உங்க ஆட்சியில ஒரு முட்டைக்கூட வாங்க முடியல..! – ரஷ்ய அதிபர் புதினை முகத்துக்கு நேராக கேட்ட முதியவர்!
ரஷ்ய அதிபர் புதினிடம் முட்டை விலை உயர்வு குறித்து நேருக்கு நேராக முதியவர் ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக வல்லரசு நாடுகளின் ஒன்றாக இருந்து வருகிறது ரஷ்யா. தொடர்ந்து பல ஆண்டுகளாக ரஷ்யா வ்ளாடிமிர் புதினின் ஆட்சியில் இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் போர் காரணமாக ரஷ்யா பொருளாதார ரீதியாக பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும் அமெரிக்க அரசு ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடையால் பல நாடுகளும் ரஷ்யாவுடனான ஏற்றுமதி இறக்குமதியை நிறுத்தியுள்ளன. இதனால் கடந்த சில மாதங்களில் முட்டை விலை ரஷ்யாவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஆண்டு இறுதியில் பொதுமக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி அதில் மக்களின் கேள்விக்கு மீடியாக்கள் முன்னிலையில் பதில் அளிப்பதை புதின் வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறாக இந்த ஆண்டிற்கான பொதுமக்கள் கேள்வி பதில் கூட்டம் நடந்தபோது அதில் கலந்து கொண்ட முதியவர் ஒருவர், நாட்டில் முட்டை, கோழி இறைச்சி கூட விலை உயர்ந்து விட்டதாகவும், சாமானியர்கள் முட்டை வாங்கவே சிரமப்பட வேண்டியது உள்ளதாகவும் தனது வேதனையை பேசியுள்ளார்.
அதற்கு அதிபர் புதின் ”நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இது அரசு பணியின் தோல்வி. எதிர்காலத்தில் இந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு நல்ல சூழ்நிலை உருவாகும்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K