டிய வரலாற்றைத் தாங்கி நிற்கும் இந்த கோவின் பின்னணி, அதை ஏன் தமிழர்கள் மட்டுமின்றி கேரள மாநிலத்தவர்களும் வழிபடுகிறார்கள்? விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
 
தமிழ்நாடு - கேரளா எல்லையில் குமுளி பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதாக கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
 
தொல்லியல் சிறப்பு மிக்க கண்ணகி கோவில், தொடர்ந்து சிதிலமடைந்த நிலையில் இருப்பதைச்சுட்டிக்காட்டி கேரளா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயிலை தமிழ்நாடு அரசு ஏற்று கோவிலை புனரமைக்க வேண்டும் என்று கோரி வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நடத்தி வருகின்றனர்.
 
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சொல்லப்படும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் இமயமலையில் இருந்து கல் எடுத்து வந்து கண்ணகிக்கு கோவில் கட்டியதாக சிலப்பதிகாரக் குறிப்பு இருப்பதை வரலாறு மற்றும் தமிழ் இலக்கிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த கோவிலில் கி.பி 11ம் நூற்றாண்டு மற்றும் 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டுகள் இருப்பதால், அவற்றை சோழர்கள் பராமரித்தனர் அல்லது விரிவுபடுத்தினர் என்ற கூற்றை கல்வெட்டியல் அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்துகிறார்.
 
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள இந்த தொன்மையான கோவிலை ஏன் கேரளா அரசு நடத்த வேண்டும், அந்தக் கோவில் ஏன் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது என்ற சர்ச்சை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று கோவிலுக்கு செல்பவர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.
 
தமிழரின் பெருமையாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தின் வாழும் சாட்சியாக இந்த கோவில் நிற்பதால், அதை உடனடியாக புனரமைக்க வேண்டும் என்ற கருத்தை தொல்லியல் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.
 
தமிழ் இலக்கியத்தில் 'மக்கள் காப்பியம்' என்று அறியப்படும் சிலப்பதிகாரத்தின் நாயகி தான் கண்ணகி. கண்ணகியின் கணவன் கோவலன். பூம்புகாரை சேர்ந்த வணிகரான கோவலன், நடன மங்கையான மாதவியிடம் தனது செல்வத்தை இழக்கிறான். கோவலன் மீண்டும் கண்ணகியிடம் வருகிறான். செல்வம் சேர்க்கவும், கண்ணகியுடன் வாழவும் மதுரைக்குச் செல்கிறான்.
 
அங்கு கண்ணகியின் கால் சிலம்பை பொற்கொல்லனிடம் விற்கிறான். அதனைப் பெற்ற பொற்கொல்லன் அந்த சிலம்பை, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் எடுத்துச்செல்கிறான். "பாண்டிய அரசி கோப்பெருந்தேவியின் காணாமல் போன சிலம்புதான் அந்த சிலம்பு," என்று சொல்கிறான். பொற்கொல்லனின் கூற்றைக் கேட்டுச் சோதிக்காமல், கோவலனிடம் எந்த கேள்வியும் இன்றி அவனைக் கொல்ல மன்னன் நெடுஞ்செழியன் ஆணையிடுகிறான். கோவலனும் கொல்லப்படுகிறான்.
 
நீதி கேட்டு வந்த கண்ணகி, தனது மற்றொரு சிலம்பை காட்டி, மாணிக்கப் பரல்கள் உள்ள தனது சிலம்பைத்தான் கோவலன் கொண்டு வந்தான் என்றும் பாண்டிய அரசியின் சிலம்பு முத்து பரல்களைக் கொண்டது என்றும் நிரூபித்துக்காட்டுகிறாள். தவறான தீர்ப்பை வழங்கியதற்காகப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் அரியணையில் இருந்தபடியே மாண்டு போகிறான்.
 
அவனை அடுத்து, அரசியும் உடனே இறந்து போகிறாள்.
வெகுண்டெழுந்த கண்ணகி, சினத்தில் மதுரை நகரை தீயிட்டு எறிக்கிறாள். பின்னர் 14 நாட்கள் நடந்து, குமுளி பகுதிக்கு வந்து வேங்கை மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் ஒரு பாறைக்குச் செல்கிறாள். அங்கு புஷ்பக விமானத்தில் வரும் அவளது கணவன் கோவலன், அவளுக்கு மீண்டும் மங்கல நாண் கட்டி, அழைத்துச் செல்கிறான் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
 
விண்ணேற்றிப்பாறையில் இருந்து கண்ணகி கோவலனுடன் சென்ற காட்சியைப் பார்த்த பளியர் பழங்குடி மக்கள், சேர மன்னன் செங்குட்டுவனிடம் இக்கதையைச் சொல்ல, அவன் கண்ணகியைச் சிறப்பிக்க இமய மலையிலிருந்து கல்லெடுத்து வந்து கோவில் கட்டியதாக சொல்லப்படுகிறது.
 
