வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 1 மார்ச் 2023 (12:38 IST)

தலித்துகள் முன்னேற்றத்தில் அலட்சியம் காட்டுகிறதா திமுக?

எஸ்சிஎஸ்பி (SCSP) எனச் சொல்லப்படும் ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி இந்த நிதியாண்டில் 63.65 சதவிகிதம் வரை செலவழிக்கப்படாமல் இருப்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்திருக்கும் நிலையில், இது தலித் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
2022-23ஆம் நிதியாண்டிற்கு ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியாக ரூ.16,422 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்த நிலையில், அதில் ரூ.5,976 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு நிறைவடைய இன்னும் ஒரே மாதமே எஞ்சியுள்ளது.
 
கடந்த நிதியாண்டில் (2021-22) இந்தத் திட்டத்திற்கு ரூ.14,388 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் ரூ.11,969 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு சுமார் ரூ.2,400 கோடிவரை திருப்பி அனுப்பப்பட்டது. அதாவது, 16.81 சதவிகிதம் வரை செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மதுரையைச் சேர்ந்த கார்த்தி என்ற சமூக செயற்பாட்டாளர் எழுப்பிய கேள்விக்கு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அளித்துள்ள பதிலில் இந்தத் தகவல்கள் உள்ளன.
 
கடந்த அதிமுக ஆட்சியில் செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட பணம் அதிகபட்சமே 6.77 சதவிகிதமாக (2020-21 நிதியாண்டு) உள்ள நிலையில், தற்போது ஆளும் திமுக ஆட்சியில் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தலித் செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி
ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி என்பது தமிழ்நாட்டிலுள்ள ஆதிதிராவிட சமூக மக்களை கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இதர சமூகங்களுக்கு இணையாக உயர்த்துவதற்காக ஒதுக்கப்படும் சிறப்பு நிதியாகும்.
 
மாநிலத்தின் மொத்த திட்ட நிதியிலிருந்து ஆதிதிராவிடர் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் ஆதிதிராவிட சமூகத்தினர் 1.44 கோடி பேர் (20.01%) இருப்பதாக 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது.
 
இது போன்ற திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் நிலையில், தமிழ்நாட்டில் 1980-81 நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி 48 துறைகளின் கீழ் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் ஆதிதிராவிட மக்களுக்காக பிரத்யேகமாக செலவு செய்யப்படும். இந்த 48 துறைகளின் கீழ் பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, தொழில்துறை உட்பட அரசின் அனைத்து துறைகளும் அடங்கும்.''
 
இந்தத் துணைத்திட்டத்தை செயல்படுத்த 48 துறைத்தலைமைகளை உள்ளடக்கிய 20 செயலாக்கத்துறைகள் உள்ளன.
 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ஒருங்கிணைப்பு அலுவலராக செயல்படுகிறார். மாவட்ட அளவில் இத்திட்டங்களைக் கண்காணிக்க ஆதிதிராவிடர் நல ஆணையர் கண்காணிப்பு அலுவலராக செயல்படுகிறார்.
 
எப்படி தெரியவந்தது?
மதுரையைச் சேர்ந்த கார்த்தி என்ற சமூக செயற்பாட்டாளர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை ஒவ்வொரு நிதியாண்டிலும் ஆதிதிராவிடர் துணைத்திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்குப் பதிலாக, இந்தத் தகவல்களை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அளித்துள்ளது.
 
இந்த துணைத்திட்ட நிதி மட்டுமல்ல, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கான நிதி ரூ.927 கோடிவரை செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதையும் சென்ற ஆண்டு கார்த்தி வெளிக்கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் தொடுத்த பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்றம், ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்கள், ஒதுக்கீடு செய்யப்படும் நிதி உள்ளிட்ட முழு விவரங்களும் அடங்கிய துறைக்கான பிரத்கேய இணையதளம் ஒன்றை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டது.
 
‘’தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் உள்ளனர். இன்றைக்கும் 445 கிராமங்களில் தீண்டாமை உள்ளதாக அரசே கூறுகிறது. இப்படியான சூழலில் வாழும் மக்களை முன்னேற்ற கூடுதல் நிதிதான் ஒதுக்க வேண்டுமேயொழிய, இருக்கிற நிதியை அரசு எடுக்கக் கூடாது.
 
2016-17 முதல் 2021-21 வரையிலான ஆறு நிதியாண்டில் மொத்தமாக 5,318 கோடி ரூபாய் ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 5,318 கோடி ரூபாயை அந்த மக்களுக்காக சரியாக பயன்படுத்தினால் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நினைத்து பாருங்கள்’’ என்கிறார் சமூக செயல்பாட்டாளர் கார்த்தி.
 
முறையாக செலவழிக்கப்படுவதில்லை
திமுக, அதிமுக என யாருடைய ஆட்சியாக இருந்தாலும் ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி முறையாக செலவழிக்கப்படுவதில்லை என்கிறார் தலித் செயல்பாட்டாளார் ஷாலின் மரியா லாரன்ஸ்.
 
’’ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி முறையாக செலவழிக்கப்படாதது குறித்து சென்ற ஆண்டே நான் கேள்வியெழுப்பினேன். இந்த சமூக மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். தலித்துகள் மீதான வன்முறைக்கு பொருளாதார பின்னணிதான் முக்கிய காரணம். பொருளாதார பின்னணி மேம்பட்டால் பாகுபாடு வேண்டுமானால் இருக்குமேயொழிய வன்முறை குறைந்துவிடும்.ஆனால், இதற்கான நிதி முறையாக செலவழிக்கப்படுவதில்லை. ஒன்று வேறு திட்டங்களுக்காக பயன்படுத்துகிறார்கள் அல்லது திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். கடந்த காலங்களில் அரசு வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வாங்குவதற்காகக் கூட இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வந்தன’’ என்கிறார் ஷாலின் மரியா லாரன்ஸ்.
 
தொடர்ந்து பேசிய அவர், ‘’10ஆம் வகுப்பு தலித் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகைகூட பல ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இருந்தது. இரண்டு ஆண்டுகளாக அது குறித்து மதுரையில் பல கூட்டங்கள் நடந்தன. இன்றைக்கும் ஆதிதிராவிடர் விடுதிகள் மோசமான நிலையில்தான் உள்ளன. பல ஆதிதிராவிடர் பள்ளிகளில் போதிய ஆசிரியர் இல்லை, இந்த மக்கள் வசிக்கும் பகுதியில் முறையான கழிப்பறை, சாலை வசதிகள் இல்லை. இந்தப் பணத்தை அதற்காக பயன்படுத்தலாமே, பொது நிதியில் ஒதுக்கி இதைச் செய்யுங்கள் என்று நாம் கூறவில்லை, இந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் செய்யுங்கள் என்றுதான் கூறுகிறோம்’’ என்கிறார்.
 
பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் உதவித்தொகையைத் தாண்டி ஆதிதிராவிட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளன. வெளிநாடுகளில் பிஹெச்டி படிப்பதற்கான உதவி, தொழில் தொடங்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் பிரத்யேக கடன், 10 லட்சம் முதல் ஒரு கோடி வரை கடன் பெறுவதற்கான ஸ்டேண்டப் இந்தியா கடன் (Stand-Up India Loan) உட்பட பல திட்டங்கள் உள்ளன. ஆனால், எந்த மக்களுக்காக இந்தத் திட்டங்கள் உள்ளதோ அந்த மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்துவதேயில்லை என்பது தலித் செயல்பாட்டாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
 
‘’ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்கள் வெளிநாடுகளில் அரசு உதவியுடன் பிஹெச்டி படிக்க முடியும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வெறும் 3 மாணவர்கள் மட்டுமே அதனால் பயனடைந்துள்ளனர். நான் அதை ஆர்டிஐ மூலம் வெளிக்கொண்டு வந்த பிறகு இந்தாண்டு மட்டும் 9 பேர் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கையும் குறைவுதான். காரணம், டெல்லியில் வருடத்திற்கு நூறு மாணவர்கள்வரை செல்கின்றனர். ஆனால், இந்த மாதிரி ஒரு திட்டம் இருக்கிறது என்பதே இங்கு பலருக்கும் தெரியாது’’ என்கிறார் சமூக செயல்பாட்டாளர் கார்த்தி.
 
அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் ஆதிதிராவிட துணைத்திட்ட நிதி அதிகம் செலவழிக்கப்படாமல் இருப்பது குறித்து பேசிய ஷாலின் மரியா லாரன்ஸ், தலித்துகளுக்கு திராவிட இயக்கம் பிச்சை போட்டது என்று திமுகவினர் பேசினர். ஆனால், அரசியலமைப்பு உரிமைப்படி தலித்துகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியை இவர்கள்தான் இத்தனை ஆண்டுகாலம் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது தலித்துகள் வளர்ச்சியில் திமுகவுற்கு ஆர்வமில்லாதைத்தான் காட்டுகிறது. தலித்துகளுக்கு நிறைய செய்தால் அது மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் தங்கள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவிடுவோ என்றுகூட அவர்கள் நினைக்கலாம். அதே நேரத்தில் அதிமுக ஆட்சியில் இந்தத் தொகை குறைவாக இருக்கிறது என்றால் வேறு ஏதேனும் காரணங்களுக்கு அவர்கள் இந்த நிதியைப் பயன்படுத்தினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இரண்டு கட்சிகளுமே சாதி வாக்கு வங்கி காரணமாக தலித்துகளை கண்டுகொள்வதில்லை’’ என்றார்.
 
அரசு என்ன சொல்கிறது?
ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி அதிகம் செலவழிக்கப்படாமல் இருப்பது குறித்து விளக்கம் கேட்க அந்தத் துறையின் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தரப்பை தொடர்பு கொண்டோம். அமைச்சர் தரப்பில் பேசியவர்கள் துறையின் இயக்குநர் ஆனந்த் ஐ.ஏ.எஸிடம் பேசுமாறு கூறினர்.
 
நம்மிடம் பேசிய ஆனந்த் ஐ.ஏ.எஸ், ’’இது இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு கணக்கு. எப்போதுமே மூன்றாவது காலாண்டில் நிதி அதிகமாக இருக்கும். நிதியாண்டு முடிவடைந்த பிறகு பார்த்தால் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கும். எங்கள் துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலுமே இவ்வாறுதான் இருக்கும்.
 
ஆதிதிராவிட துணைத்திட்ட நிதியைப் பொறுத்தவரை ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஒவ்வொரு காலாண்டிற்கும் தலைமைச் செயல் அதிகாரியே ஆய்வு செய்கிறார். எங்கு குறைவாக செலவாகிறது, ஏன் குறைவாக உள்ளது, கூடுதலாக என்ன செய்யலாம், எங்கு அதிகம் செலவாகிறது என்பதை பார்த்து ஒவ்வொரு முறையும் அதை மாற்றியமைக்கிறோம்’’ என்றார்.
 
கடந்த நிதியாண்டில் 16.81 சதவிகிதம்வரை செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பபட்டது குறித்து அவரிடம் கேட்ட போது, ஆதிதிராவிட மாணவர்களுக்கு முன்பு மாநில அரசு முழுமையாக உதவித்தொகை வழங்கியது. ஆனால், 2021-2022 நிதியாண்டிலிருந்து மத்திய அரசு 60 சதவிகிதம், மாநில அரசு 40 சதவிகிதம் என வழங்குகிறோம். நாம் பட்ஜெட்டில் 100 சதவிகிதம் மாநில அரசு நிதியில் திட்டமிட்டிருந்ததால், குறிப்பிட்ட அளவிலான தொகை செலவழிக்கப்படாமல் மிச்சம் இருந்தது’’ என்றார்.
 
மேலும், ஒவ்வொரு துறையிலும் ஆதிதிராவிட துணைத்திட்ட நிதி எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க இந்தாண்டு ஒரு தனி தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
தனிச்சட்டம் தேவை
ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியைக் கண்காணிக்க தனிச்சட்டம் தேவை என்கிறார் சமூக செயல்பாட்டாளர் கார்த்தி.
 
’’தெலங்கானாவில் தலித் பன்து (Dalit Bandhu) என்று ஒரு திட்டம் உள்ளது. அந்தத் திட்டத்தின் மூலம் தலித் மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிறப்பாக முன்னேறி வருகின்றனர். அங்கு இந்த நிதியைக் கண்காணிக்க தனிச்சட்டம் உள்ளது. எனவே தமிழ்நாட்டிலும் ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியைக் கண்காணிக்க தனிச்சட்டம் தேவை. எல்லா விஷயங்களிலும் முன்னணியில் இருக்கிறோம் என்று சொல்லும் நாம், இந்த விஷயத்திலும் முன்னணியில் இருந்தால் சிறப்பாக இருக்கும். தனிச்சட்டம் குறித்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.