1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (14:35 IST)

மூளையை திண்ணும் நுண்ணுயிரி `நெக்லீரியா ஃபோலெரி` குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

வீடுகளுக்கு செல்லும் குழாய் தண்ணீரில் மூளைக்குள் சென்று உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் பயன்பாடு குறித்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள லேக் ஜாக்சன் பகுதிவாழ் மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

முன்னதாக, இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மூளையில் தொற்றுநோயை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு வழிவகுக்கக் கூடிய நெய்க்லீரியா ஃபோலெரி என்ற ஒரு வகை அமீபா தண்ணீரில் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அமெரிக்காவில் இதுபோன்ற தொற்றுகள் பரவுவது மிகவும் அரிதான ஒன்று. அதாவது, 2009 முதல் 2018க்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் இதுபோன்று 34 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
 

இந்த நிலையில், நீர் விநியோக கட்டமைப்பை முற்றிலும் கிருமிநீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அது எத்தனை நாட்கள் எடுக்குமென்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று, டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எட்டு பகுதிகளை சேர்ந்த மக்கள், கழிவறை பயன்பாட்டை தவிர்த்து வேறெதற்காகவும் குழாய் தண்ணீரை பயன்படுத்த வேண்டாமென்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். பிறகு, இந்த எச்சரிக்கை லேக் ஜாக்சன் தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது.

எனினும், லேக் ஜாக்சன் பகுதிவாழ் மக்களும் தங்களது வீடுகளில் வரும் குழாய் தண்ணீரை குடிப்பதற்கு முன்னதாக நன்றாக கொதிக்க வைத்துவிட்டு பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, மக்கள் குழாய் தண்ணீரை பயன்படுத்தி குளிக்கும்போது அது மூக்குக்குள் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

இந்த நுண்ணுயிரி தாக்குதலால் குழந்தைகள், வயதானவர்கள், போதிய நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் உள்ளிட்டோர் மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய அபாயத்தில் உள்ளதாக உள்ளூர் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும், குழாய் நீர் விநியோக கட்டமைப்பை முற்றிலும் கிருமிநீக்கம் செய்யும் பணிகள் முடிவுற்றதும், மீண்டும் நீர் பரிசோதனையை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், லேக் ஜாக்சன் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் நெய்க்லீரியா ஃபோலெரி நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிறகு, இதுதொடர்பான விசாரணை தொடங்கப்பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெய்க்லீரியா ஃபோலெரி எங்கெல்லாம் காணப்படுகிறது?

நன்னீரில் இயற்கையாகவே உருவாகும் நெய்க்லீரியா ஃபோலெரி நுண்ணுயிரிகள், அவ்வப்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் கண்டறியப்படுகின்றன. பொதுவாக இதுபோன்ற அசுத்தமான நீர் மூக்கு வழியாக உடலில் நுழைந்து பின்னர் மூளைக்குச் செல்லும்போது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பொதுவாக தொற்று நுண்ணுயிரிகள் காணப்படும் நீச்சல் குளத்திற்கு செல்லும்போதோ, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நன்னீரில் குட்டிக்கரணம் அடிக்கும்போதும் இதனால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அசுத்தமான தண்ணீரை பருகுவதன் மூலம் இந்த தொற்று ஒருவருக்கு ஏற்படாது என்றும், தொற்று பாதித்த ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நெய்க்லீரியா ஃபோலெரி நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், குமட்டல், வாந்தி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் ஒரே வாரத்தில் உயிரிழந்துவிடுவர்.

முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலும் இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. அப்போது, மக்கள் குழாய் தண்ணீர் மூக்கிற்குள் செல்லாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.