செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (20:32 IST)

எல்லையில் ராணுவ படைகளை திரும்ப பெற சம்மதித்த இந்தியா- சீனா!!

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சனைக்குரிய டோக்லாம் பகுதியில் இருந்து இரு நாட்டு படைகளையும் பரஸ்பரம் திரும்பப் பெற இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.


 
 
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரு நாடுகளின் தூதரக அளவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
இரு தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, டோக்லாம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு நாட்டு படையினரும் திரும்பப் பெறும் பணிகள் தொடங்கியுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், "டோக்லாமில் உள்ள படைகளையும் தளவாடங்களையும் இந்தியா திரும்பப் பெறவுள்ளது.  சீனாவும் அதன் வரலாற்று எல்லை உடன்பாட்டின்படி, இறையாண்மை உரிமைகளின்படி செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே டோக்லாமில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக மோதல் போக்கு நிலவி வந்தது.
 
ஜுன் மாத மத்தியில், இந்தியாவில் டோக்லாம் என்றும், சீனாவில் தொங்லாங் என்று அறியப்படும் பீடபூமி வழியாக எல்லையில் சாலையை விரிவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தபோது சமீபத்திய மோதல் தொடங்கியது.
 
இந்த சாலை பணிகள் நிறைவுபெற்றுவிட்டால், இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் கோழியின் கழுத்து எனப்படும் 20 கிலோமீட்டர் (12 மைல்) நிலப்பரப்பை சீனா எளிதாக சென்றடைய வழிசெய்யும் என்பதால் இந்தியா கவலையடைந்துள்ளது.
 
இந்திய பெருநிலப்பகுதியின் வட கிழக்கில் அமைந்துள்ள 7 மாநிலங்களை இந்த பகுதிதான் இணைக்கிறது. இந்த முட்டுக்கட்டை நிலை துவங்கியதிலிருந்து, இரு தரப்பினரும் தங்களது படைகளை குவித்து வருவது மட்டுமின்றி, எதிர் தரப்பினரை பின் வாங்குமாறு வற்புறுத்தி வந்தனர்.
 
இந்த பகுதிக்கு சீனாவும் பூட்டானும் பரஸ்பரம் உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்த முட்டுக்கட்டை நிலை நெருக்கடியாக மாறும் நிலை இருந்தது. இந்த நிலையில் இந்தியாவும், சீனாவும் ராஜீய அளவில் பேச்சு நடத்தி படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளன.