செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (11:33 IST)

இந்தியா - வங்கதேசம்: இரு நாட்டு நல்லுறவில் சிக்கலை ஏற்படுத்தும் ஹில்சா மீன் ஏற்றுமதித் தடை

Hilsa Fish

இந்தியாவின் மேற்கு வங்கத்திலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள், வரும் அக்டோபர் மாதம் அந்த மாநிலத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குப் பிடித்த மீன் வகைகளுள் ஒன்றான ஹில்சா மீனின் வரத்தில் அவர்கள் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும்.

 

 

உலகின் மிகப் பெரிய ஹில்சா மீன் உற்பத்தியாளரான வங்கதேசம், இந்தியாவுக்கு ஹில்சா ஏற்றுமதி செய்வதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கியதும், அதன் ஏற்றுமதியைத் தடை செய்ததுமே இதற்குக் காரணம்.

 

"டாக்காவில் புதிய இடைக்கால அரசு பதவியேற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதிக விலைக்கு விற்கப்படும் இந்த மீன், வங்கதேச மக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே அரசு இந்த முடிவிற்கு வந்தது," என்று வங்கதேச மீன்வள மற்றும் கால்நடை அமைச்சகத்தின் ஆலோசகர் ஃபரிதா அக்தர் கூறுகிறார்.

 

க்"தடை இருக்கும்போதிலும், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் மீன்கள் ஏற்றுமதியாகின்றன. ஆனால் இம்முறை ஹில்சா மீன் வங்கதேசத்தின் எல்லை கடந்து ஏற்றுமதி செய்யப்படுவதை அனுமதிக்கமாட்டோம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

 

ஹில்சா வகை மீன் வங்கதேசத்தின் தேசிய மீனாக இருந்தாலும் அது ஓர் ஆடம்பர மீனாகக் கருதப்பட்டது. பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே இதை வாங்கி உண்ண முடிந்தது. ஏழைகளால் இந்த மீனை வாங்க முடியவில்லை.

 

"இதற்கு முன் இருந்த வங்கதேச அரசு துர்கா பூஜையின்போது இந்த மீனின் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கிவிடும். இதை அவர்கள் ஒரு பரிசாகக் கருதினர். வங்கதேசத்தில் தற்போது உள்ள சூழலில் நாங்கள் ஒரு பரிசை வழங்க வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். இந்தியாவிற்கு அதிக அளவில் இந்த மீனை ஏற்றுமதி செய்தால், வங்கதேச மக்கள் இந்த மீனைச் சாப்பிட முடியாது", என்று ஃபரிதா அக்தர் தெரிவித்தார்.

 

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு ஹில்சா மீன் ஏற்றுமதியைக் கொண்டு இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி வந்தது. திருவிழாக் காலங்களின்போது அவர் இந்தியாவிற்கு அடிக்கடி மீன்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பார். ஆனால் தற்போது எடுக்கப்பட்ட முடிவு ஷேக் ஹசீனாவின் நடவடிக்கைகளுக்கு மாறாக உள்ளது.

 

ஷேக் ஹசீனா மேற்கு வங்கத்தின் முதல்வரான மமதா பானர்ஜிக்கு பலமுறை ஹில்சா மீனை அனுப்பி வைத்துள்ளார். இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே நீண்ட காலமாக நடந்து வரும் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், 2017ஆம் ஆண்டு அப்போதைய இந்திய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு 30 கிலோ ஹில்சா மீனை பரிசாக வழங்கினார்.

 

வங்கதேசத்தில் பல வாரங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அந்நாட்டை விட்டு வெளியேறினார். அவர் ஆரம்பத்தில் இந்தியாவில் சிறிது காலம் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சம் கோருவதற்கான அவரது முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துள்ளன.

 

இந்தியாவில் ஷேக் ஹசீனா தொடர்ந்து இருப்பது, டாக்காவில் உள்ள புதிய இடைக்கால அரசுடன் வலுவான உறவை உருவாக்குவதற்கான இந்திய அரசின் முயற்சிகளைக் கடுமையாக்கியுள்ளது.

 

இந்தியாவை பொறுத்தவரை, எல்லைப் பாதுகாப்பு (குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களின் எல்லைகள்) போன்ற காரணங்களுக்காக ஒரு முக்கிய நட்பு நாடக இருக்கிறது.

 

புதிய இடைக்கால அரசு ஒரு நல்லெண்ணச் செயலாக ஹில்சா மீனின் ஏற்றுமதியை அனுமதிக்குமா என்ற கேள்விக்கு, "பிற எல்லா வழிகளைக் கொண்டும் நாங்கள் இந்தியாவின் மீதுள்ள எங்கள் நல்லெண்ணத்தை வெளிக்காட்டி இருப்போம். இந்தியா எங்கள் நட்பு நாடு. ஆனால் எங்கள் நாட்டு மக்களின் நன்மைகளைப் பறிகொடுத்து நாம் எதையும் செய்யக்கூடாது," என்று ஃபரிதா அக்தர் பதில் அளித்தார்.

