ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 2 டிசம்பர் 2020 (17:46 IST)

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்குமா?

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து வழங்கும் நோக்கம் இந்திய அரசுக்கு இல்லை. 
 
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து வழங்கும் நோக்கம் இந்திய அரசுக்கு இல்லை என்று செவ்வாயன்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்குவது குறித்து அரசு ஒருபோதும் பேசவில்லை என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்றைய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார்.
 
கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க அரசு விரும்புவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
 
மக்கள் தொகையில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்தால், ஒட்டு மொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
தடுப்பு மருந்தின் செயல்திறன் சிலரது உடலில் 60 சதவீதமாக இருக்கும். சிலரது உடலில் 70 சதவீதமாகவும் இருக்கும் இந்த வேறுபாடு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வது குறித்து மக்களிடையே தயக்கத்தை உண்டாக்கலாம் என்றும் அவர் கூறினார்.
 
மக்கள் தொகையில் ஒரு சிறிய குழுவினருக்கு மட்டுமே தடுப்பு மருந்து வழங்குவது தொடங்கப்படும் என்பதால் முகக் கவசம் அணிவதைக் கட்டாயம் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.