வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 26 மார்ச் 2018 (13:45 IST)

புற்றுநோய்க்கு உடல் பருமனும் ஒரு காரணம் - அதிர்ச்சி தரும் ஆய்வு

பிரிட்டனில் புகை பிடித்தல் புற்றுநோய்க்கு காரணமாவது குறைந்து, அதிக எடை அல்லது உடல் பருமன் காரணமாக புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.6.3 சதவீதம் பேருக்கு அதிக எடையால் புற்றுநோய் உருவாகி உள்ளது என பிரிட்டனின் புற்றுநோய் ஆய்வு அமைப்பு கண்டுபிடித்திருக்கிறது. 2011ம் ஆண்டில் இருந்த 5.5 சதவீதத்தை விட இது அதிகமாகும்.இந்நிலையில், புகை பிடித்தல் மூலம் வருகின்ற புற்றுநோய் விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.



உடல் பருமனால் வருகின்ற சுகாதார அச்சுறுத்தலை சமாளிக்க அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.ஸ்காட்லாந்தில் 41.5 சதவீதம், வட அயர்லாந்து 38 சதவீதம், வேல்ஸ் 37.8 சதவீதம் மற்றும் இங்கிலாந்து 37.3 சதவீதம் என பெரிய விகிதங்களில் தடுக்கக்கூடிய புற்றுநோய் காரணங்கள் இருந்ததை பிரிட்டன் புற்றுநோய் ஆய்வு அமைப்பு அறிய வந்துள்ளது.

19.4 சதவீதத்தில் இருந்து 2011ம் ஆண்டு 15.1 சதவீதத்திற்கு குறைந்திருந்தாலும், தடுக்கக்கூடிய புற்றநோயின் காரணியாக, புகை பிடிப்பது பிரிட்டன் முழுவதும் இருந்து வந்தது.அதிக எடையோடு அல்லது உடல் பருமனாக இருப்பது இரண்டாவது காரணியாகவும், சூரியன் மற்றும் சூரிய படுகைகளிடம் இருந்து வரும் புறஊதா கதிர்வீச்சுக்கு ஆளாவது மூன்றாவது காரணியாகவும் இருந்தன.

யாராவது உடல் பருமனாக இருந்தால், அவர்களின் உடல் நிறை குறியீடு (பிஎம்ஐ) கணக்கிட்டு நோயறிதல்தான் தரமான வழிமுறையாகும்.

ஒருவரின் உயரத்திற்கு தக்க ஆரோக்கியமான எடையை அவர் கொண்டிருக்கிறீர்களா என்று இதில் அளவிடப்படுகிறது.உடல் நிறை குறியீட்டு எண் 25க்கு மேலாக இருந்தால், நீங்கள் அதிக எடை உடையவர். இந்த எண் 30க்கு மேலாக இருந்தால், சில விதிவிலக்குகள் இருந்தாலும் நீங்கள் உடல் பருமன் உடையவர்கள்.

அதிக அளவு புறஊதா கதிர்வீச்சுக்கு உள்ளாகியிருந்தால், ஆண்டுக்கு 13,600 பேருக்கு மெலனோமா தோல் புற்றுநோய் அல்லது அனைத்து புற்றுநோய் வகைகளில் 3.8 சதவீதம் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது.மது அருந்துவது மற்றும் நார்ச்சத்து மிகவும் குறைவாக சாப்பிடுவது ஆகியவை புற்றுநோய்களை தடுக்கக்கூடிய பிற காரணிகளாகும்.



இருப்பினும், புற்றுநோயை தடுப்பதற்கான காரணிகளின் விகிதாச்சாரம் 42.7 சதவீதத்தில் இருந்து 37.7 சதவீதமாக சரிவடைந்திருப்பது ஒட்டுமொத்த பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புகை பிடிப்பதை தடுப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் வேலை செய்துள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், உடல் பருமனால் அதிகரித்து வருகின்ற பிரச்சனையை சமாளிக்க அதிக பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது என்று பிரிட்டனின் புற்றுநோய் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.உடல் பருமன் தற்போதுள்ள மிக பெரிய சுகாதார ஆபத்தாக உள்ளது. இதனை தடுக்க எதாவது செய்யாவிட்டால், இந்தப் பிரச்சனை இன்னும் மோசமாகும் என்று பிரிட்டனின் புற்றுநோய் தடுப்பு ஆய்வகத்தின் நிபுணரான பேராசிரியர் வின்டா பௌல்டு தெரிவித்திருக்கிறார்.

"இரவு 9 மணிக்கு முன்னால் ஒளிப்பரப்பாகும் 'ஜங் புட்' தொலைக்காட்சி விளம்பரங்களை தடை செய்வது, அவசியமான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் முக்கியமானதொரு பகுதியாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.லண்டனிலுள்ள புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் புற்றுநோய் உயிரியலாளரான பேராசிரியர் மெல் கிரியவஸ், புற்றுநோய் பலவற்றை தடுத்துவிட முடியும் என்ற கருத்துக்கு இந்த ஆய்வு சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.


"உடல் பருமனை தவிர்ப்பதனால், புற்றுநோய் ஏற்படும் விகிதம் குறையுமா என்பது தெரியவில்லை. ஆனால், அவை பெரும்பாலும் கணிசமான அளவுக்கு குறையும்" என்று கிரியவஸ் குறிப்பிட்டுள்ளார்.

"இளைஞர்களிடம் காணப்படும் உடல் பருமனின் தற்போதைய அதிக விகிதத்தை வைத்து பார்த்தால், மருத்துவ துறைக்கு அப்பாற்பட்ட மிக பெரிய சமூக சவாலை இந்த ஆய்வு குறிப்பிட்டு காட்டுகிறது" என்று தெரிவிக்கிறார் பேராசிரியர் கிரியவஸ்.