புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 9 மே 2020 (08:55 IST)

கொரோனா வைரஸ் காலத்திலும் அமேசானில் அதிகரித்த காடழிப்பு

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக போராடி வரும் நிலையில், பிரேசிலிலுள்ள அமேசான் மழைக்காடுகளில் கடந்த மாதம் பெரியளவில் காடழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது.

அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது மற்றும் சுரங்கங்களை தோண்டுவது உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் அப்பகுதியில் ராணுவத்தினரை நிலைநிறுத்தும் திட்டத்தை பிரேசில் அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் அமேசானில் காடழிப்பு செயல்பாடுகள் 64 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அமேசானில் சட்டவிரோத காடழிப்பு செயல்பாடுகள் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் அதிபர் சாயீர் போல்சனாரூவின் கொள்கைகளும் சொல்லாட்சிகளும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எனினும், தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் அவர், அமேசானில் சட்டவிரோத செயல்பாடுகளை தடுப்பதற்காக ஆயுதமேந்திய படைகள் குவிக்கப்படும் என கடந்த வாரம் அறிவித்தார்.