1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (22:30 IST)

உங்கள் உணவு குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன்களை பாதிக்கிறதா?

கருத்தரித்தல் குறித்து இணையதளங்களில் ஆலோசனை வழங்கும் எந்த ஒரு சாட்டிங் அறைக்குச் சென்றாலும், அங்கே கூறப்படும் பெரும்பாலான ஆலோசனைகள் உணவைப் பற்றியதாகவே இருக்கும். நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன்களை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என வழங்கப்படும் ஆலோசனைகளில், கருத்தரித்தலில் தொடங்கி குழந்தை பெற்றுக்கொள்வது வரை வரிசையாக ஏராளமான உணவு வகைகள், துணை உணவுகள், அந்த உரையாடல்களில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
 
இது போன்ற தகவல்கள் மற்றும் விற்பனைத் தந்திரங்களுக்கு இடையே, உண்மையில் சில வகையான உணவுகளை உட்கொள்வதால் குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன்கள் அதிகரிக்கின்றனவா அல்லது கருவில் வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனவா என்பதன் பின்னணியில் இருக்கும் ஆதாரம் என்ன?
 
இந்த விஷயத்தில் முதலில் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் கருவை உறுதி செய்வதில் ஃபோலிக் அமிலம் போன்ற சில ஊட்டச் சத்துக்கள் உண்மையில் உதவி புரிகின்றன.
 
கருவுற்ற பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ அது போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும் போது, மூளையின் சில பகுதிகள் இல்லாமல் அல்லது தண்டுவடத்தில் நரம்பு இழையம் சரியான இடத்தில் இல்லாமல் குழந்தைகள் பிறக்கும் ஆபத்தைக் குறைக்கின்றன. இது போன்ற குறைபாடுகள் பிறப்பின் போதே உருவாகி குழந்தைகளை பாதிப்பதால், இவற்றைத் தடுக்க கருவுற்றபின் அல்லது அதற்கு முன் சிலவகை உணவுகளை உண்பது பெரும் பயன்அளிக்கும் வகையில் உள்ளது.
 
இது போன்ற குறைபாடுகள் ஒரு பெண் கருவுற்ற சில நாட்களில் அல்லது வாரங்களில், பெரும்பாலும் அவர் கருவுற்றிருப்பதை அவர் அறிந்துகொள்ளும் முன்பாகவே உருவாகின்றன.
 
இதைத் தடுக்க கருவுறும் நிலையில் உள்ள அனைத்து பெண்களும் தினமும் 400 மைக்ரோகிராம் அளவுக்கு ஃபோலிக் அமிலத்தை உட்கொள்ள அமெரிக்காவின் நோய் கட்டுபபாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரைக்கிறது.
 
 
பெரும்பாலான கர்ப்பங்கள் ஏற்கெனவே திட்டமிடப்படாதவையாக இருப்பதால், கருவை பலப்படுத்தும் நோக்கில் ஃபோலிக் அமிலத்துடன் கூடிய தானிய தயாரிப்பு உணவுகளையும் உட்கொள்வது கருவை ஆரோக்கியமாக வளர்ப்பதில் கூடுதல் பாதுகாப்பை அளிப்பதாக இருக்கும்.
 
2019இல் இது போன்ற பரிந்துரைகளை அளிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டதன் மூலம் தண்டுவடத்தில் நரம்பு இழையம் சரியாகப் பொருந்தாத குழந்தை பிறப்பு 22 சதவிகிதம் தடுக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
ஃபோலிக் அமிலத்தில் கூடுதல் நன்மையும் இருக்கிறது: கருத்தரிக்க முயற்சி மேற்கொள்ளும் பெண் இதை துணை உணவுகளில் சேர்த்துக்கொண்டால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என கருதப்பட்டாலும், இதை உறுதிப்படுத்த மேலும் பல ஆய்வுகளை நடத்தவேண்டியுள்ளது.
 
இந்த கேள்விக்கு பதில் அளிக்கவேண்டுமென்றால், மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களை அலசவேண்டும். அமெரிக்காவில் பாதுகாப்பற்ற உடலுறவை ஒரு ஆண்டுக்கும் அதிகமாக வைத்திருக்கும் ஜோடிகளில் 15 சதவிகிதத்தினருக்கு மலட்டுத் தன்மை ஏற்பட்டுள்ளது.
 
இது போன்ற நிலை பல காரணங்களால் ஏற்படுகிறது. இது போன்ற உடலுறவை வைத்துக்கொண்ட பெண்களைப் பொறுத்தளவில், அவர்களுடைய சூலகங்களில் திறன் வாய்ந்த கருமுட்டையை உற்பத்தி செய்யும் தன்மை குறைந்திருந்தது அல்லது சூலகங்களில் இருந்து கருமுட்டை கருப்பைக்கு நகர்ந்து செல்லும் திறன்கள் குறைந்திருந்தன- உதாரணமாக அண்டக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கருமுட்டை நகர்ந்து செல்வது தடையாகியிருந்தது.
 