கண்ணகி கோவில் வெளிவந்த வரலாறு
 
தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள நடைபாதை
 
1963ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் கோவிந்தராஜன்தான் முதன்முதலில் இந்த கோவிலில் உள்ள பெண் தெய்வம் கண்ணகி என்றும் இந்த கோவில் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட கண்ணகி கோவில் என்றும் கண்டறிந்தார் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்.
 
கண்ணகி தொடர்பான ஆய்வை மேற்கொண்டு, கோயிலை முதன்முதலில் அடையாளம் கண்ட பேராசிரியர் கோவிந்தராஜனுக்கு 2012ல் அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கும் காட்சி
 
1965ல் கோவிந்தராஜனின் கண்டுபிடிப்பு குறித்த செய்திகள் வெளியாகி, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், கண்ணகி கோவிலை கோவிந்தராஜன் வாயிலாக அடையாளப்படுத்துகிறார். அதுவரை, தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள், இந்த இடத்தை 'மங்கலதேவி' என்ற பெயரில் வழிபாடு செய்து வந்துள்ளனர்.
 
'கண்ணகி கோவில்' என்ற பெயர் பிரபலமடையவே, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் இந்த கோவிலில் வழிபாடு செய்யத் தொடங்கினர் என்கிறார் காந்திராஜன்.
இரண்டு மாநில எல்லைக்கு நடுவில் அமைந்திருக்கும் பிரச்னை காரணமாக, பராமரிப்பு இல்லாமல் தொடர்ந்து சிதிலமடைந்துகொண்டே வருகிறது என்று சுட்டிக்காட்டுகிறார் காந்திராஜன். முறையான ஆய்வுகள் மேற்கொண்டால், இந்த கோவிலின் பழமையை அறிய முடியும் என்றும் சொல்கிறார்.
 
''இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டும், சிலப்பதிகாரத்தில் உள்ள குறிப்புகளைக் கொண்டும், இதன் தொன்மையை அறிய முடியும். உண்மையில் இமய மலையிலிருந்து கல் எடுத்து வந்து இங்கு கோவில் அமைக்கப்பட்டதா என்று தற்போது கூட ஆய்வு செய்ய முடியும்.
 
நவீன அறிவியல் முறைகளைக் கொண்டு, கற்களைச் சோதித்து, இந்த கோவில் கட்டப்பட்ட ஆண்டை கணக்கிடமுடியும். அதேபோல, இந்த கோயிலைச் சுற்றி தொல்லியல் ஆய்வுகள் செய்தால், பல சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது,''என்கிறார் காந்திராஜன்.
 
படக்குறிப்பு,
கண்ணகி கோயிலின் சிதிலமடைந்த தோற்றம்
 
இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் கட்டியதோடு, அந்த கோவில் பிரதிஷ்டைக்கு இலங்கை மன்னன் கயவாகுவை அழைத்ததாக இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளதாக சொல்கிறார் எழுத்தாளர் மு.ராஜேந்திரன்.
 
கண்ணகி கோவில் அறக்கட்டளை தலைவராக உள்ள ராஜேந்திரன், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தமிழக கல்வெட்டுகள் குறித்த புத்தகங்களை எழுதியவர்.
 
கண்ணகி கோவிலை புனரமைக்க வேண்டும் என கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகளின் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், உச்சநீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் கூறுகிறார்.
 
''செங்குட்டுவன் கோவில் கட்டியதற்கான இலக்கிய ஆவணமாக சிலப்பதிகாரத்தைச் சொல்லலாம். கோவில் பிரதிஷ்டை விழாவிற்கு இலங்கை மன்னன் கயவாகு வந்ததற்கு சிங்கள வரலாற்று நூலான மகாவம்சத்தில் சான்று உள்ளது. இந்த விழாவிற்குப் பின்னர்தான் கண்ணகி வழிபாடு இலங்கையில் பரவியது. விழாவிற்கு வந்த அரசர்களின் பட்டியலை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கொடுத்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் இருந்து வந்த அந்த சிங்கள மன்னன் கயவாகு, பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியன், கொங்குச்சோழர்கள், வட இந்தியாவில் இருந்து வந்த கனக விஜயர்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
இந்த பட்டியலில் உள்ள அரசர்கள் பலரும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் இந்த கோவில் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் என்று சொல்கிறோம். இந்திய அளவில் மிகவும் பழமையான கோவிலாகக் கருதி, உடனே இதனை புனரமைத்து இதன் சிறப்பை பாதுகாக்கவேண்டும்,''என்கிறார் ராஜேந்திரன்.
 
