1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (14:59 IST)

வெறும் கொத்தமல்லி பயிரிட்டு 12 லட்சம் ரூபாய் சம்பாதித்த விவசாயி

குஜராத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஒரு விவசாயி தனது தலையில் ரூபாய் நோட்டுக் கட்டுகளை வைத்து தூக்கி செல்வது மாதிரியான புகைப்படம், சமூக ஊடகங்களில் வைரலாகியது.

அதில், நாசிக் மாவட்டத்தில் உள்ள விநாயக் ஹெமடே என்ற விவசாயி, தனது நான்கு ஏக்கர் நிலத்தில் கொத்தமல்லி தழை பயிரிட்டு, அதனை 12.51 லட்சம் ரூபாய் விற்றார் என விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் சரியானதுதான், ஆனால் புகைப்படம் தவறானது.

கொத்தமல்லியை ரூ. 12.51 லட்சத்திற்கு விற்ற உண்மையான விநாயக் ஹெமாடேவை பிபிசி குஜராத்தி சேவை சந்தித்து பேசியது.

அவருடைய விவசாய அனுபவத்தை குதூகலமாக அவர் பகிர்ந்து கொண்டார்.

"நான் ஒவ்வொரு ஆண்டும் கொத்தமல்லி விதைகளை விதைப்பேன். நான்கு ஏக்கர் அல்லது ஐந்து ஏக்கர். வெவ்வேறு நிலங்களில் பயிரிடுவேன். கடந்த ஆண்டு குறைந்த லாபமே கிடைத்தது. இந்த ஆண்டு ஒரு ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டேன். ஒரு சிறியளவு லாபம் கிடைத்ததால் தொடர்ந்து கொத்தமல்லி பயிரிடலாம் என்று நினைத்தேன். இயற்க்கை எப்போதும் உங்களுடன் இருக்கும் என்று சொல்ல முடியாது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் பயிரிட்டேன். நல்ல லாபம் கிடைத்தது" என்கிறார் விநாயக்.

கடந்த சில ஆண்டுகளாகவே இவர் கொத்தமல்லி பயிரிட்டு வருகிறார். அத்துடன் பால் பன்னையும் தொடங்கினார். அதில் வரும் லாபத்தை விவசாயத்தில் பயன்படுத்தினார்.
தற்போது விநாயக்கிடம் ஏழு மாடுகள் இருக்கின்றன.

கொத்தமல்லி விதையை பிரதான விதையாக பயன்படுத்துவது ஏன்?

"அதிக மழை பெய்தது. இங்கிருக்கும் விவசாயிகள் தக்காளி, கத்திரிக்காய், முட்டை கோஸ் ஆகியவற்றை பயிரிட்டிருந்தார்கள். அதனால் நான் கொத்தமல்லியை மட்டும் பயிரிட முடிவெடுத்தேன்" என்று அவர் கூறுகிறார்.

"மத்திய பிரதேசம், கோலாபூர், மும்பை, இந்தோர் அல்லது குஜராத் போன்ற இடங்களில் கனமழை பெய்தது. அதனால் கொத்தமல்லி பற்றாக்குறை ஏற்படும் என்பதை கணிக்க முடியும். அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்" என விநாயக் குறிப்பிடுகிறார்.

விவசாய முறை, கடும் உழைப்பு, சரியான அளவு மழை ஆகியவை அறுவடைக்கான விலையை நிர்ணயிக்கும். அதே சமயம் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது. விநாயக் ஹெமாடேவிற்கு அந்த அதிர்ஷ்டம் இருந்தது.

"சில நாட்களுக்கு முன்பு இன்டோர் மற்றும் டெல்லியில் இருந்து சில வணிகர்கள் என்னை வந்து சந்தித்தனர். அவர்களுக்கு கொத்தமல்லி விநியோகம் செய்ய முடியுமா என்று கேட்டனர். நாங்கள் விலை குறித்து பேசினோம். நான் 15-16 லட்சம் ரூபாய் எதிர்ப்பார்ப்பதாக சொன்னேன். ஆனால் அவர்கள் தற்போதைய சந்தை விலையை கருத்தில் கொண்டால் அது மிகவும் அதிகம் என்று கூறினர். சரி என்று அவர்களையே விலை சொல்ல சொன்னேன். அவர்கள் 12.51 லட்சம் ரூபாய் கூறினார்கள். நான் ஒப்புக் கொண்டேன்" என்கிறார் விநாயக்.

ஆனால், கொத்தமல்லியை மட்டும் பயிர் செய்யப் போகிறேன் என்று கூற, அவரது குடும்ப உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை.

"என் மனைவியும் மகன்களும் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்டனர். சீக்கிரம் அழுகிவிடும் என்பதால், எனக்கு இழப்பு ஏற்படும என்றனர். ஆனால், நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். யாராலும் எதிர்காலத்தையும் சந்தை விலைகளையும் சரியாக கணிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட விவசாயப் பொருளுக்கு எப்போது பற்றாக்குறை ஏற்படும் என்பதையும் கூற முடியாது என்று அவர்களிடம் வாதிடுவேன்." என்கிறார்.

விநாயக்கின் லாபத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் பலரும் கொத்தமல்லியை பிரதானமாக பயிரிட்டு வருகின்றனர்.

ஆனால், இவரது வெற்றி வேறொருவரது புகைப்படத்துடன் வைரலானது, விநாயக்கிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

"கோபம் என்றால், இது காரணமே இல்லாமல் விவசாயிகளை மரியாதைக் குறைவாக நடத்துவது போல இருக்கிறது. இது போன்று நடக்கக்கூடாது. யாரும் இதுபோன்ற நோட்டுக்கட்டுகளை கொடுக்க மாட்டார்கள். யாரும் அதை தலையில் வைத்து தூக்கி செல்ல மாட்டார்கள். முட்டாள்தனமாக இருக்கிறது. விவசாயிகளான நாங்கள் கடினமாக உழைக்கிறோம். அதை வைத்து வாழ்க்கிறோம். இந்த உணர்ச்சி எங்களுக்கு முக்கியமானது" என்று விநாயக் ஹெமடே தெரிவித்தார்.