வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஜனவரி 2024 (21:05 IST)

உலகில் அமெரிக்க ஆதிக்கம் பலவீனம் அடைகிறதா? யுக்ரேன் போர் மூலம் புதின் உணர்த்தியது என்ன?

சர்வதேச அரசியல் அரங்கில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற முக்கிய ஜனநாயக நாடுகள் கடந்த 12 மாதங்களில் பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன.
 
இவை எதுவும் பேரழிவை ஏற்படுத்தவில்லை என்றாலும், பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்க மேலாதிக்க மேற்கத்திய மதிப்புகளிலிருந்து மாறிவரும் உலக சமநிலையை அவை சுட்டிக்காட்டுகின்றன.
 
கருங்கடலில் சில சமீபத்திய வெற்றிகள் இருந்தபோதிலும், போர் என்பதை எடுத்துக்கொண்டால் அது யுக்ரேன் போரைப் பொருத்தளவில் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்றே நம்பப்படுகிறது.
 
அதாவது யுக்ரேனின் போர் முயற்சிக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் பில்லியன்கணக்கான டாலர்களை வழங்கிய நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இது மோசமான விளைவாக இருக்கும்.
 
கடந்த ஆண்டு இதேநேரத்தில், நவீன ராணுவ உபகரணங்கள் மற்றும் தீவிர பயிற்சிகளின் மூலம் யுக்ரேனிய ராணுவம் மீண்டும் முன்னிலை பெற முடியும் என்று நேட்டோ அதிக நம்பிக்கை கொண்டிருந்தது.
 
ரஷ்யர்களால் கைப்பற்றப்பட்ட பெரும்பாலான பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்ற முடியும் என்ற நம்பிக்கையும் மேலோங்கியிருந்தது. ஆனால் இது நடக்கவில்லை.
 
இங்கே திட்டமிடல் தான் பிரச்னையாக உள்ளது. பிரிட்டனின் சேலஞ்சர் 2 மற்றும் ஜெர்மனியின் லெப்பார்ட் 2 போன்ற நவீன போர் டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்பத் துணிய முடியுமா? அது அதிபர் விளாடிமிர் புதினை அவசரமாகப் பதிலளிக்கத் தூண்டுமா? என்று நேட்டோ நாடுகள் யோசிக்க நீண்ட காலம் எடுத்தன.
 
இறுதியில், மேற்கு நாடுகள் டாங்கிகளை வழங்கின. ஆனால் ரஷ்ய அதிபர் புதின் எதுவும் செய்யவில்லை. இருப்பினும் ஜூன் மாதத்தில் அந்த டாங்கிகளை அவர்கள் போர்க்களத்தில் நிலைநிறுத்தத் தயாராக இருந்த நேரத்தில், ரஷ்ய தளபதிகள் வரைபடங்களைப் பார்த்து, முக்கிய யுக்ரேனிய போர் நடவடிக்கைகள் எங்கு மேற்கொள்ளப்படும் என்பது பற்றிய துல்லியமான முடிவுகளை எடுத்தனர்.
 
யுக்ரேன் தெற்கே ஜபோரிஷியா பகுதி வழியாக அசோவ் கடலை நோக்கி நகர்ந்து, ரஷ்ய முன்கள படையணியை உடைத்து, அதை இரண்டாகப் பிரித்து, கிரைமியாவை இணைக்க விரும்புவதாக அவர்கள் கண்டுபிடித்தனர்.
 
2022இல் தலைநகர் கிய்வைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் ரஷ்ய ராணுவம் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஆனால் அது எங்கெல்லாம் சிறந்து விளங்கமுடியுமோ, அங்கெல்லாம் தன் முழுமையான வலிமையைக் காட்டியது.
 
