வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 4 மார்ச் 2023 (21:13 IST)

கொரோனா பிறந்த இடம் சீன ஆய்வகமா? சந்தையா? அமெரிக்க நிறுவனங்கள் சொல்வதில் என்ன சர்ச்சை?

corono virus
கொரோனா பேரிடர் எங்கே எப்படி தொடங்கியது என்பது குறித்து இரு வேறு கோட்பாடுகள் நிலவுகின்றன. அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ.யும் தற்போது இது தொடர்பான விவாதத்தில் சேர்ந்து கொள்ள, அரசியல் மற்றும் பிளவுகளின் பின்னணியில் உண்மைக்கான தேடல் அப்படியே விடப்பட்டுள்ளது.
 
கொரோனாவின் பிறப்பிடம் தொடர்பாக தற்போது நடக்கும் வேறுபாடுகளை வளர்க்கும், நச்சுத்தன்மை வாய்ந்த விவாதங்கள் அறிவியல் உலகில் நடப்பது அரிது.
 
பிபிசி பாட்காஸ்ட் சேவைக்கான தேடலில் ஈடுபட்டிருந்த போது, கொரோனா தோற்றம் குறித்த இருவேறுபட்ட சாத்தியங்கள் குறித்த வைராலஜி நிபுணர்களின் நோக்கம் மற்றும் தொழில் நேர்மை குறித்து சக நிபுணர்களே கேள்வி எழுப்பியதை என்னால் கேட்க முடிந்தது.
 
வூஹான் சந்தையில் இருந்து முதல் மனிதருக்கு கொரோனா வைரஸ் பரவியது அல்லது சீன அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகத்தில் இருந்து வெளிவந்தது ஆகியவையே அந்த இருவேறு சாத்தியங்கள்.
 
வூஹான் ஆய்வாளர்களின் பணி அபாயங்கள் குறித்த கேள்விகளுக்கு, 'நான் அந்த பரிசோதனைகளை செய்ய விரும்பியிருக்க மாட்டேன்' என்று வைராலஜி நிபுணர் ஒருவர் பதில் அளித்தார்.
 
தொழில்முறை உறவுகள் சேதமடைந்துவிட்டன; நட்புகள் சிதைந்துவிட்டன.
 
'தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. ஆனால், கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகக் கசிவு என்பது போன்ற முட்டாள்தனமான விவாதங்களுக்கு முகம் கொடுக்க நான் தயாரில்லை', என்று பாட்காஸ்ட் தொடருக்காக அணுகிய போது ஒரு வைராலஜி வல்லுநர் என்னிடம் குறிப்பிட்டார்.
 
அமெரிக்க புலனாய்வு அமைப்புகளும், அரசாங்க அமைச்சகங்களும் கொரோனாவின் பிறப்பிடம் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட போராடின என்பதில் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லை.
 
கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்தே வந்தது என்று அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சகம் தனது உளவுத்துறை மதிப்பீடுகளை மாற்றியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன. இதன் மூலம் கொரோனா வைரஸ், ஆய்வகத்தில் இருந்தே வந்தது என்பதை ஆதரிக்கும் அமைப்புகள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
 
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அந்த முடிவுக்கு வந்திருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. கொரோனா பேரிடர் ஒரு ஆய்வகத்தில் தொடங்கியிருக்க சாத்தியம் உண்டு என்று எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே பொதுவெளியில் கூறியுள்ளார்.
 
அமெரிக்காவின் 4 புலனாய்வு அமைப்புகளைப் பொருத்தவரை, கொரோனா வைரஸ் இயற்கையாகவே தோன்றியிருக்கலாம் என்று நம்புவதாக கூறப்படுகிறது. மேலும் 2 அமைப்புகள் இன்னும் முடிவு செய்யவில்லை.
 
உளவுத்துறை மதிப்பீடுகள் அனைத்துமே பொதுவெளியில் வெளியாகாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. மாறுபட்ட புலனாய்வு அமைப்புகள் ஒவ்வொன்றும் அமெரிக்காவில் "உளவுத்துறை சமூகம்" என்று அழைக்கப்படுவதன் ஒரு அங்கமாகும். அவை ஒவ்வொன்றும் மனித நுண்ணறிவு முதல் அரசு அறிவியலாளர்கள் வரை வெவ்வேறு நிபுணத்துவம் மற்றும் தகவல் ஆதாரங்களை திரட்டுகின்றன.
 
எடுத்துக்காட்டாக, எரிசக்தி துறையின் உளவுத்துறை மற்றும் எதிர் நுண்ணறிவு அலுவலகம், அத்துறையால் கண்காணிக்கப்படும் 17 தேசிய ஆய்வகங்களில் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல்களைப் பெறலாம்.
 
ஏஜென்சிகளின் பணி ஒன்றுடன் ஒன்று சேரலாம். ஆனால் கொரோனா தோற்றம் குறித்த கேள்விக்கு அவர்கள் எவ்வளவு ஒத்துழைத்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
கொரோனா வைரஸைப் பற்றி ஆய்வு செய்ததாக அறியப்பட்ட வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் பணிபுரிந்த பல ஆராய்ச்சியாளர்கள் 2019-ம் ஆண்டு நவம்பரில் நோய்வாய்ப்பட்டதாக ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க அரசால் கூறப்பட்டது.
 
