செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (10:40 IST)

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு முறை அறிமுகம் – சேவைகளைப் பெறுவது எப்படி?

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சேவைகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
 
சென்னையில் உள்ள எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையிலும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த சேவைகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளன.
 
தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், தரமான சிகிச்சையை அரசு மருத்துவமனைகளிலேயே வழங்க இந்த முயற்சியை எடுத்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் மா சுப்ரமணியன், "கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கு தனியார் மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மக்களுக்கு தரமான சிகிச்சை எளிதாக கிடைக்க, தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னை மற்றும் மதுரையில் அறிமுகப்படுத்துகிறோம். இவற்றின் வெற்றியை பொருத்து அடுத்தடுத்த இடங்களிலும் மையங்கள் திறக்கப்படும்,” என்றார்.
 
மேலும் பேசிய அவர், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கான தேவை மிக அதிகமாகவே உள்ளதாகக் கூறினார். “தனியார் துறையில் சிலர் இதை சேவை மனப்பான்மையுடன் செய்கிறார்கள். ஆனால் சிலர் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். கடந்த காலங்களில், ஐந்து ஆறு மையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே அரசே இதில் வழிகாட்டியாக இருக்கும் வகையில் இந்த மையங்கள் திறக்கப்படவுள்ளன," என்றார்.
 
 
அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு
தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதை அமல்படுத்துவதற்கு அதிக நிதி செலவாகும் என்பதால் செயலாக்கம் பெறாமலே இருந்தது.
 
இந்நிலையில், கடந்த ஆண்டு தமிழக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தது.
 
அதன்படி சென்னையில் உள்ள எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையிலும், மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தலா 2.5 கோடி செலவில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளன. இதில் ஒவ்வொரு மையத்திலும் கட்டமைப்புக்கு ரூ.1.5 கோடியும், தேவையான மருந்துகளை பெற ரூ.1 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
செயற்கை கருத்தரிப்பு என்றால் என்ன?
இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் மருத்துவ உதவியுடன் குழந்தைப் பெற்றுக் கொள்வது செயற்கை கருத்தரிப்பு முறை என கூறப்படுகிறது. இதில் Intra Uterine Insemination எனப்படும் பெண்ணின் கருப்பைக்குள் விந்தணுவை செலுத்துவது, in-vitro fertilization எனப்படும் ஐ.வி.எப் சிகிச்சை முறைகளே அதிகம் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் ஆகும்.
Intra Uterine Insemination என்பது, விந்தணுக்களை ஆய்வகத்தில் சேகரித்து, அதில் வளமான விந்துணுக்களை தரம் பிரித்து அவற்றை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தும் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறை சென்னை, மதுரை உட்பட பல அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது. புறநோயாளி பிரிவிலேயே இந்த சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம்.
 
வரும் செப்டம்பர் மாதம் முதல், in-vitro fertilization எனப்படும் ஐ.வி.எப் சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பெண்ணின் கருமுட்டைகளை எடுத்து ஆய்வக சூழலில் வளர வைத்து, அதில் விந்தணுக்களைச் செலுத்தி, அவை கருவாக உருவான பிறகு, அந்தக் கருவை பெண்ணின் கருப்பையில் பொருத்துவது தான் ஐ.வி.எப் முறை ஆகும்.
 
அரசு மருத்துவமனையில் என்ன சேவைகள் பெறலாம்?
 
 
அரசு செயற்கை கருத்தரிப்பு மையங்களில் ஆண்களுக்கான விந்தணு பரிசோதனை, பெண்களுக்கான கருமுட்டை, கருமுட்டை குழாய் பரிசோதனை , கருப்பை நுண்ணறைகள் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.
 
இந்த சிகிச்சை முறைகள், முதல் அடுக்கு இரண்டாம் அடுக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 
முதல் அடுக்கு சிகிச்சைகளில் பெண்களுக்கு அண்ட விடுப்பை (கருமுட்டை உருவாதல்) உந்தும் மருந்துகள் வழங்கப்படும். அண்டவிடுப்பைக் கண்டறிய கருப்பை நுண்ணறைகள் கண்காணிக்கப்படும். கருமுட்டை குழாயில் அடைப்புகள் இருந்தால் அவை நீக்கப்படும். ஆண்களின் விந்தணுக்களை பெருக்க அடிப்படை மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.
 
யாரெல்லாம் IVF சிகிச்சைப் பெறலாம்?
 
இந்தச் சிகிச்சைகளில் பலன் கிடைக்காதவர்களுக்கு இரண்டாம் அடுக்கு சிகிச்சையான IVF வழங்கப்படும்.
 
அண்டவிடுப்பு இயல்பாக இல்லாத பெண்கள், கருமுட்டை குழாயில் சிக்கல்கள் கொண்டவர்கள், வயது மூப்பு காரணமாக வளமான முட்டைகள் இல்லாதவர்கள், விந்துணுக்கள் குறைவாக உள்ள ஆண்கள் உள்ளிட்டோருக்கு இந்த சிகிச்சை வழங்கப்படும்.
 
