1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (09:18 IST)

மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஆறாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி தொன்மை மிக்கது. நம் முன்னோர்கள் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் தாழியினுள் தன் தாத்தா/பாட்டி உடலை வைத்துப் பாதுகாப்பாக அடக்கம் செய்துள்ளனர். அடக்கம் செய்தனர் என்பதை விடப் பாதுகாப்பாக வைத்துள்ளனர் எனலாம்.
 
இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர்.
 
பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர்.
 
இறந்தவர்கள் மறுபடியும் பிறப்பார்கள்; அவர்களின் ஆன்மா அவர்கள் உடலுடன் பாதுகாக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் என்பதுதான் பண்டைய மக்களின் எண்ணமாக இருந்திருக்கும். மேலும், "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்கிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிலப்பதிகாரம். அதாவது முந்தய பிறவியின் பாவ புண்ணியம் இப்பிறவியிலும் விடாது துரத்தும் எனப் பொருள் கொள்ளலாம்.
 
மறுபிறவியை மையமாக வைத்து எடுத்த திரைப்படங்களான சியாம் சிங்கா ராய், அனேகன், சைத்தான், அருந்ததி, சடுகுடுவண்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்டவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இவை எடுத்துக்காட்டுவது என்னவென்றால், இன்றைய காலத்திலும் மக்களிடையே மறுபிறவியின்மேல் நம்பிக்கை உள்ளது எனக் கொள்ளலாம்.
 
இயன் ஸ்டீவென்சன் ஒரு மனநல மருத்துவர். இவர் 1957ல் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் மனநலத்துத் துறைத் தலைவராக இருந்தவர். இவர் ஆன்மீக உளவியல் (Parapsychology) என்ற துறையில் நம்பிக்கை உள்ளவர். ஆன்மிக உளவியல் என்பது தொலைவிலுள்ள பொருட்களைத் தொடாமல் நகர்த்தல், மரண அனுபவம், மறுபிறப்பு, ஆவியுடன் தொடர்பு மற்றும் பிற இயல்புக்கு ஒவ்வாத உளவியல் சார்ந்த ஆய்வாகும்.
 
மருத்துவர் ஸ்டீவென்சன் உலகில் பல இடங்களில் குழந்தைகள் முந்தைய பிறவி பற்றிப் பேசுவதைக் கேள்விப்பட்டார். அத்தகைய குழந்தைகளின் தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். அவ்வாறு பேசுபவர்களை உலகம் முழுவதும் சுமார் 3,000 பேரைக் கண்டறிந்தார். இந்தியா, பர்மா, இலங்கை, மற்றும் பிரான்ஸ் என நாடு நாடாகச் சுற்றி மறுபிறப்பு பற்றி ஆராய்ச்சி செய்தார்.
 
அவர் கண்டறிந்தது என்னவென்றால், இந்த 3,000 பேரில் இரண்டு வயது முதல் ஆறு வயதுக் குழந்தைகளே இந்த பூர்வஜென்ம அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இத்தகைய குழந்தைகள் சராசரிக்கும் அதிகமான புத்திசாலிகளாக இருப்பதையும் கண்டறிந்தார்.
பெரியவர்கள் யாரும் இதுமாதிரி பூர்வ ஜென்மத்தைப் பற்றிப் பேசவில்லை. இந்த குழந்தைகளின் கூற்றுப்படி முந்தைய பிறவியில் இவர்களில் 70 சதவிகிதத்தினர் அகால மரணமடைந்தவர்கள். மேலும் இவர்களில் 90 சதவீதத்தினர் முற்பிறவியில் ஆணாக இருந்தால் ஆணாகவும், பெண்ணாக இருந்திருந்தால் பெண்ணாகவும்தான் மறுபிறவி எடுக்கின்றனர்.
 
மேலும் சில குழந்தைகளின் உடலில் முற்பிறவியிலிருந்த மச்சங்கள் மற்றும் தழும்புகளையும் ஸ்டீவென்சன் கண்டறிந்தது வியப்பாகத்தான் உள்ளது.
 
மறுபிறப்பைப் பேசும் இந்த குழந்தைகளில் 60 சதவிகிதத்தினர் மறுபிறப்பை நம்பும் மதத்தைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள். மீதமுள்ள 40 சதவிகிதத்தினர் மறுபிறப்பை மறுக்கும் மதத்தைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள்.
 
அது என்ன? மறுபிறப்பை நம்பும் மதம் மற்றும் மறுபிறப்பை நம்பாத மதம்?
 
இந்து மற்றும் புத்த மதங்கள் மறுபிறப்பை வலியுறுத்துகின்றன. மாறாக பெரும்பாலான கிறித்துவம் மற்றும் இஸ்லாம் மத அமைப்பினர்கள் மறுபிறப்பை மறுக்கின்றனர்.
 
சுமார் 34 ஆண்டுக் காலம் ஸ்டீவென்சன் தேடி கண்டறிந்த மறுபிறவி நிகழ்வுகள் மொத்தம் 225 ஆகும். இவைகளை மறுபிறப்பு உயிரியல் என்ற 2,268 பக்கங்கள் கொண்ட இரு புத்தகங்களில் விவரித்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மறுபிறவி நிகழ்வுகளில் ஒன்றைப் பார்க்கலாம்.
 
இலங்கையில் ஒரு அம்மா "கட்டராக்கம்மா" என்ற ஓர் ஊர்ப் பெயரை சத்தமாகக் கூறியதைக் கேட்ட மூன்று வயதுக் குழந்தையொன்று உடனே பல விசயங்களைப் பேச ஆரம்பித்திருக்கின்றாள். அவைகளை விபரமாகப் பார்க்கலாம்.
 
அந்த குழந்தை கட்டராக்கம்மாவில் முந்தைய பிறவியில் பிறந்ததாகவும், தன் மனவளர்ச்சி குன்றிய சகோதரர் தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாகவும், பின் ஆற்றில் மூழ்கி இறந்ததாகவும், தன் பூர்வஜென்ம தந்தை வழுக்கைத் தலையுடன் இருந்ததாகவும், தந்தையின் பெயர் கெராத் எனவும் அவர் கட்டராக்கம்மாவில் உள்ள புத்த கோயில் அருகில் பூ வியாபாரம் செய்வதாகவும் தான் வாழ்ந்த வீட்டில் கண்ணாடி மேற்கூரை இருந்ததாகவும் அந்த வீட்டின் பின்னால் ஒரு நாய் கட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு தினமும் இறைச்சி உணவு கொடுத்து வளர்க்கப்பட்டதாகவும் அந்த வீட்டின் அருகில் ஒரு இந்து கோயில் உள்ளதாகவும் அங்கே மக்கள் அதிகமாக தேங்காய் விடலை போடுவதாகவும் கூறியிருக்கிறாள். இதனை Dr. ஸ்டீவென்சன் ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் விபரமாக அந்த குழந்தையிடம் பேசி தெரிந்து கொண்டார்.
 
ஸ்டீவென்சன் பின்னர் கட்டராக்கம்மாவுக்குச் சென்று என்ன நடந்தது எனப் பார்த்துள்ளார். அந்தக் குழந்தை கூறியது போல் பூ வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரி இருந்திருக்கின்றார். அவரும் புத்த கோயில் அருகில்தான் வியாபாரம் பார்த்து வருகிறார். ஆனால் அவருக்குத் தலையில் நிறைய முடி இருந்துள்ளது.
 
தலையில் முடி இல்லாமல் அந்த வியாபாரியின் தாத்தா இருந்திருக்கின்றார். வியாபாரியின் பெயர் கெராத் இல்லை. ஆனால் அந்த குடும்பத்தில் கெராத் என்ற பெயருள்ள ஒருவர் இருக்கிறார். தன் இரண்டு வயதுக் குழந்தை மனவளர்ச்சி குன்றிய மகனுடன் ஆற்றங்கரையில் விளையாடிய போது தண்ணீரில் விழுந்து இறந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் எப்படி ஆற்றில் விழுந்தாள் என அவருக்குத் தெரியவில்லை. பூ வியாபாரி வீட்டில் நாய் வளர்க்கவில்லை. ஆனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்தான் நாய் வளர்த்து வந்துள்ளார். அதற்கு தினமும் இறைச்சி போட்டு வந்துள்ளதை கண்டறிந்துள்ளார்.
 
பூ வியாபாரி குடும்பமும் பூர்வஜென்ம நினைவைச் சொல்லிய குழந்தையின் குடும்பமும் ஒன்றையொன்று சந்தித்தது இல்லை. பின் எப்படி இந்த குழந்தையால் இத்தனையையும் விபரமாகச் சொல்ல முடிந்தது?
 
ஸ்டீவென்சன் தண்ணீரில் மூழ்கி இறந்த இரண்டு வயதுக் குழந்தை இப்போது மறுபிறவி எடுத்துள்ளது என்கின்றார்.
 
ஸ்டீவென்சனின் மறுபிறவி பற்றிய ஆராய்ச்சியில் கண்டறிந்தது என்னவென்றால், மறுபிறவி பற்றிப் பேசும் குழந்தைகளின் பிறப்புக்கும் முற்பிறவியில் அவர்கள் இறந்த காலத்திற்கும் இடையே சராசரியாக 16 மாதங்கள் இருப்பதாகக் கண்டறிந்தார்.
 
அதே நேரத்தில் இறந்த பின் ஒருவரின் ஆன்மா 46 நாட்கள் மறுபிறவிக்காகவோ அல்லது முக்திக்காகவோ காத்திருக்கிறது என்று புத்த மதத்தினர் நம்புகின்றனர். அந்த நாளில் மதச்சடங்குகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் இறந்தபின் 41ஆம் நாள் சடங்குகள் நடத்தப்படுகின்றன.
 
இந்த நாள் வரை இறந்தவரின் ஆன்மா அவர் வாழ்ந்த இடத்தைச் சுற்றி வருவதாகத் தமிழகத்திலுள்ள பல மக்கள் நம்புகின்றனர். மேலும் இறப்பிலிருந்து 16வது நாளை உத்தரகிரியை (கருமாதி) எனவும் கிரேக்கியம் எனவும் அழைக்கின்றனர். கிரேக்கியத்தை இப்போது இறப்பிலிருந்து 13 நாளில் அனுசரிக்கின்றனர். இறப்பிலிருந்து 30வது நாளை மாசியம் என அனுசரிக்கின்றனர். இது தவிர வருடாவருடம் அந்த ஆன்மாவுக்குச் சடங்குகள் நடத்தப்படுகின்றன.
 
மக்களின் நம்பிக்கையும் மருத்துவர் ஸ்டீவென்சனின் ஆராய்ச்சி முடிவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. காரணகாரியமாகவே தமிழக மக்கள் இந்த சடங்குகளை நடத்துகின்றார்களோ என நம்பத் தோன்றுகின்றது. ஆனால் உண்மை என்னவென்று சற்று விரிவாகப் பார்ப்போம்.