இந்த அறிகுறிகள் கோவிட்-19 மற்றும் பொதுவான பருவகால நோய்கள் இரண்டிற்கும் ஒத்துப்போவதாக அமெரிக்க அரசாங்கம் கூறியது. அமெரிக்க அரசு இதன் மூலம் உண்மையில் என்ன சொல்ல வருகிறது என்பதை யாரும் தன்னிச்சையாக மதிப்பிடுவது கடினம்.
 
ஆய்வகக் கசிவுக் கோட்பாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான தொடர்பால், 2020-ம் ஆண்டின் முற்பகுதியில் சிலர் அதை தவறானதாகக் கருத வழிவகுத்தது. கொரோனா பேரிடரை அவரது நிர்வாகம் கையாண்டது தொடர்பான விமர்சனங்களை திசை திருப்புவதற்கான இனவெறி கருத்தாகவும் கூட பார்க்கப்பட்டது.
 
ஆனால் அறிவியல்பூர்வமான வாதங்களும் இருந்தன. சார்ஸ்-கோவி-2 இன் மரபணு அமைப்பை ஆய்வு செய்ததில், அது ஆய்வகத்திலிருந்து வந்திருக்க முடியாது என்பதை உறுதியாக நிரூபித்தது.
 
பின்னர், கோவிட்-19 முதலில் தோன்றிய வுஹான் சந்தையைச் சுற்றியுள்ள ஆரம்பகால நோயாளி தரவுகளின் பகுப்பாய்வு அனைத்து சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு, அந்த வைரஸ் இயற்கையாகவே தோன்றியது என்பதை நிரூபித்தது.
 
ட்ரம்பால் நியமிக்கப்பட்ட எஃப்.பி.ஐ. இயக்குநரின் கருத்துகள் வெளிவந்துள்ள தருணம் மிகவும் முக்கியமானது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குடியரசுக் கட்சி ஆய்வகத்தில் கொரோனா கசிவு என்ற கோட்பாட்டை நோக்கி மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
 
மறுபுறம், முன்னாள் அதிபர் ட்ரம்புடன் ஆய்வகக் கசிவு கோட்பாடுகளுக்கு இருந்த தொடர்புகளை அதிபர் ஜோ பைடன் ஆட்சி விடுவித்துள்ளது.
 
அதனால்தான், ஆய்வகக் கசிவு கோட்பாடு மிக துரிதமாக நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று மற்ற விஞ்ஞானிகளும் பொது வெளியில் பேச முன்வந்துள்ளனர்.
 
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியரும், உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகருமான லாரி கோஸ்டின், கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றியிருக்கக் கூடும் என்ற கருத்தை ஆதரிப்பவர். ஆனாலும் கூட, ஆய்வகக் கசிவு கோட்பாட்டை திட்டவட்டமாக நிராகரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் நம்புகிறார். அவ்வாறு செய்ய முயற்சித்தது தவறு என்றும் அவர் நினைக்கிறார்.
 
"அதுபோன்ற பொது நலனை அறிவியல் புறம் தள்ளிவிடக் கூடாது," என்று என்னிடம் அவர் கூறினார். பல்வேறு பிரச்னைகளில் சதி கோட்பாடுகளை முன்வைத்துள்ள டிரம்ப், இந்த சொல்லாடலை கேள்வி கேட்பது சரியாக இருந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
 
"அதாவது, உங்களிடம் சதி கோட்பாடுகள் உள்ளன. ஆனால் அவர், அந்த ஆய்வகத்தைப் பற்றிய தகவல்களை பெற விரும்புவதில் தவறா? இல்லையே" என்கிறார் லாரி கோஸ்டின்.
 
அமெரிக்க நாடாளுமன்றத்தால் புதிய தகவல்களைக் கண்டறிய முடியும் என்று சில நிபுணர்கள் நம்புகிறார்கள்.
 
வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியுடன் அமெரிக்க விஞ்ஞானிகள் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளனர். இதனால், அரசாங்க நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் காப்பகங்களில் பயனுள்ள தரவுகள் இன்னும் இருக்கலாம்.
 
இதற்கிடையில், ஒரு சந்தை அல்லது ஆய்வகம் வழியாக - சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான அனைத்து பரிந்துரைகளையும் சீன அரசாங்கம் புறம் தள்ளுகிறது.
 
அந்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான எனது சொந்த முயற்சிகள், 2021-ம் ஆண்டில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சீன அதிகாரிகள் அச்சுறுத்தலின் கீழ் அந்நாட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட வழிவகுத்தது.
 
"கொரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனாவை களங்கப்படுத்தினார்" மற்றும் "சர்வதேச சமூகத்திலிருந்து சீனாவிற்கு பகைமை வளர்க்கும் வகையில் செயல்பட்டார்" என்று என் மீது சீன அரசு ஊடகம் குற்றம் சாட்டியது.
 
வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இரண்டிற்கும் இடையிலான கசப்பு, கோபம் மற்றும் அரசியலில் கோவிட்-19 தோற்றம் பற்றிய கேள்வி மறைக்கப்பட வாய்ப்புள்ளது.
 
கொரோனா-19 தோற்றம் பற்றிய பதில்களைத் தேட சாத்தியமான ஒவ்வொரு கருவிகளையும் பயன்படுத்துமாறு 2021-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டார். ஆனாலும் கூட, அதனைக் கண்டுபிடிக்க அவர்கள் ஏன் இன்னும் சிரமப்படுகிறார்கள்?