2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில், யுக்ரேனிய படைப்பிரிவுகள் பிரிட்டனிலும் பிற இடங்களிலும் பயிற்சி பெற்று, கிழக்கு நோக்கி டாங்கிகளுடன் அனுப்பப்பட்ட போது, ​​ரஷ்யா நவீன வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிக விரிவான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
 
டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள், சுரங்கங்கள், ராணுவ எதிர்ப்பு கண்ணிவெடிகள், பதுங்கு குழிகள், அகழிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பீரங்கிகள் இணைந்து யுக்ரேனின் திட்டத்தை முறியடித்தன. யுக்ரேனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய எதிர்ப்புத் தாக்குதல் தோல்வியடைந்தது.
 
 
கருங்கடல் பகுதியில் அண்மையில் சில வெற்றிகள் கிடைத்தபோதிலும், தற்போதைய போர்ச் யுக்ரேனுக்கு உகந்ததாக இல்லை.
 
யுக்ரேனில் வெடிமருந்துகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 60 பில்லியன் டாலர் ராணுவ உதவிகளை அளிக்கும் வெள்ளை மாளிகையின் முயற்சிகளை அமெரிக்க நாடாளுமன்றம் தடுக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 50 பில்லியன் யூரோ உதவிகளை ஹங்கேரி நிறுத்தி வைத்துள்ளது.
 
இறுதியில் ஒருவரோ அல்லது இருவரும் கூட வெற்றிபெறலாம், ஆனால் அதற்குள் அந்த வெற்றி மிகவும் தாமதமாகலாம். யுக்ரேன் ராணுவம் ஏற்கனவே தற்காப்பு நிலையில் உள்ளது. இதற்கிடையில், ரஷ்யா தனது பொருளாதாரத்தை போர்க்கால அடிப்படையில் வைத்துள்ளது.
 
அது தனது தேசிய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை பாதுகாப்பிற்காக ஒதுக்கியுள்ளது. யுக்ரேனின் முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
வெளிப்படையாக, இந்த நிலைமை யுக்ரேனுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அப்போது போரின் அலை தனக்கு சாதகமாக மாறும் என்று அது நம்பியது. ஆனால் அது மேற்குலக நாடுகளுக்கு ஏன் முக்கியம்?
 
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட முறையில் தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதினுக்கு இது புரியும்.
 
வெற்றியை அறிவிக்க அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவர்கள் கைப்பற்றிய, யுக்ரேன் நாட்டின் சுமார் 18 சதவிகித பிரதேசத்தைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான்.
 
நேட்டோ தனது ஆயுதக் களஞ்சியத்தை காலி செய்துள்ளது. அதன் நட்பு நாடான யுக்ரேனை ஆதரிப்பதற்காக போரில் ஈடுபடுவதைத் தவிர்க்க அது தன்னால் இயன்றவரை முயன்றுள்ளது.
 
இதற்கிடையில், பால்டிக் நாடுகளான எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா மற்றும் அனைத்து நேட்டோ உறுப்பினர்களும், யுக்ரேனில் புதின் வெற்றி பெற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவர் தன்னுடைய கொள்கைகளை அப்படியே பின்பற்றுவார் என்று உறுதியாக நம்புகின்றன.
 
 
ரஷ்ய தாக்குதலுக்கு இரையான யுக்ரேன் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புக்களை சரிசெய்வதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.
 
 
கோட்பாட்டு அளவில் சொல்வதென்றால் ரஷ்ய அதிபர் புதின் ஒரு தேடப்படும் நபர்.
 
மார்ச் 2023 இல், நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், யுக்ரேனில் ரஷ்யா குழந்தைகளுக்கு எதிரான போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக புதின், ரஷ்ய குழந்தைகள் நல உரிமை ஆணையர் மீதும் குற்றஞ்சாட்டியது.
 
இதனால் சர்வதேச அளவில் அதிபர் புதின் தீண்டத்தகாதவராக மாறிவிடுவார் என்று மேற்கத்திய நாடுகள் எதிர்பார்த்தன.
 
அவருக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்பு அதிகரிக்கும் என்றும் வெளிநாடுகளுக்கு புதின் சென்றால் கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் மேற்குலக நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் இவற்றில் எதுவும் நடக்கவில்லை.
 