அப்படி ஒருவேளை அந்த கருமுட்டை நன்றாக நகர்ந்து கருப்பையை அடைந்திருந்தாலும், கருப்பையின் சுவற்றில் அமரமுடியாத நிலை இருந்தது- அப்படியே கருப்பையின் சுவற்றில் அது அமர்ந்திருந்தாலும், அதன் பின் உயிர்வாழும் தன்மையை இழந்திருந்தது.
 
ஆண்களை எடுத்துக்கொண்டால், கருப்பையில் கரு உருவாவதை விந்தணுவின் தரமே நிர்ணயம் செய்கிறது. இந்த விந்தணுவின் வடிவம், அது நகர்ந்து செல்லும் திறன், குறிப்பிட்ட அளவு விந்துவில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
 
விந்தணுவின் தரம் குறைவதற்கு சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட நிறைய காரணங்கள் உள்ளன. பல சோதனைகளுக்குப் பின்னரும் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. சுமார் 15 சதவிகிதம் பேருக்கு ஏன் மலட்டுத் தன்மை ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கமுடியாத நிலையே காணப்படுகிறது.
 
எந்த ஒரு தனி உணவும் இந்த பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்வதில்லை என்ற நிலையில், கருத்தரிப்பதற்கு முன்னரும், அதைத் தாண்டியும் இது போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது மட்டுமே பயன் அளிக்கும் விதத்தில் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
மிகத்தெளிவாகச் சொன்னால், அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொண்டு, நல்ல உடல்நலத்துடன் இருப்பது மிகவும் முக்கியமாகும். ஊட்டச் சத்து குறைபாடுள்ள உணவுகளை உண்பது ஆண்-பெண் இருபாலரும் நல்ல பெற்றோர்களாக உருவெடுப்பதைத் தடுக்கிறது.
 
 
இது குறித்த ஆய்வுகளில், 1944-ம் ஆண்டு நெதர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது பிறந்த குழந்தைகளைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மிகச்சிறந்த முடிவுகளை அளித்துள்ளன.
 
இரண்டாம் உலக போரின் இறுதியில் ஏற்பட்ட அந்த 8 மாதகால பஞ்சத்தின் போது, நெதர்லாந்துக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதை நாசிப்படையினர் தடுத்து வைத்திருந்தனர்.
 
கருத்தரித்த பெண்கள் மற்றும் கருத்தரிக்கும் நிலையில் இருந்த பெண்களுக்கு அப்போது ஒவ்வொரு தினமும் வெறும் 400 கலோரிகளைத் தரும் உணவு தான் அளிக்கப்பட்டது.
 
கருவில் உள்ள குழந்தையை ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பதற்குத் தேவையான உணவின் ஒரு பகுதியாகவே இது இருந்தது. இந்த காலகட்டத்தில் கருவில் இருந்து, பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு ஏராளமான குறைபாடுகள் உடலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அவற்றில் சிறிய தலைகளைக் கொண்டிருத்தல், மிகவும் குள்ளமாக இருத்தல், சர்க்கரை நோய் மற்றும் பெரும் மனநல பாதிப்புக்கள், இளம் வயதிலேயே உயிரிழக்கும் தன்மை போன்றவை அதிகம் காணப்பட்டன.
 
போதுமான அளவு உணவு உண்பவர்கள் கூட, அந்த உணவில் நமக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான அளவில் இடம்பெற்றுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவது மிகமுக்கியமான செயலாகும்.
 
பெண்கள் கருவுறுவதற்குத் தேவையான உணவுகள் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆண் மலட்டுத் தன்மை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் தேவையும் இருக்கிறது.
 
செயற்கை முறை கருத்தரிப்பு செய்துகொண்ட தம்பதியினரைப் பற்றி 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஆண்கள் இறைச்சி உணவு உண்ணும் பழக்கம் கருத்தரிப்பு சதவிகிதத்தைப் பாதித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
கறிக்கோழி போன்ற பண்ணைகளில் வளர்க்கப்பட்ட உயிரினங்களின் இறைச்சியை அடிக்கடி சாப்பிட்டு வந்த ஆண்களின் விந்தணுக்கள் அதிக திறன்பெற்றவையாக இருந்த நிலையில், பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை உணவில் சேர்த்துக்கொண்ட ஆண்களின் விந்தணுக்களுடைய திறன்கள் குறைந்திருந்தன.
 
அதே நேரம் குறைந்த அளவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டுவந்த ஆண்களின் விந்தணுக்களின் திறன்கள் குழந்தை உருவாவதற்கான வாய்ப்புக்களை 82 சதவிகித அளவுக்குப் பெற்றிருந்தன. ஆனால் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டுவந்த ஆண்களின் விந்தணுக்களின் திறன்கள் குழந்தை உருவாவதற்கான வாய்ப்புக்களை 54 சதவிகிதம் மட்டுமே பெற்றிருந்தன.
 
தந்தையின் உணவுப் பழக்கவழக்கங்கள், கருவில் வளரும் குழந்தையையும் மறைமுகமாக பாதிக்கின்றன
 
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தந்தையின் உணவுப் பழக்கங்கள், குழந்தை பிறந்த பின்னரும் அதன் எதிர்கால உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சிக் குழுவினர், குழந்தைப் பேற்றின் போது சிகிச்சை பெற்றுவந்த 200 தம்பதியினரின் உணவுப் பழக்கங்களைப் பெற்று ஆய்வு நடத்தினர். பிரிஸ்பேன் நகரில் உள்ள மேட்டெர் மதர்'ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஆண்களின் உணவுப் பழக்கங்கள், பெண்களின் உணவுப் பழக்கங்களில் ஏற்படுத்திய பாதிப்புக்களின் விளைவாக கருவில் வளர்ந்து வந்த குழந்தைகளின் உடல்நலத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. இதே போல் தந்தையின் உடல் எடையும், குழந்தையின் உடல் எடையை நிர்ணயிப்பதாக இருந்தது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
 
"கருத்தரித்தலைப் பற்றிப் பேசும் போது, ஆண்களின் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நாம் அதிகம் கலைப்படுவதில்லை. ஆனால், அதுவும் மிகவும் முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது," என்கிறார் குயின்ஸ்லாந்து ஆராய்ச்சிக்குழுவில் இடம்பெற்றிருந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஷெல்லி வில்கின்சன். இவர் ஆஸ்திரேலியாவில் செயல்படும் கருத்தரிப்பு மையம் ஒன்றில் உணவியல் நிபுணராகப் பணியாற்றிவருகிறார். "ஆண்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், அவர்களின் பேரக்குழந்தைகளின் உடல்நிலையில் கூட பாதிப்பை ஏற்படுத்தும்."
 
உணவுப் பழக்கவழக்கங்களைப் பராமரிப்பதில் தம்பதியினர் இருவருக்குமே சமமான பொறுப்புக்கள் உள்ளதை வில்கின்சன் கோடிட்டுக் காட்டுகிறார். "தம்பதியினரில் ஒருவர் உணவியல் நிபுணரின் பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றுகிறார் என்றால் மற்றவரும் அதைப் பின்பற்றவேண்டும்."
 
ஒரு முக்கியமான மாற்றம் என்பது, தம்பதியினர் இருவருமே தங்களது உணவுகளில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தை அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் என்பதே ஆகும். ஆரோக்கியமான கொழுப்பு, அவக்கோடா, ஆலிவ் எண்ணெய், பருப்பு வகைகள் போன்றவற்றில் அதிகம் உள்ளன. இருப்பினும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் கொழுப்புக்கள் கருத்தரித்தலை பாதிக்கும் காரணிகளாக உள்ளன.
 
தாவர உணவுகளும் மிகச்சிறந்த பயன்களை அளிக்கின்றன. ஹார்வர்ட் பொதுச் சுகாதாரக் கல்வி நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள் 18,555 பெண்களிடம் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய ஆராய்ச்சியின் போது, கருத்தரித்த அல்லது கருத்தரிக்க முயன்ற பெண்களுக்கு இந்த வகை உணவுகள் சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவாக இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் புரோட்டீனை விட தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் புரோட்டீன்கள் கருப்பையின் செயல்பாடுகளைப் பாதிக்கும் காரணிகளை 50 சதவிகிதம் வரை குறைத்துள்ளதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
உணவுப் பழக்கவழக்கத்துக்கும், பெண்களின் கருத்தரித்தலுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து 2021-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பெரும்பாலும் பெண்களின் உணவுப் பழக்கங்களை மையமாக வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், ஆண்களின் உணவுப் பழக்கவழக்கங்களும் கரு உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
 
உணவுப்பொருட்களில் உள்ள தனித்தனி ஊட்டச்சத்துக்கள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படும் அளவுக்கான தகவல்களை அளித்துள்ளனர். கருத்தரித்தலுக்கு ஒரு தம்பதியினர் திட்டமிடும் போது உணவியல் நிபுணரின் ஆலோசனையின் படி செயல்படுவதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
 
விரிவாகப் பேசினால், அவர்கள் அளித்துள்ள ஆராய்ச்சி முடிவுகளில் காய்கறிகள், பழங்கள், முழு தானிய வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தை அளிக்கும் உணவுப் பொருட்களிலும் கவனம் செலுத்துவது முக்கியமாகும். இதில் முட்டைகள், அசைவ உணவுகள் மற்றும் மீன்கள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. இதே போல் அயோடின் போன்ற யாரும் கவனிக்காத சிலவகை பொருட்களும் கருத்தரித்தல் மற்றும் கருவில் குழந்தை வளர்வது போன்றவற்றில் பெரும் பங்களிப்பதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
மது அருந்துவது பற்றிக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், அதில் தெளிவான அறிவுரையை அளித்துள்ளனர். கருத்தரிக்க திட்டமிடும் தம்பதியினர் மதுவைப் பயன்படுத்துவதில் குறைந்த அளவு என எதுவுமே இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பியர் மற்றும் வைன் கூட அருந்தக்கூடாது என்பதுடன், மது அருந்துவதை முழுமையாக தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
 
கருத்தரிக்க திட்டமிட்டுள்ள நிலையிலும், கருத்தரித்த பின்னரும், உங்களுடைய உணவுப்பழக்கம் எப்படியிருக்கவேண்டும் எனத்தெரிந்துகொள்ள விரும்பினால் உங்களுடைய மருத்துவமனையை அணுகுவதே சிறந்த செயலாக இருக்கும். கருத்தரித்தலில் நாம் இங்கு பார்த்த உணவுகள் முக்கிய பங்காற்றும் என்றாலும், அவற்றின் சக்தியை மிகைப்படுத்தக்கூடாது. மலட்டுத் தன்மை என்பது ஒரு சிக்கலான விஷயம். அதே போல அதற்கான காரணங்களும் சிக்கலானவையே. உணவைப் பற்றி தேவையில்லாமல் கவலைப்படுவது குற்ற உணர்ச்சி- வெட்கம் மற்றும் மன அழுத்தத்தைத் தான் ஏற்படுத்தும். கருத்தரிக்க முடியாமல் தவிக்கும் தம்பதியினர் அவர்கள் ஏதாவது ஒரு உணவை உட்கொண்டதாலோ, அல்லது உட்கொள்ளாததாலோ இந்த பிரச்சினை ஏற்பட்டதாக கருதக்கூடாது.
 
கருத்தரிக்க முடியாமல் தவிக்கும் பெரும்பாலானோர் எப்போதுமே கருத்தரிக்க உதவும் ஒரு உணவுப் பொருளைப் பற்றியே சிந்திக்கின்றனர்.
 
ஆனால் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் அளவில் முழு உணவுப் பழக்கவழக்கத்தையும் மாற்றுவதே சரியானதாக இருக்கும். "கருத்தரித்தல் குறித்து இணையதளங்களில் ஆலோசனை வழங்கும் எந்த ஒரு சாட்டிங் அறைக்குச் சென்றாலும், பைனாப்பிள் அதிகமாக உட்கொண்டால் கருத்தரிக்கும் சக்தி கிடைத்துவிடும் மேஜிக்கை நிகழ்த்திவிடும் என்ற அளவில் கருத்து பரப்பப்படுகிறது.
 
ஆனால் ஏதோ ஒரு உணவை மட்டுமே அதிக அளவில் உட்கொள்வது கருத்தரித்தலில் நிலவும் பிரச்சினைகளைச் சரிசெய்யும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை," என்கிறார் வில்கின்சன்.
 
*இந்த கட்டுரையில் அளிக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல்கள் மட்டுமே. சுகாதாரத்துறை நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைக்குப் பதிலாக இந்த கட்டுரையை மட்டுமே நம்பி பின்பற்றலாம் என யாரும் கருதக்கூடாது.
 
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரையைப் படித்து விட்டு, இதை அடிப்படையாகக் கொண்டு எந்த ஒருவரும் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் பிபிசி பொறுப்பேற்காது. வெளிப்புற இணையதளங்களில் இருந்து பகிரப்பட்டுள்ள எந்தத் தகவலுக்கும் பிபிசிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதே போல் பிபிசி எந்த ஒரு வணிகப் பொருளையும் பயன்படுத்த யாரையும் ஊக்குவிக்கவில்லை. உங்களுடைய அல்லது உங்கள் குழந்தையின் உடல் ஆரோக்கியம் குறித்து எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும், உங்களுடைய மருத்துவரை அணுகி விளக்கம் பெறுவதே சரியாக இருக்கும்.