1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (21:33 IST)

ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: '100 ஊடகத்தினரும் வந்து ஒரே கேள்வியை கேட்க வேண்டுமா?'

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட பெண்ணின் தங்கை, ஒரே கேள்வியை 100 ஊடகங்கள் தங்களிடம் கேட்டு, ஏற்கனவே மனவருத்தத்தில் உள்ள தங்களை மேலும் காயப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
27 வயதான பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை ஷாத் நகர் அருகில் போலீசார் அவரது உடலை கண்டெடுத்தனர்.
 
உயிரிழந்த பெண் தாம் இன்னலுக்கு ஆளாக்கப்போவதை உணர்ந்து கடைசியாக தனது தங்கையிடம்தான் அலைபேசி மூலம் உரையாடினார். பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து:
 
உங்கள் சகோதரியின் இழப்பு பற்றி?
 
இந்த நிகழ்வு துரதிர்ஷ்டமானது. போன உயிர் திரும்ப கிடைக்க போவதில்லை. இதுபோல யாருக்கும் நிகழக் கூடாது. எனது அக்காவுக்கு இவ்வாறு நடந்ததை நினைக்கும்போது தாங்கிகொள்ள முடியவில்லை. அவளை கொடூரமாக கொலை செய்துள்ளனர். வேறு யாருக்கும் இவ்வாறு நிகழக்கூடாது. எல்லோரும் எப்போதும் விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்..
 
எனது அக்கா பயமாக இருக்கிறது என்று என்னிடம் பயமாக சொன்னபோதும் நான் அதன் தீவிரத்தை புரிந்துகொள்ளவில்லை. இதுபோன்ற நிலைமையை சாதாரணமாக எடுத்துகொள்ள வேண்டாம். என்னை போல லேசாக, எடுத்து கொண்டு, நிலைமையின் தீவிரத்தை புறந்தள்ளிவிட வேண்டாம். வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என ஊகித்து கூறிவிட முடியாது.
 
நிலைமையை தீவிரமாக நான் எடுத்திருந்தால் எனது அக்காவை நான் காப்பாற்றியிருக்கலாம். யாரையும், உங்களுக்கு தெரிந்தவரையும் நம்ப வேண்டாம். இவ்வாறு நான் கூறக் கூடாது என எனக்கு தெரியும். பிறந்த நாள் விருந்துக்கு சென்ற பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை கேள்விப்பட்டு நான் இவ்வாறு கூறுகிறேன்.
 
உங்களுக்கு தெரிந்தவர்களோடு இருக்கும்போதும் மிகவும் கவனமாக இருங்கள். அடுத்த கணம் என்ன நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இரவு எங்காவது சென்றால் உங்களுக்கு தெரிந்த யாரிடமாவது கூறிவிட்டு செல்லுங்கள்.
 
அவசர போலீஸை கூப்பிட்டிருக்கலாமே?
 
அவசர போலீஸூக்கு 100ல் அழைத்திருக்கலாமே என்று அனைவரும் கூறுகிறார்கள். பயந்த சூழ்நிலையில் எனது அக்கா 100-யை அழைத்திருக்க வேண்டும் என்று நான் கூற முடியும். அவர் இருந்த நிலைமை நமக்கு தெரியாது. நாம் அத்தகைய நிலைமையில் இருக்கவில்லை. அத்தகைய நேரத்தில் 100-யை அழைத்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கில்லை.
 
ஆனால், ஏதோ தவறு நடக்க போகிறது என உணர்ந்தால் காவல்துறையினரை அழையுங்கள். இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்திருந்தால் நான் கூட காவல்துறையை அழைத்திருப்பேன்.
 
குறிப்பாக பெண்கள் வெளியே போகிறபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுங்கள். நமக்கு ஏதாவது ஒன்று நடக்கும் வரை என்னதான் நடக்க போகிறது என்று நினைக்கிறோம். இப்போது பல அலைபேசி செயலிகள் இருக்கின்றன. செல்லும் இடம் பற்றி உறவினர்களுக்கு தெரிவியுங்கள். தனிமையான எந்தவொரு இடத்திற்கும் செல்லாதீர்கள்.
 
அரசு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி?
 
இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழாத வண்ணம் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். இந்த உலகம் இவ்வளவு கொடூரமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
 
இன்றைய நாட்களில் மனிதாபிமானம் இல்லை. கல்வி அமைப்பில் அறநெறிகளை இணைக்க வேண்டும்; அறிவு உள்ளது. ஆனால் ஒழுக்கம் இல்லை. கல்வி ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும். எது சரி, தவறு என்பதை சீர்தூக்கி பார்க்க அறிவு வேண்டும். எனவே கல்வியில் அறநெறி இணைக்கப்பட வேண்டும். ஏதாவது படித்து, வேலையில் அமர்ந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கல்வி இல்லாமலேயே அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
 
ஊடகங்கள் எவ்வாறு செயல்பட்டன?
 
ஊடகங்களை குறை சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் என்னால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. அக்காவும், நானும் இறுதியாக பேசிய ஒலிப்பதிவு வெளியாகிய பின்னர், அவரோடு என்ன பேசினீர்கள் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம். அதுதான் வெளிப்படையாக உள்ளதே. எல்லோருக்கும் தெரிகிறதே.
 
உணர்வுகளைத் தூண்டுவதற்காக இவ்வாறு செய்கிறார்கள். ஒரு குடும்பத்தில் இத்தகைய ஓர் இழப்பு ஏற்படுகிறது என்றால், அது ஈடுசெய்ய முடியாத இழப்பு.
 
உயிரிழந்த கால்நடை மருத்துரின் இருசக்கர வாகனம்.
இத்தகைய நிகழ்வு நடைபெறுகிறது என்றால், இதற்கான காரணத்தை வெளிகொணர முயலுங்கள். பின்னணிகளை அலசுங்கள். என்ன செய்யலாம் என சொல்லுங்கள்.
 
இத்தகைய சம்பவத்தில் இருந்து சமூகம் என்ன கற்று கொள்ள வேண்டும். உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் அல்லாமல், பக்குவபட்ட முறையில் அதனை சொல்ல வேண்டும். ஒரே கேள்வியை, ஒரே விஷயங்களை செய்தியாளர்கள் கேட்கிறார்கள். இவ்வாறு கேட்டு அனைவரையும் அசௌகரியமாக உணர செய்கிறீர்கள்.
 
100 ஊடகத்தினரும் வந்து ஒரே கேள்வியை கேட்க வேண்டுமா? நான் அழுது புலம்புவதை படம் பிடித்து அதனை தொலைக்காட்சியில் போடுவதற்கு விரும்புகிறீர்கள். உணர்வுகளைத் தூண்ட எண்ணுகிறீர்கள்.
 
ஏற்கெனவே நொந்து போயுள்ளோம். மீண்டும் மீண்டும் இந்த இழப்பை உணர செய்து, அதிக வலியை தருகிறீர்கள். விழிப்புணர்வை வழங்கி சமூகத்தை மேலும் பாதுகாப்பாக மாற்ற முயலுங்கள்.