அந்த நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், அதிபர் புதின் கிர்கிஸ்தான், சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். ஒவ்வொரு முறையும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் அவர் கிட்டத்தட்ட பங்கேற்றார் என்பதே உண்மை.
 
ஐரோப்பிய ஒன்றியத் தடைகளால் ரஷ்யப் பொருளாதாரம் மண்டியிடும் என்றும் இது புதினைத் தனது தாக்குதலைத் திரும்பப்பெற வைக்கும் என்றும் நம்பப்பட்டது.
 
ஆனால் ரஷ்யா இந்த தடைகளை தாங்கி நிற்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது சீனா மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகள் மூலம் பல தயாரிப்புகளை உலக நாடுகளுக்கு வழங்குகிறது. உண்மை என்னவென்றால், மேற்குலக நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதில் இருந்து பெரிதும் விலகியிருக்கின்றன. ஆனால் ரஷ்யா குறைந்த விலையில் இருந்தாலும், மற்ற தேவைப்படும் வாடிக்கையாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அவற்றை விற்றுவருகிறது.
 
யுக்ரேனில் புதினின் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு மேற்குலக நாடுகளுக்கு வெறுக்கத்தக்கதாக உள்ளது. ஆனால் அது உலகின் பிற பகுதிகளில் அதேபோன்ற நிலையை ஏற்படுத்தவில்லை.
 
பல நாடுகள் இதை ஐரோப்பாவின் பிரச்னையாக பார்க்கின்றன. இதற்கு நேட்டோவை குற்றம் சாட்டும் சிலர், கிழக்கில் தனது எல்லையை மிக அதிகமாக விரிவுபடுத்தி ரஷ்யாவை தூண்டிவிட்டதாக விமர்சிக்கின்றனர்.
 
யுக்ரேனியர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விஷயம் என்னவென்றால், ரஷ்ய வீரர்கள் செய்யும் பெரிய அளவிலான அட்டூழியங்கள் மற்றும் அத்துமீறல்கள் பற்றி இந்த நாடுகளுக்கு தெரியாது.
 
 
மேற்குலக நாடுகளின் நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து விட்டு யுக்ரேன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்திவருகிறது.
 
 
சமீபத்தில் ரியாத்தில் நடந்த உச்சிமாநாட்டின் போது அரபு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மேற்கத்திய நாடுகள் இரட்டைத் தரம் கொண்டவை என்று விமர்சித்தனர்.
 
இந்த மேற்கத்திய அரசுகள் போலித்தனமானவை என்றும் அப்போது பேசப்பட்டது. மேலும், “ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படும் காஸாவில் போர் நிறுத்தத்தை இந்த அரசுகள் மறுக்கும் போது யுக்ரேனில் பொதுமக்களைக் கொன்றதற்காக ரஷ்யாவை நாங்கள் கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?” என்றும் இந்த நாடுகள் கேள்வி எழுப்பின.
 
இஸ்ரேல்-ஹமாஸ் போர், தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸின் கொடிய அக்டோபர் 7 தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைத்து காஸாவாசிகள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு தெளிவாக பேரழிவை ஏற்படுத்தியது. இது மேற்குலகிற்கும் மோசமானதாகவே இருக்கிறது.
 
இந்த குளிர்காலத்தில் ரஷ்யாவின் முன்னேற்றத்தை தடுக்க போராடி வரும் நேட்டோ நட்பு நாடான யுக்ரேனிடம் இருந்து உலகின் கவனத்தை இந்த போர் திசை திருப்பியுள்ளது. இது அமெரிக்க ஆயுதங்களை கிய்வில் இருந்து இஸ்ரேலை நோக்கி திருப்பியிருக்கிறது.
 
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, பல முஸ்லிம்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்றவர்களின் பார்வையில், ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலைப் பாதுகாப்பதன் மூலம், அது அமெரிக்காவையும் பிரிட்டனையும் காஸாவின் அழிவுக்கு உடந்தையாக்கியுள்ளது.
 
அக்டோபர் 7 ஆம் தேதி சிரியாவில் உள்ள அலெப்போ நகரைக் குண்டுவீசி தாக்கியதில் இருந்து ரஷ்ய விமானப்படை மத்திய கிழக்கில் அதன் ஆதரவை அதிகரித்து வருகிறது.
 
போர் ஏற்கனவே தெற்கு செங்கடல் வரை பரவியுள்ளது. அங்கு இரான் ஆதரவு ஹூதி போராளிகள் வணிகக் கப்பல்களைத் தாக்குவதால், உலகின் முக்கிய கப்பல் நிறுவனங்கள் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையைச் சுற்றி தங்கள் பாதையை மாற்ற முயற்சிக்கும்போது எரிபொருட்களின் விலைகள் உயரும்.
 
அதிகரிக்கும் இரானின் செல்வாக்கு
இரான் அணு ஆயுதங்களை ரகசியமாக தயாரித்து வருவதாக பொதுவான சந்தேகங்கள் தொடர்கின்றன. இதை அந்நாட்டு அரசு மறுக்கிறது.
 
மேற்கத்திய நாடுகளின் முயற்சிகள் இருந்த போதிலும், அது தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இது இராக், சிரியா, லெபனான், ஏமன் மற்றும் காஸாவில் தனது ராணுவ கூடாரங்களை பினாமி போராளிகள் மூலம் பரப்பியுள்ளது. அந்நாட்டு அரசு இந்த போராளிகளுக்கு பணம், பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்குகிறது.
 
இந்த ஆண்டு இரான் ரஷ்யாவுடன் நெருக்கமான கூட்டணியை உருவாக்கியுள்ளது. யுக்ரேனிய நகரங்கள் மீது ஏவுவதற்காக ஷஹீத் ட்ரோன்களை ரஷ்யாவிற்கு அது தொடர்ந்து வழங்கி வருகிறது.
 
பல மேற்கத்திய நாடுகளால் அச்சுறுத்தலாக உணரப்பட்ட போதிலும், மத்திய கிழக்கில் பாலத்தீனத்தின் அனுதாபியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு காஸா போரினால் இரான் பலனடைந்துள்ளது.
 
 
ரஷ்யாவை எதிர்த்துப் போரிடுவதில் யுக்ரேன் நாடு எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறவில்லை.
 
ஆப்ரிக்காவிலும் காலூன்றும் ரஷ்யா
மேற்கு ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதியில் இருக்கும் நாடுகள் ஒவ்வொன்றாக ராணுவப் புரட்சிக்கு பலியாகி வருகின்றன.
 
இப்பகுதியில் ஜிஹாதி கிளர்ச்சியை சமாளிக்க உதவிய ஐரோப்பிய படைகள் புறக்கணிக்கப்பட்டதால் தான் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
மாலி, பர்கினா ஃபாசோ மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகியவற்றின் முன்னாள் பிரெஞ்சு காலனிகள் ஏற்கனவே ஐரோப்பியர்களுக்கு எதிராக திரும்பியுள்ளன. நைஜர் ஜூலை மாதம் ஒரு சதித் திட்டத்தை எதிர்கொண்டதைத் தொடர்ந்து மேற்கத்திய சார்பு அதிபரை வெளியேற்றியுள்ளது.
 
கடைசியாக மீதமிருந்த பிரான்ஸ் ராணுவத்தினரும் இப்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும் 600 அமெரிக்க வீரர்கள் இன்னும் அங்கே இரண்டு தளங்களில் உள்ளனர்.
 
பிரான்ஸ் மற்றும் சர்வதேசப் படைகள் இருந்த இடங்கள் அனைத்தும் ரஷ்ய கூலிப்படையினரைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. வாக்னர் குழு, ஆகஸ்ட் மாதம் விமான விபத்தில் தங்கள் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் மர்மமான முறையில் இறந்த போதிலும் தங்கள் லாபகரமான வணிக ஒப்பந்தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.
 
இதற்கிடையில், ஒரு காலத்தில் மேற்குலக நாடுகளின் நட்பு நாடாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்கா, ரஷ்ய மற்றும் சீன போர்க் கப்பல்களுடன் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்தி வருகிறது.
 
வட கொரியாவின் ஜனநாயக மக்கள் குடியரசு அதன் தடைசெய்யப்பட்ட அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் காரணமாக கடுமையான சர்வதேச தடைகளுக்கு உட்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
 
இருந்த போதிலும், கடந்த ஆண்டிலிருந்து ரஷ்யாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. கடந்த ஆண்டில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய துறைமுக நகருக்கு பயணம் மேற்கொண்டார்.
 
இதற்குப் பிறகு, யுக்ரேனில் சண்டையிடும் ரஷ்யப் படைகளுக்கு வடகொரியா பத்து லட்சம் பீரங்கி குண்டுகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
 
வட கொரியா பல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. அவை இப்போது அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களை அடையும் திறன் கொண்டவை என நம்பப்படுகிறது.
 
 
 
2023 ஆம் ஆண்டு அமெரிக்கா - சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் ஓரளவிற்கு குறைக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் இடையே வெற்றிகரமாக உச்சிமாநாடு நடைபெற்றது.
 
ஆனால் தென் சீனக் கடலின் பெரும்பகுதி மீதான உரிமை கோரலில் இருந்து சீனா பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.
 
சீனா ஒரு புதிய நிலையான வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த வரைபடம் பல ஆசிய-பசிபிக் நாடுகளின் கடற்கரைகளையும் உரிமை கோரும் வகையில் அமைந்துள்ளது.
 
தைவான் மீதான உரிமையைக் கூட அது இன்னும் கைவிடவில்லை. தேவைப்பட்டால், தைவானை வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப் போவதாகவும் சீனா ஏற்கெனவே சபதம் மேற்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் தைவானில் பொது வாக்கெடுப்பு நடத்த சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது.
 
நம்பிக்கைக்கு என்ன காரணம்?
இது போன்ற ஒரு இருண்ட பின்னணியில் நம்பிக்கைக்கான வாய்ப்புகளைப் பார்ப்பது மேற்கத்திய நாடுகளுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு சாதகமான அம்சம் என்னவென்றால், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஈர்க்கப்பட்ட நேட்டோ கூட்டணி, அதன் தற்காப்பு நோக்கத்தை தெளிவாக மீண்டும் கண்டுபிடித்துள்ளது.
 
தற்போது சில விரிசல்கள் தென்பட்டாலும் மேற்குலகம் இதுவரையில் காட்டிய ஒருமித்த கருத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
ஆனால் மத்திய கிழக்கில் தான் முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். காஸா-இஸ்ரேல் எல்லையின் இருபுறமும் நடந்த பயங்கரமான நிகழ்வுகளின் காரணமாக நேரிட்ட விளைவுகளில் இது ஒரு பகுதியாகும்.
 
அக்டோபர் 7 க்கு முன், எதிர்கால பாலத்தீன நாடு பற்றிய கேள்வியின் தீர்வுக்கான தேடல் பெரும்பாலும் கைவிடப்பட்டது.
 
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை
 
பாலத்தீனர்களை இஸ்ரேல் கையாள்வதில் ஒருவித மனநிறைவு இருந்தது. இது எப்படியாவது பாதுகாப்பு ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் தீர்க்கப்படக்கூடிய ஒரு பிரச்னை. அவர்களுக்கு அவர்களின் சொந்த அரசைக் கொடுப்பதில் எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
அந்த உத்தி இப்போது அபாயகரமான தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பாலத்தீனம் என்ற ஒரு நாடு உருவாகாவிட்டால் இஸ்ரேலியர்கள் எப்போதும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியாது என்று ஒரு உலகத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக அறிவித்து வருகின்றனர்.
 
வரலாற்றில் ஒரு பிரச்னைக்கு பொருத்தமான மற்றும் நிலையான தீர்வைக் கண்டுபிடிப்பது நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருக்கும். அந்தத் தீர்வை எட்ட, இரு தரப்பிலும் வலிமிகுந்த சமரசங்களையும் தியாகங்களையும் உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது இறுதியாக உலகமே இதில் கவனம் செலுத்திவருகிறது.