திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (21:25 IST)

ரஷ்யாவுக்கு எதிராகப் போருக்குத் தயாராகிறதா பிரான்ஸ்? நேட்டோ ராணுவக் கூட்டணி என்ன சொல்கிறது?

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனை ஆதரிக்க மேற்கு நாடுகள் தங்கள் துருப்புக்களை அனுப்பும் யோசனையை தவிர்க்கக் கூடாது என பேசியிருந்தார். அவருடைய இக்கருத்து ஐரோப்பா முழுவதும் அதனைக் கடந்தும் எதிர்வினைகளை பெற்று வருகிறது.
 
பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள், நேட்டோ உறுப்பினர்கள் ஆகியோர், இதுகுறித்து தங்கள் கருத்து வேறுபாடுகளை பரவலாக வெளிப்படுத்த வழிவகுத்தது.
 
யுக்ரேனுக்கு மேற்கத்திய துருப்புக்களை அனுப்புவது ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே நேரடி மோதலை ஏற்படுத்தும் என்று ரஷ்யா பலமுறை எச்சரித்துள்ளது .
 
"இந்த விவகாரத்தில் ‘இது நிகழ்ந்திருக்கலாம்’ என நாம் நினைப்பது குறித்து பேசக்கூடாது. ஆனால், (ஒரு மோதலின்) தவிர்க்க முடியாத தன்மையைப் பற்றி பேச வேண்டும். இதை நாங்கள் இப்படித்தான் மதிப்பிடுகிறோம்,” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பிரான்ஸ் அதிபரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பியபோது கூறினார்.
 
பெஸ்கோவ் "இந்த நாடுகள் (மேற்கு நாடுகள்) அதை மதிப்பீடு செய்து விழிப்புடன் இருக்க வேண்டும். இது (துருப்புக்களை அனுப்புவது) அவர்களின் நலன்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் நாட்டு குடிமக்களின் நலன்களுக்கும் ஏற்றதா என அவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
 
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறுகையில், "இதுபோன்ற எண்ணங்களை வெளிப்படுத்துபவர்கள், தங்கள் அறிவை ஐரோப்பாவிற்கு பாதுகாப்பான, பகுத்தறிவு சிந்தனைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்," என தெரிவித்தார்.
 
ரஷ்ய துருப்புக்கள் சமீபத்தில் யுக்ரேன் பிரதேசத்தில் முன்னேறியுள்ளன. அதேநேரத்தில், யுக்ரேனியர்கள் ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர்.
 
ஏராளமான பீரங்கி வெடிமருந்துகளுடன் மிகப்பெரும் ரஷ்ய துருப்புக்களுடன் தொடர்ந்து போரிடுவதற்கு, யுக்ரேன் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து, குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து நவீன ஆயுதங்களை பெரிதும் நம்பியுள்ளது .
 
ஆனால் அதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு அமெரிக்க பேரவையில் உடன்பாடு இல்லாதது மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விநியோகத்தில் தாமதம் ஆகியவை யுக்ரேன் ராணுவத்தின் நிலைமையை சிக்கலாக்குகின்றன.
 
 
பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பிய தலைவர்கள் கூட்டத்தில், யுக்ரேனின் வெற்றி ஐரோப்பாவின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது என்று மக்ரோங் கூறினார். இந்த உச்சி மாநாட்டில் அந்நாட்டுக்கு ராணுவ வீரர்களை அனுப்புவது சாத்தியமா இல்லையா என்பது குறித்து விவாதித்தனர்.
 
"தற்போது தரைப்படைகளை அனுப்புவதில் ஒருமித்த கருத்து இல்லை. ஆனால் எதையும் நிராகரிக்க முடியாது," என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்தார். "இந்தப் போரில் ரஷ்யா வெற்றி பெறுவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வோம். ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ரஷ்யாவின் தோல்வி அவசியம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என அவர் கூறினார்.
 
கடந்த செவ்வாய்கிழமை, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர், ஸ்டீஃபன் செஜோர்ன், அந்நாட்டு அதிபரின் கருத்து குறித்து கூறுகையில், தீவிரமான போரில் துருப்புக்களை ஈடுபடுத்துவதை மக்ரோங் குறிப்பிடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
 
"யுக்ரேனை ஆதரிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, யுக்ரேனிய பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றுதல், இணைய பாதுகாப்பு, ஆயுதங்கள் உற்பத்தி ஆகியவை குறித்து நான் யோசித்து வருகிறேன்," செஜோர்ன் பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.
 
 
'பிரிட்டன் ஏற்கனவே துருப்புகளை அனுப்பியுள்ளது'
எப்படியிருந்தாலும், மக்ரோங்கின் பரிந்துரை உயர்மட்ட உலகத் தலைவர்கள் சிலரால் நிராகரிக்கப்பட்டது.
 
ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ், "ஒன்று தெளிவாக உள்ளது: ஐரோப்பிய நாடுகள் அல்லது நேட்டோவில் இருந்து தரைப்படைகளை அனுப்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை," என்றார்.
 
பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக், தனது பங்குக்கு, தனது நாடு "ஏற்கனவே சிறிய எண்ணிக்கையிலான துருப்புக்களை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளது," என்று கூறினார்.
 
“நாங்கள் பெரியளவிலான துருப்புக்களை அனுப்பத் திட்டமிடவில்லை. பிரிட்டன் தனது பிரதேசத்தில் ஏராளமான யுக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. நிச்சயமாக, நாங்கள் யுக்ரேனிய துருப்புக்களுக்கு உபகரணங்கள் மற்றும் பிறவற்றை அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம்,” என தெரிவித்தார்.
 
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 'யுக்ரேனுக்கு அமெரிக்கா துருப்புக்களை அனுப்பாது' என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், யுக்ரேனிய துருப்புக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ராணுவ உதவியை வழங்குவதுதான் 'வெற்றிக்கான பாதை' என தான் நம்புவதாக பைடன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
 
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அலுவலகம், "ஐரோப்பிய நாடுகள் அல்லது நேட்டோவின் துருப்புக்கள் யுக்ரேனிய பிரதேசத்தில் இருப்பதற்கு இத்தாலியின் ஆதரவு இல்லை," என்று கூறியது.
 
நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் யுக்ரேனுக்கு உடனடியாக துருப்புக்கள் அனுப்பும் யோசனையை நிராகரித்தார். "நேட்டோ போர் துருப்புக்களை யுக்ரேனிய பகுதிக்கு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
 
சுவீடன், ஹங்கேரி, போலந்து மற்றும் செக் குடியரசின் தலைவர்களும் படைகளை போர்முனைக்கு அனுப்பும் நோக்கத்தை நிராகரித்துள்ளனர்.
 
யுக்ரேனுக்கு வீரர்களை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல், மக்ரோங் தனது உரையில் அந்நாட்டு தலைநகர் கீயவ்-க்கு 'நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை' வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் குறிப்பிட்டுள்ளார். இது மோதலுக்கு வழிவகுக்கும் என்ற மேற்கு நாடுகளின் அச்சத்தால் இதுவரை நடக்கவில்லை.
 
 
 
சர்வதேச அரசியல் நிபுணரான உல்ரிச் ஸ்பெக்கைப் பொறுத்தவரை, இத்தகைய கருத்துக்கள் மூலம் மாஸ்கோவை விழிப்புடன் வைத்திருக்கும் 'மூலோபாய நிச்சயமற்ற தன்மையை' ஏற்படுத்துவதுதான் மக்ரோங்கின் நோக்கம் என்றார்.
 
"ஆனால், இதுபோன்ற விஷயங்கள் முற்றிலும் எதிர்பாராதது அல்ல: யுக்ரேனுக்கு உறுதியான மற்றும் பெரியளவிலான ராணுவ ஆதரவு தேவை. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரான்ஸ் செய்யாத ஒன்று," என்று சமூக ஊடகமான ‘எக்ஸ்’ தளத்தில் அவர் தெரிவித்தார்.
 
முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியும் ராணுவ ஆய்வாளருமான நிக்கோலஸ் டிரம்மண்ட், பிரான்ஸ் அதிபர் "சர்வதேச அரங்கில் தனது பிம்பத்தை மேம்படுத்த" ஒரு தந்திரத்தைப் பயன்படுத்துகிறார் என்று நம்புகிறார்.
 
"பிரான்ஸ் அல்லது வேறு எந்த நேட்டோ நாடும் யுக்ரேன் போர்க்களத்திற்கு துருப்புக்களை அனுப்புவது சாத்தியமில்லை. அந்நாடுகள் ரஷ்யாவிற்கும் புதினுக்கும் எதிராக மறைமுக போரை நடத்தலாம், ஆனால் நேரடியாக பங்கேற்கும் விருப்பம் அவர்களுக்கு இல்லை," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
பிபிசி ரஷ்ய சேவையின் போர் செய்தியாளர் பாவெல் அக்செனோவின் கருத்துப்படி, "நீண்ட தூர ஏவுகணைகளை அனுப்புவது மற்றும் வீரர்களை நிலைநிறுத்துவது பற்றிய மக்ரோங்கின் கருத்துகள், மேற்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே மறைமுகமான 'சிவப்பு கோடுகளை' மீறுவது போன்று உள்ளது,” என தெரிவித்தார்.
 
"யுக்ரேனிய போரில் வெளிநாட்டு துருப்புக்களின் பங்கேற்பு பற்றிய மக்ரோங்கின் கருத்துக்கள் இன்னும் இன்னும் தீவிரமான மீறலாகும். அத்தகைய வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் பல்வேறு மட்டங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இக்கருத்து தற்போது மிகப்பெரிய ஐரோப்பிய நேட்டோ உறுப்பு நாட்டின் தலைவரால் கூறப்பட்டுள்ளது," என அக்செனோவ் குறிப்பிட்டார்.
 
இது சிறிய, நுட்பமான நகர்வுகளின் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.