இது குறித்து சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் கே.கலைவாணி கூறுகையில், தற்போது புறநோயாளி பிரிவில் முதல் அடுக்கு சிகிச்சைகளில் பலன் கிடைக்காத, இந்த சிகிச்சை மிகவும் தேவைப்படுபவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறினார்.
 
“முதல் கட்டமாக பத்து பேருக்கு இந்த சிகிச்சை வழங்கப்படும். ஓராண்டுக்கு 50 முதல் 60 பேருக்கு இந்த சிகிச்சை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதற்காக மூன்று பேராசிரியர்கள், இரண்டு உதவிப் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் கரு உருவாக்கத்தில் பயிற்சி பெற்ற embryologist ஆவர்," என்றார்.
 
தனியார் கருத்தரிப்பு மையங்கள்
இந்தியக் குடும்பங்களில், மணம்‌ புரியும் ஒவ்வொரு தம்பதியும் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்வது சமூக கட்டாயமாக உள்ளது. எதேனும் உடலியல் குறைபாடுகள் இருந்தாலும், தத்தெடுத்தல் முயற்சிகள் கடைசி தேர்வாகவே உள்ளன. எனவே, செயற்கை முறையில் கருத்தரித்தலுக்கு முயல்கிறார்கள்.
 
1980களில் செயற்கை கருத்தரிப்பு நடைமுறைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளில் தனியார் கருத்தரிப்பு மையங்களின் வளர்ச்சி அபரிமிதமானது. மிகவும் நுட்பமான தொழில்நுட்பம் பயன்படுத்துவதாலும், கொண்டு இந்த சேவைகள் வழங்கப்படுவதால் இவை அதிக கட்டணம் பெறும் சேவைகளாகவே உள்ளன.
 
இந்தியச் சமூகங்களில் திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமான சமூக அழுத்தம் மிக்கது என்பதால், அதிக கட்டணங்களை எளிதாக செலுத்த முடியாதவர்கள் ஏழை நடுத்தர குடும்பத்தினரும் கூட தங்கள் பல ஆண்டு கால சேமிப்பை, சிறிய சொத்துகளை விற்று செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
 
பல ஆண்டுகால கோரிக்கை தற்போது செயலாக்கம் பெறுவதாக எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் எஸ்.விஜயா கூறுகிறார்.
 
அவர் இத்திட்டம் குறித்து பேசும் போது, "சுகாதாரத்துறையின் கொள்கைகள் மகப்பேறு மரணங்களையும் பச்சிளங் குழந்தைகள் மரணங்களையும் தடுப்பதை நோக்கியே இருந்தன. மக்கள் தொகையை குறைப்பதில் தான் கவனம் இருந்ததால் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் முன்னுரிமை பெறவில்லை. அது மட்டுமில்லாமல் இவை அதிகம் செலவாகும் சிகிச்சையாக இருந்தது. இந்த சிகிச்சைக்கான கருவிகள் மட்டுமல்லாமல் இந்த சிகிச்சையின் போது எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகளின் விலை அதிகம். பல ஆண்டு கோரிக்கைக்கு பின் தற்போது இத்திட்டம் செயலாக்கம் பெறுகிறது," என்கிறார்.
 
மேலும், வசதியுள்ளவர்கள் இச்சிகிச்சைக்காக சிங்கப்பூர் ,அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள் என்றும் நடுத்தர ஏழை மக்களே இங்குள்ள தனியார் மையங்களை நாடுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். "இந்தியாவில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் தொடங்குவதற்கு பல ஆண்டுகள் முன்பே இந்த நாடுகளில் தொடங்கிவிட்டன. சிகிச்சையில் நல்ல பலன் கிடைக்க பணம் உள்ளவர்கள் அங்கே செல்கிறார்கள்," என்கிறார்.
 
'வருவாய் குறைந்தவர்களுக்கு உதவியாக இருக்கும்'
திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன ஜெகன் தனியார் கருத்தரிப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவர் இது வரை சுமார் ஏழு லட்சம் வரை செலவாகியுள்ளதாக கூறுகிறார்.
 
"இந்த தொகை கிட்டத்தட்ட எனது ஆறு ஆண்டு கால சேமிப்பாகும். இந்த பணம் இருந்திருந்தால் புதிய தொழில் தொடங்குவது, வீடு வாங்க முன்பணம் கொடுப்பது என ஏதாவது திட்டமிட்டிருக்கலாம். ஆனால் அதை விட குழந்தை பெற்றல் முக்கியம் என்பதால் அதற்கு தான் முன்னுரிமை. ஐந்து முறை IUI, மற்றும் மூன்று முறை IVF சிகிச்சைகள் எடுத்துக் கொண்டுள்ளோம்.
 
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த சிகிச்சையும் எடுக்கவில்லை. தற்போது அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை தொடங்குவது என்னைப் போன்றவர்களுக்கும் என்னை விட வருவாய் குறைந்தவர்களுக்கும் உதவியாக இருக்கும்" என்கிறார்.