கேரளா மற்றும் இலங்கையில் பரவிய கண்ணகி வழிபாடு
 
கேரளா வனப்பகுதியில் பக்தர்கள் சோதிக்கப்படும் காட்சி
 
கண்ணகி கோவிலின் வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள முற்பட்டபோது, கண்ணகி வழிபாடு இந்தியாவின் தென்பகுதியில் உருவானதற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டோம்.
 
கேரளாவில் கண்ணகி வழிபாடு பரவலாக இருப்பது குறித்த புத்தகம் ஒன்றை எழுதியுள்ள எழுத்தாளர் மற்றும் நாட்டார்வழக்காற்றியல் ஆய்வாளரான அ.க.பெருமாளிடம் பேசினோம்.
 
அவர், "கண்ணகி கோவில் அமைந்துள்ள நெடுங்குன்றம் என்ற பகுதி, திருச்சியில் உள்ள முசிறி பட்டணம் முதல் கேரளாவில் உள்ள மலபார் கடற்கரையில் உள்ள கொடுங்கலூர் நகரத்திற்கும் இடையில் வணிக வழியாக இருந்த இடம் என்பதால் கேரளாவில் கண்ணகி வழிபாடு பரவியது," என்று நிறுவுகிறார்.
 
''கண்ணகியை செல்லத்தம்மன், ஒற்றை முலைச்சி, பகவதி அம்மன் என்ற பல பெயர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வழிபடுகிறார்கள். சிலப்பதிகாரத்தில் மதுரையை எரித்த பின்னர் 14 நாட்கள் நடந்து சென்ற கண்ணகி, நெடுங்குன்றம் பகுதியில் உள்ள விண்ணேற்றிப்பாறையில் போய் நிற்பதாகக் குறிப்பு வருகிறது.
 
சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள வழியில் நான் பயணித்துப் பார்த்தேன். அந்த பகுதியைச் சுற்றிலும் கண்ணகி வழிபாடு வேறு, வேறு பெயர்களில் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. மக்கள் மத்தியில் கண்ணகியின் கதை பலவிதங்களில் இன்றும் சொல்லப்படுகிறது, பாடல்களாகப் பாடப்படுகின்றது,'' என்கிறார் எழுத்தாளர் பெருமாள்.
 
கணநாத் ஒபேசேகர என்ற மானிடவியல் ஆய்வாளர் கண்ணகி வழிபாட்டின் வடிவமான பத்தினி தெய்வ வழிபாடு எவ்வாறு இலங்கையின் பல்வேறு இடங்களில் காணக்கிடைக்கிறது என்று விரிவாக ஆய்வு செய்து 1983ல் ‘The cult of Goddess Pattini’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அதில் இந்து-பௌத்த சமூகங்களில் குடும்ப அமைப்பில் எவ்வாறு பத்தினித்தன்மை வழிபடும் அங்கமாக உள்ளது என்று விளக்குகிறார்.
 
சிதலமடைந்த கண்ணகி கோவில்
 
1960களில் தமிழ்நாட்டில் அதிக கவனத்தைக் கண்ணகி கோவில் பெற்றது. ஆனால் அதனை புனரமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. தற்போது கோவிலின் கோபுரம் நுழைவாயில் சுற்றுச்சுவர்கள் அனைத்தும் உடைந்து காணப்படுகின்றன. கடந்த 70 ஆண்டுகளில் கோவில் சீரமைக்கப்படவில்லை என தமிழ்நாட்டைச் சேர்ந்த மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை பொருளாளர் பி.எஸ்.எம். முருகன் கூறுகிறார்.
 
