தொடர்ந்து பேசிய அவர், "என் அம்மாவிற்கு 19 வயதாக இருக்கும்போது கலிஃபோர்னியா வந்திறங்கினார். அப்போது அவரிடம் எதுவுமில்லை. ஆனால், அவரது பூர்வீகத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அவரிடம் இருந்தது. என் அம்மாவின் பெற்றோர், அதாவது எனது பாட்டி ராஜன் மற்றும் தாத்தா பிவி கோபாலன் இருவரும் என் அம்மாவிற்கு நிறைய கற்றுக்கொடுத்திருந்தனர். இந்த உலகில் எங்கு அநியாயம் நடந்தாலும், அதைத் தட்டி கேட்க வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது என கற்றுக் கொடுத்தார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.
கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.
கமலாவின் தாயார் இந்தியாவிற்கு செல்லும்போதெல்லாம் அவருடன் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார் கமலா. மேலும் தனது இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்தார் கமலா.
இருப்பினும் தனது தாய் ஒக்லாந்தின் கருப்பின கலாசாரத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார் என்றும், தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்தார் என்றும் கமலா தெரிவித்துள்ளார்.
"எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்." என தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகத்தான் பார்க்கும் எனவே நாங்கள் தன்நம்பிக்கை கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்," என கமலா குறிப்பிட்டிருந்தார்.