 

"நல்லெண்ணத்தை வெளிக்காட்டுவது என்பது இதிலிருந்து வேறுபட்ட ஒன்று" என்கிறார்.

 

ஹில்சா வகை மீன் உற்பத்தில் வங்கதேசம் முன்னணி நாடாக இருக்கின்றது. ஹெர்ரிங் வகை மீனைப் போலவே ஹில்சா மீன்கள் இருக்கும். அவை ஆறுகள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் அதிக அளவில் செழிப்பாக வளரும்.

 

வங்கதேசத்தின் மொத்த மீன் உற்பத்தியில் இந்த வகை மீன் மட்டும் சுமார் 12% பங்கு வகிக்கிறது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% பங்களிக்கிறது.

 

ஆண்டுதோறும் மீனவர்கள் சுமார் 6 லட்சம் டன்கள் ஹில்சா வகை மீன்களைப் பிடிக்கிறார்கள், அதில் பெரும்பாலான மீன்கள் கடலில் இருந்து வருகின்றன. 2017ஆம் ஆண்டு, ஹில்சா மீனுக்காக வங்கதேசத்திற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

 

இதற்கு முன்பாக, துர்கா பூஜையின்போது ஆண்டுதோறும் 3,000-5,000 டன்கள் ஹில்சா மீனை ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு அனுமதித்ததாக மூத்த மீன்வள அதிகாரி நிருபேந்திர நாத் பிஸ்வாஸ் டெய்லி ஸ்டார் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

 

"ஆனால், அந்நாட்டில் நிலவும் மீன் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ஹில்சா மீன் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது", என்று அவர் கூறினார்.

 

ஆனால், ஏற்றுமதித் தடை இருந்தபோதிலும் உள்ளூர் சந்தையில் ஹில்சா மீனின் விலை உயர்ந்துள்ளதாக வங்கதேச ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

 

அங்கு 1.5 கிலோ ஹில்சா மீன் சுமார் 1,800 டாக்காவிற்கும் (வங்கதேச பணம்), 1.2 கிலோ 1,600 டாக்காவிற்கும், மற்றும் ஒரு கிலோ 1,500 டாக்காவிற்கும் விற்கப்படுகின்றது. இந்த விலை கடந்த ஆண்டைவிட 150-200 டாக்காகள் அதிகமாக இருப்பதாக மீன் வியாபாரிகள் கூறுகின்றனர்.

 

ஹில்சா மீன்கள் குறைந்த அளவில் கிடைப்பதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

"கடந்த மூன்று மாதங்களில், நாங்கள் ஐந்து முறை கடலுக்குச் செல்ல முயன்றோம். ஆனால் சீரற்ற வானிலை காரணமாக கரைக்குத் திரும்ப வேண்டியிருந்தது" என்று மீனவர் ஹொசைன் மியா கூறினார்.

 

இந்தியா, வங்கதேச எல்லைகளில் வாழும் வங்காள மக்களுக்கு ஹில்சா மீன் ஒரு முக்கிய உணவாக இருக்கின்றது. இதில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது பலரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும்.

 

இந்த மீன் பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் கடுகு கொண்டு அரைத்த விழுது சேர்த்து வேகவைக்கப்படுகிறது அல்லது மசாலா பொருட்கள் கொண்ட விழுது சேர்த்து வறுக்கப்படுகிறது.

 

வங்காள-அமெரிக்க உணவு வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான சித்ரிதா பானர்ஜி இந்த மீனைப் பற்றிப் பாராட்டிய பல எழுத்தாளர்களில் ஒருவர்.

 

"வங்காள எழுத்தாளர்கள் இந்த மீனை மீன்களின் இளவரசன் என்று விவரித்துள்ளனர். ஆனால் இந்த மீனுக்கே உரிய தனித்துவமான சுவையைத் தாண்டி, வங்காள உணவுகளுக்கே உரித்தான தனிச் சிறப்பு மிக்க பொருட்கள் கொண்ட கலவையினாலே இந்த மீன் வங்காள உணவின் ஒரு சிறப்பான சின்னமாக இருக்கின்றது", என்று அவர் நேர்காணல் ஒன்றில் கூறினார்.

 

"அதன் மிருதுவான சதை மற்றும் நேர்த்தியான மனம், சுவை காரணமாக இந்த மீன் எண்ணற்ற உணவு வகைகளில் பயன்படுத்தப்படுவதாக" கூறுகிறார் சித்ரிதா பானர்ஜி.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.