திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (12:54 IST)

பாஜக சார்பில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் கபடி போட்டி

Kabadi
(இந்தியா, இலங்கையில் இன்று (22.07.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 60 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட கபடி போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மேற்கொண்டு வருவதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அந்தச் செய்தியின்படி, இதுகுறித்து தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி பேசியபோது, "மோதி கபடி லீக்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் கபடி போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். 5,000 அணிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன. 60,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
 
இந்தப் போட்டிகள் தேசிய விளையாட்டு தினமான 29ஆம் தேதி தொடங்கி, பிரதமர் நரேந்திர மோதியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இறுதிப் போட்டியை மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பரிசளிப்பு விழாவில், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
 
இந்தப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெறுபவர்களுக்கு 50,000 ரூபாய், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு 25,000 ரூபாய், மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு 15,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
 
அதேபோல், மாநில அளவில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 லட்சம் ரூபாயும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கும் 10 லட்சம் ரூபாயும் மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது," என்று கூறினார்.
 
கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் 14 நாள் தங்குவதற்கு அனுமதி
 
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள்கள் தங்குவதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்திருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, போராட்டக்காரர்களின் ஆவேசத்தைத் தொடர்ந்து சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்ஷ, தங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை என்றும் அவருக்கு தஞ்சம் அளிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது.
 
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் பயணம் தொடர்பான பத்திரிகைகளின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் குடியேற்ற ஆணையம் நேற்று விளக்கம் அளித்தது. அந்த ஆணையம், "தனிப்பட்ட பயணமாக கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவருக்கு 14 நாட்கள் தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.
 
பொதுவாக இலங்கையைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வரும்போது, 30 நாள் வரை தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச் சீட்டு வழங்கப்படும். அதற்கு மேல் தங்குவதை நீட்டிக்க விரும்பினால், அவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும்.
தகுதி அடிப்படையில் அவை தனித்தனியாகப் பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது. இதற்கிடையே, சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மக்கள், இலங்கையில் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
ஆட்சி மாற்றத்துடன் உறுதியான கொள்கை மாற்றமும் வர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். சிலர் ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்து, அதற்கான பணத்தை சேமித்து, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள்.
 
இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு சைக்கிள் பயன்படும் என்பதால், வேறு சிலர் சைக்கிள்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள். நம்பகமான நபர்கள் மூலம் உதவி அனுப்புவதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளது.
 
இலங்கையில் 3 மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு விநியோகம்
சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் திருகோணமலை - தோப்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு லிட்ரோ சமையல் எரிவாயு 21ஆம் தேதி விநியோகிக்கப்பட்டதாக தமிழ்மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அந்தச் செய்தியின்படி, தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 12 கிராமங்களைச் சேர்ந்தோருக்கு 750 சிலிண்டர்கள் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்தில் வைத்து விநியோகம் செய்யப்பட்டது.
 
தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவின் உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில், கடந்த மே மாதத்துக்கான மின்சார கட்டணப் பட்டியலின் பிரகாரம் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.
 
இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வரிசை சரியாக இல்லையெனத் தெரிவித்து, சிறிய வாய்த் தகராறு இடம்பெற்றதைக் காணமுடிந்தது.