''கண்ணகி கோவிலை அடையாளப்படுத்திய பேரா. சி கோவிந்தராஜன் 1963ல் கோவிலை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எந்த முன்னேற்றமும் இல்லை. 1976ல் இந்த கோவிலுக்குச் செல்ல சாலை அமைக்கும் பணிக்காக அப்போதைய முதல்வர் கருணாநிதி ரூ. 20 லட்சம் ஒதுக்குகிறார். ஆனால் சாலை அமைக்கும் திட்டம் தொடங்குவதற்கு முன் தமிழ்நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டு, ஒரு வருடம் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றது. அதனால் சாலை போடும் பணி தடைபட்டது. தற்போதுவரை அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. 1982இல், கேரளாவில் பெரியார் புலிகள் காப்பகம் உருவாகிறது. அதனால், வனப்பகுதிக்குள் உள்ள கண்ணகி கோவிலுக்குச் சென்று வர கேரளா அரசாங்கம் ஒரு பாதையை உருவாக்குகிறது. பின்னர் கோவிலைப் பராமரிக்கும் பணியை 1983இல் கேரள அரசு எடுத்துக் கொள்கிறது,''என கோவிலின் உரிமை தொடர்பாக விளக்குகிறார் முருகன்.
 
1981ல் முதல்வராக இருந்த எம்ஜிஆர், கண்ணகி கோவில் புனரமைப்பு மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதியில் சாலை போடுவது பற்றி உறுதி கொடுக்கிறார். அதோடு, 100 ஏக்கர் அளவில் கண்ணகி கோட்டம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தவும் முடிவு செய்கிறார் என அப்போது வெளியான செய்தித்தாள்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறையும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஊடகச் செய்திகள் உணர்த்துகின்றன.
 
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1986இல் கண்ணகி கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீக்கி, புனரமைக்க வேண்டும் என அப்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுமான் கான் பேசியுள்ளதாகச் சட்டமன்ற குறிப்புகள் கூறுகின்றன.
 
அதனால், பல அரசாங்கங்கள் முன்னெடுத்தும் கண்ணகி கோவிலுக்கான பாதை தமிழ்நாட்டின் எல்லையில் இன்றுவரை அமைக்கப்படவில்லை. கோவிலும் புனரமைக்கப்படவில்லை.
 
இறுதியாக, மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பாக கேரளா உயர்நீதிமன்றத்தில் கோவிலைப் புனரமைக்க 2014இல் வழக்கு தொடரப்பட்டது. 2016இல் வெளியான தீர்ப்பில் கேரளா அரசின் தொல்லியல் துறை பணத்தை ஒதுக்கி கோவிலை புனரமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
 
அதன் தொடர்ச்சியாக பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகளின் வனத்துறையில் தலையீடுகள் இருந்ததால், புனரமைக்கும் பணிகள் மீண்டும் கிடப்பில் போடப்பட்டன என பெயர் சொல்ல விரும்பாத தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
 
தற்போதும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
 
தேனி மாவட்டம் பளியங்குடி கிராமத்தில் இருந்து நெடுங்குன்றம் செல்ல ஆறு கிலோ மீட்டர் நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். அல்லது கேரளாவின் வனப்பகுதிக்கு உட்பட்ட குமுளி பகுதியில் வாகன சோதனைகளுக்குப் பின்னர், சிறப்பு பாஸ் பெற்று பெரியார் வனப்பகுதியில் 14 கிலோ மீட்டர் வழியாக கேரளா அரசாங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜீப் வண்டிகளில் பணம் செலுத்திச் சென்று வருகின்றனர் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளைச் சேர்ந்த முருகன் கூறுகிறார்.
 
கோவிலுக்குச் சென்று வருவதில் என்ன சர்ச்சை?
 
 
1817இல் நடத்தப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியின் சர்வே ஆவணத்திலும் 1833இல் பதிவு செய்யப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கெசட்டிலும் உள்ள குறிப்புக்கள் மூலம் கண்ணகி கோவில் அமைந்துள்ள இடம் தமிழ்நாட்டிற்குச் சொந்தமான இடம் என வல்லுநர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
 
கோவில் அமைந்துள்ள இடம் தமிழ்நாட்டிற்குச் சொந்தம். கோவிலுக்கான பாதை கேரளாவுக்கு சொந்தம். கோவிலை பராமரிக்கும் பணி கேரள தொல்லியல் துறைக்குச் சொந்தம் என்ற நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் அங்கு சென்று வருவது மிகவும் சிக்கலான அனுபவமாக இருப்பதாக விமர்சிக்கின்றனர்.
 
''இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைக்குக் கூட சென்று விடலாம். ஆனால், தமிழ்நாடு-கேரளா எல்லையில் உள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் அவ்வளவு எளிதாகச் சென்று வர முடியாது.
 
ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேன் மட்டுமே எடுத்துச்செல்ல முடியும். தீபம் வைக்கக் கூட தீப்பெட்டி எடுத்துச் செல்லக்கூடாது. பிளாஸ்டிக் கவர் எடுத்துச் செல்லக்கூடாது என பல விதிகள். பெரியார் புலிகள் காப்பகம் பகுதியில் இருப்பதால் கட்டுப்பாடுகள் தேவை என கேரளா அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் இதே வனப்பகுதியின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள சபரிமலை கோவிலுக்குச் சென்று வர எந்த கட்டுப்பாடும் இல்லை,''என்கிறார் பலமுறை கண்ணகி கோவிலுக்குச் சென்று வந்துள்ள சாந்தி சேகர்.
 
மதுரையைச் சேர்ந்த சேகர் மூன்று முறை கண்ணகி கோவிலுக்குச் சென்றுள்ளார். அவரது அனுபவம் குறித்து பேசும்போது, மிகவும் அச்சுறுத்தும் தொனியில் அதிகாரிகள் நடந்து கொள்வதாகவும், தமிழ்நாடு அரசு பளியங்குடி கிராமத்தில் இருந்து பாதை அமைத்து, பிரச்னை இன்றி பக்தர்கள் சென்றுவர ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறார்.
 
''நான் சென்ற ஜீப் வாகனத்திற்கு ஒரு அனுமதிச் சீட்டு, எனக்கு ஒரு அனுமதிச் சீட்டு தந்தார்கள். என் உறவினர் ஒருவரும் அங்கு வந்திருந்தார். ஆனால் அவரை என்னால் அழைத்து வர முடியவில்லை. அனுமதி வாங்கிய வண்டியில், அனுமதிக்கப்பட்ட நபர் மட்டும்தான் செல்ல வேண்டும். மற்றொருவர் செல்ல மீண்டும் அனுமதி வாங்கவேண்டும் என்கிறார்கள். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் இந்த சோதனை முறை அச்சம் கொள்ள வைக்கிறது,''என்கிறார் சேகர்.
 
சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் இந்த விழா குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. அதன்படி கூட்டம் நடைபெற்றதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.சஞ்சீவனா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
 
பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுவதாகவும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
 
தமிழ்நாடு -கேரளா ஆட்சியர்கள் சொல்வது என்ன?
 
''தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் சந்திப்பு சமீபத்தில்தான் நடைபெற்றது. கோவில் திருவிழாவின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கோவிலுக்குச் செல்லும் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால், அங்கு யாரும் பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்துவரக்கூடாது என்ற நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்கிறது.
 
இதுதவிர வேறு புதிய நடைமுறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். புதிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. எந்த பக்தர்களுக்கும் சிரமம் இல்லை. தமிழ்நாடு அரசின் காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் அங்கிருக்கிறார்கள். பக்தர்களுக்கு எந்த இடர்பாடும் இருப்பதில்லை,'' என்கிறார் ஆட்சியர் சஞ்சீவனா.
 
கோவிலைப் புனரமைப்பது குறித்து கேட்டபோது, ''கேரள அரசின் பராமரிப்பில் கோவில் உள்ளது. கோவில் அமைந்துள்ள இடம் தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். அதனால், வழிபாடு செய்வதை நாங்கள் உறுதி செய்கிறோம்,'' என்று ஆட்சியர் சஞ்சீவனா முடித்துக்கொண்டார்.
 
தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களிடம் அதீத கட்டுப்பாடுகள் காட்டப்படுகின்றனவா என்று இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜிடம் கேட்டோம்.
 
எந்த புதிய விதிகளும் உருவாக்கப்படவில்லை என்றும் நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்ட விதிகளை மட்டுமே இந்த ஆண்டும் கடைப்பிடிக்கப்படுவதாக பிபிசி தமிழிடம் கூறினார்.
 
சபரிமலை கோவிலுக்கு ஒருவிதமாகவும், கண்ணகி கோவிலுக்கு வேறுவிதமான கட்டுப்பாடுகளும் இருப்பது ஏன் என்று கேட்டோம்.
 
''காலை 6 மணி முதல் மாலை 5:30 மணி வரை கண்ணகி கோவிலில் வழிபாடு செய்யலாம். புதிதாக நாங்கள் எந்த விதிகளையும் உருவாக்கவில்லை. சபரிமலை கோவிலையும் கண்ணகி கோவிலையும் ஒரே விதமாக நடத்த முடியாது. இரண்டும் அமைந்துள்ள வனப்பகுதிகள் வித்தியாசப்படும்,'' என்கிறார் ஷீபா ஜார்ஜ். கோவில் புனரமைப்பு குறித்து கேட்டபோது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால், வேறு தகவலைப் பற்றி பேச முடியாது என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஷீபா.