முடி வளர்ச்சிக்கு எந்த உணவுகளை எடுத்துக்கொள்வது...?
முடி உதிர்வை தடுக்க பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்றாலும் கூட, ஆரோக்கியமான, சீரான உணவை உட்கொள்வதன் மூலமாகவும் முடி உதிர்வை தடுக்க இயலும். நம் தட்டில் என்ன உணவை எடுத்துக் கொள்கிறோம் என்பது முடி உதிர்வை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
வலுவிழந்த முடியை சீரமைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் புரதச்சத்து மிக முக்கியமானது. நம் உடலுக்கு தேவையான அளவில் புரதச்சத்து கிடைத்தால் முடி உதிர்வை தடுக்கலாம். எந்தெந்த உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
புரதம் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன் உணவில் புரதம் ஏராளமாக உள்ளது. இது முடி உதிர்வை தடுக்கும். மீன் சாப்பிட்டால் அதில் கிடைக்கும் புரதச்சத்து மூலமாக நமது மயிர் கால்கள் வலுவடையும். இது மட்டுமல்லாமல் முடி உதிர்வை தடுக்கும் விட்டமின் ஏ, கே டி மற்றும் இ ஆகியவையும் மீன்களில் உள்ளன.
பால், தயிர் மற்றும் முட்டை ஆகியவை புரதம் அதிகமுள்ள உணவுகளாகும். தினசரி இவற்றை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம். இரும்புச் சத்து, பி12, ஃபேட்டி ஆசிட் உள்ளிட்டவை இந்த உணவுகளில் உள்ளன. இவை முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான பயோடின் என்ற சத்து முட்டையில் உள்ளது.
அசைவ உணவுகளை விரும்பாத சைவ பிரியர்களுக்கு முடி உதிர்வை தடுப்பதற்கு உதவிகரமாக இருப்பது பருப்புகள் ஆகும். புரதம், ஜிங்க், இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. முடி வலுவிழப்பதை ஃபோலிக் ஆசிட் தடுக்கிறது.
சோயாவில் சுமார் 90 சதவீத புரதம் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்து, ஜிங்க், ஃபோலேட் போன்ற சத்துக்களும் உள்ளன. இறைச்சியில் நமது முடி வளர்ச்சி மற்றும் மயிர் கால்களை வலுப்படுத்தும் சத்துக்கள் உள்ளன.